நடிகை விவகாரத்தில் மத்திய அமைச்சரின் மகனுக்கு பிடிவாரண்ட்: கைது செய்ய பெங்களூர் போலீஸார் தீவிரம்

By இரா.வினோத்

கன்னட நடிகை மைத்ரி அளித்த பாலியல் பலாத்கார புகாரை விசாரித்த பெங்களூர் நீதிமன்றம் மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடாவை கைது செய்ய பிடிவாரண்ட் பிற‌ப்பித்துள்ளது.

இதைத் தொடர்ந்து பெங்களூர் போலீஸார் 2 தனிப்படைகள் அமைத்து அவரைத் தேடி வருகின்ற‌னர்.

கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி கன்னட திரைப்பட நடிகை மைத்ரி, மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடா தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸில் புகார் அளித்தார்.இதனையடுத்து கார்த்திக் மீது இந்திய தண்டனை சட்டம் 376, 420, 406 ஆகிய பிரிவுகளின் கீழ் பாலியல் ப‌லாத்காரம், மோசடி செய்தது, குற்றத்தை மறைக்க முயன்றது ஆகிய குற்றங்களுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ந‌டிகை மைத்ரியிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்தியபோது, அவர் கார்த்திக் உடன் இருப்பது போன்ற புகைப்படங்கள், வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களையும் கொடுத்தார். எனவே மைத்ரியின் புகாருக்கு விளக்கம் அளிக்குமாறு கார்த்திக் கவுடாவிற்கு போலீஸார் இரு முறை சம்மன் அனுப்பினர்.ஆனால் அவர் போலீஸாரின் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

பிடிவாரண்ட்

கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி கார்த்திக் கவுடா முன் ஜாமீன் கோரி பெங்களூர் மாநகர அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அம்மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. நடிகை மைத்ரி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். கார்த்திக் கவுடா தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு பிடிவாரண்ட் பிற‌ப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடாவை கைது செய்வதற்காக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குழுவை சேர்ந்த போலீஸார் அவரைத் தேடி வியாழக்கிழமை மங்களூர் விரைந்தனர்.

இன்னொரு குழுவைச் சேர்ந்த போலீஸார் பெங்களூரிலும் மைசூரிலும் கார்த்திக்கை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கார்த்திக் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்நிலையில் மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவை கண்டித்தும் அவரது மகன் கார்த்திக் கவுடாவை கைது செய்யக்கோரியும் இளைஞர் காங்கிரஸார் பெங்களூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெண்ணுக்கு நீதி வழங்காத சதானந்த கவுடா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

சதானந்த கவுடாவின் சதி: மைத்ரி

இதனிடையே கன்னட திரைப்பட இயக்குநர் ரிஷி பெங்களூர் மாநகர 8-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடிகை மைத்ரிக்கு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “நான் இயக்கிய `சூர்யா தி கிரேட்' படத்தில் நடிகை மைத்ரி கவுடா கதாநாயகியாக நடித்தார். அப்போது எனக்கும் அவருக்கும் காதல் ஏற்பட்டது. எனவே 2004 ஜூன் 17-ம் தேதி பெங்களூரில் உள்ள விடுதியில் திருமணம் செய்து கொண்டோம்.

என்னுடன் 4 மாதங்கள் குடும்பம் நடத்தினார். அதன் பின்னர் என்னுடைய 2 லட்சம் பண‌த்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். என்னைப் போல பலரை மைத்ரி ஏமாற்றியுள்ளார்.அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து நடிகை மைத்ரி கவுடா கூறுகையில், “இயக்குநர் ரிஷி சொல்வதெல்லாம் பொய். அவர் என்னைத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறும் ஆண்டில் எனக்கு வயது 16. அப்போது நான் படித்துக் கொண்டிருந்தேன். சதானந்த கவுடா மகன் மீது நான் புகார் அளித்திருப்பதால் என் மீது புதிய புகாரை சொல்கின்றனர். இதெல்லாம் அரசியல் பலமும் பண பலமும் மிக்க சதானந்த கவுடாவின் தூண்டுதலால் நடக்கிறது என நான் சந்தேகப்படுகிறேன். ரிஷி மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்வேன்'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தொழில்நுட்பம்

9 hours ago

சினிமா

10 hours ago

க்ரைம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்