பிரதமர் மோடி நாளை பதவியேற்பு: அமைச்சராகிறார் அமித் ஷா?

By செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரதமர் மோடி இரண்டாம் முறையாக நாளை பதவியேற்கிறார். பாஜக தலைவர் அமித் ஷாக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பலத்தை காட்டிலும் அதிக தொகுதிகளில் அக்கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் மாளிகையில் நாளை பிரதமராக பதவியேற்கவுள்ளார். இந்த விழாவில் பங்கேற்க, 'பிம்ஸ் டெக்' அமைப் பில் இடம்பெற்ற அண்டை நாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிம்ஸ்டெக் நாடுகள் பட்டியலில் இந்தியா, வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம் மற்றும் பூடான் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

சர்வதேச நாடுகளின் பாதுகாப்பு அமைப்பான ஷாங்காய் ஒருங்கிணைப்பு நாடுகளின் தற்போதைய தலைவருக்கும், கிரிகிஸ்தா னின் அதிபருக்கும் கஜகிஸ்தான் மற்றும் மொரீஷியஸ் நாடுகளின் அதிபர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. எனினும், பாகிஸ்தானில் எவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.

குடியரசு தலைவர் மாளிகையில் இரவு 7 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. பிரதமர் மோடியுடன் மத்திய அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். அமைச்சரவை தொடர்பாக பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் மூன்று முறை கூடி ஆலோசனை நடத்தியுள்ளனர். தற்போதைய மத்திய அமைச்சர்களில் பலருக்கும் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடல்நிலையில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதன் காரணமாக, புதிதாக உருவாகும் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் தனக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு அருண் ஜேட்லி கடிதம் எழுதியுள்ளார். எனவே புதிய நிதியமைச்சர் பதவியேற்பார் எனத் தெரிகிறது.

நிதித்துறையை தற்காலிகமாக கவனித்த பியூஷ் கோயலுக்கு இந்த பதவி வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. அதேசமயம் பாஜக தலைவர் அமித் ஷா இந்தமுறை அமைச்சராக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காந்திநகர் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற அவரை அமைச்சராக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பாஜகவின் பெரும் வெற்றிக்கு அமித் ஷா பெரும் பங்காற்றியதால் அவருக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கபடலாம் என்ற தகவல் வெளியானது. அவ்வாறு அமித் ஷா அமைச்சராக்கப்பட்டால் நிதி அல்லது உள்துறை அவருக்கு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எனினும் அவர் அமைச்சராவது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. அடுத்தடுத்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறும் நிலையில் கட்சியை திறன்பட வழிநடத்த சரியான தலைமையாக அமித் ஷா விளங்குவதாக கட்சி நிர்வாகிகள் எண்ணுகின்றனர். கட்சி தலைவர் பதவிக்கு வேறு ஒருவரை தேர்ந்தெடுக்க இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதால் அமித் ஷா உடனடியாக அமைச்சர் பதவி ஏற்க முடியாத சூழல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுபோலவே வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் ஓய்வு பெறும் எண்ணத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. பாஜக பெறும் வெற்றி பெற்ற மேற்குவங்கம், கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

கர்நாடகாவில் புதிதாக வெற்றி பெற்ற தேஜஸ்வி சூர்யா, ஷோபா உள்ளிட்டோருக்கும் இடம் கிடைக்கலாம் எனத் தெரிகிறது. கூட்டணிக்கட்சிகளை பொறுத்தவரை ஐக்கிய ஜனதாதளம், சிவசேனா, அகாலிதளம், அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு இடம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

தமிழகம்

18 mins ago

விளையாட்டு

26 mins ago

தமிழகம்

41 mins ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சுற்றுலா

29 mins ago

தொழில்நுட்பம்

20 mins ago

மேலும்