சட்டவிரோத கடைகளை அகற்ற முயலும் ஐஏஎஸ் தமிழருக்கு சிக்கல்: உ.பி.யில் பாஜக கவுன்சிலர் மீது வழக்கு பதிவு செய்ததால் பதற்றம்; 144 தடை உத்தரவு அமல்

By ஆர்.ஷபிமுன்னா

உத்தரபிரதேச மாநிலத்தின் பரேலியில் சட்டவிரோதக் கடைகளை அகற்ற முயலும் தமிழரான ஐஏஎஸ் அதிகாரிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையில் அவர் பாஜக கவுன்சிலர் மீது வழக்கு பதிவு செய்ததால் உருவான பதற்றம் காரணமாக 144 தடை உத்தரவு அமலாக்கப்பட்டுள்ளது.

பரேலி நகர் மாநகராட்சியின் முதன்மை ஆணையராக பணியாற்றும் 2013 பேட்சின் ஐஏஎஸ் அதிகாரியாக இருப்பவர் என்.சாமுவேல் பால். சென்னையை சேர்ந்த தமிழரான இவர் உ.பி.யின் நேர்மையான இளம் அதிகாரிகளில் ஒருவராகப் பெயரெடுத்தவர். கடந்த மே 8-ம் தேதி இவர், பரேலியின் முக்கியப் பகுதியான இந்திரா நகரில் அமைந்துள்ள தற்காலிக கடைகளில் சோதனை நடத்தினார். இதில், பரேலி மாநகராட்சி அனுமதியுடன் 171 தற்காலிகக் கடைகளுக்கான நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் அருகில் அரசு அனுமதியின்றி அரசு நிலம் ஆக்கிரமித்து 122 கடைகள் அமைத்தது கண்டறியப்பட்டது. அவற்றை அகற்ற முயன்ற ஆணையர் சாமுவேல் முயன்றபோது அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தப் பிரச்சினை குறித்து விசாரிக்க பரேலியின் நகராட்சியர் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

கடந்த மே 15-ம் தேதி வெளியான விசாரணை அறிக்கையில், அப்பகுதி மாநகராட்சி பாஜக கவுன்சிலர் வினோத் செய்னி உதவியால் அக்கடைகள் சட்டவிரோதமாக அமைத்தது உறுதியானது. இதற்காக அவர் தலா கடைக்கு ரூ.25 லட்சம் வரை லஞ்சம் பெற்றதாகவும் தகவல் கிடைத்தது. அதன் மீது ஐபிசி 420, 406 உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வினோத் செய்னி, பரேலி வியாபாரிகள் சங்கத் தலைவரான தர்ஷன்லால் பாட்டியா மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இவர்கள் இருவருக்கும் பரேலி நகர பாஜக மேயர் உமேஷ் கவுதமின் மறைமுக ஆதரவு உள்ளது.

இதனால், பரேலியின் பாஜக கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தி ஆணையர் சாமுவேலுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளனர். பரேலியில் இருந்து சாமுவேலை மாற்ற வேண்டியும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். நேற்று அவரது அரசு அலுவலகத்தின் உள்ளே நுழைய விடாமல் வாசலை மறித்து போராட்டத்தை துவங்கினர். இதை தடுக்க முயன்ற போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. இதை சமாளிக்க அப்பகுதியில் 144 தடை உத்தரவு அமலாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ஆணையர் சாமுவேல் கூறும்போது, ’சட்டவிரோதமானதை மறைத்து, உ.பி. மாநில நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சுரேஷ் கன்னாவை ஏமாற்றி அவரது கைகளால் கடந்த நவம்பரில் இக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதில் சட்டப்படி எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையை வாபஸ் பெற நிர்பந்தம் செய்யப்படுகிறது’ எனத் தெரிவித்தார்.

இதனிடையே, மேயரான உமேஷ் கவுதமுக்கு சொந்தமான இன்வர்டிஸ் பல்கலைக்கழகம் மீது 5,900 சதுர மீட்டர் அளவிலான நிலஆக்கிரமிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சாமுவேலுக்கு முன்பாக அப்பதவி வகித்த முதன்மை ஆணையர் வாதிடாமல் விலகி இருந்தார். இப்போது, அவ்வழக்கில் வாதிட தயாராகி வருகிறார் ஆணையர் சாமுவேல். இதில் இருந்து அவரை தடுத்து நிறுத்தவே மேயரின் மறைமுக ஆதரவுடன் சாமுவேலுக்கு எதிரான இந்த போராட்டம் நடத்தப்படுகிறது எனக் கருதப்படுகிறது.

சாமுவேலின் மனைவியும் தமிழருமான திவ்யா சாமுவேல், ஐஎப்எஸ் உ.பி. மாநில வனஅதிகாரியாக உள்ளார். அவர் தற்போது விடுப்பில் உள்ளார். பரேலி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராக தர்மபுரியை சேர்ந்த ஜி.முனிராஜ் பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

26 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்