பிரச்சினைகளை தீர்க்க வந்துள்ளேன்; பொய் வாக்குறுதி தர வரவில்லை: ராகுல் காந்தி

By பிடிஐ

நான் வயநாடு தொகுதியின் பிரச்சினைகளை தீர்க்கவே வந்துள்ளேன், பொய்யான வாக்குறுதிகளை அளிக்க வரவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதி தவிர்த்து, கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியிலும் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரத்துக்காக 2 நாட்கள் பயனமாக வயநாட்டுக்கு ராகுல் காந்தி வந்துள்ளார்.

திருநேலி நகரில் உள்ள பிரபலமான விஷ்ணு கோயிலுக்கு இன்று காலை ராகுல் காந்தி சென்று வழிபாடு நடத்தினார். ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்த கொல்லப்பட்ட பின், அவரின் அஸ்தி கடந்த 1991, மே 30-ம் இந்தக் கோயிலுக்கு அருகே செல்லும் ஆற்றில்தான் கரைக்கப்பட்டது. ராஜீவ் காந்தி அஸ்தி கரைக்கப்பட்ட இடத்தில் இருந்து 700 மீட்டர் தொலைவில் அமர்ந்து தனது தந்தைக்கு இன்று தர்ப்பணம் செய்தார் ராகுல் காந்தி.

கடந்த முறை வந்திருந்தபோது, இந்தக் கோயிலில் வழிபாடு நடத்த ராகுலின் சிறப்பு பாதுகாப்புப் பிரிவினர் அனுமதி மறுத்துவிட்டனர். ஆதலால், இந்தமுறை வழிபாடு நடத்த முன்ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. தேவஸ்தானத்துக்கு உண்டான ஓய்வு அறையில் தங்கிய ராகுல் காந்தி, அங்கிருந்த கேரள முறைப்படி வேஷ்டி (முண்டு), அங்கவஸ்திரம் அணிந்து கோயிலுக்குச் சென்று வழிபாடும், தனது தந்தைக்கு தர்ப்பணமும் செய்தார்.

அதன்பின் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார்.

அங்கு அவர் பேசியதாவது:

''தேசத்தில் இரு மதங்களுக்கு இடையே குழப்பத்தை, விரோதத்தை ஏற்படுத்தி மோடி துண்டாடிவிட்டார். இந்த தேசத்தில் மிகவும் தேசவிரோதமான செயல் என்னவென்றால், 24 மணிநேரத்தில் 27 ஆயிரம் இளைஞர்கள் வேலையிழக்கும் சூழல் நிலவுவதுதான். நாட்டில் வேலையின்மை அதிகரித்துள்ளதற்கு பிரதமர் மோடிதான் காரணம்.

தேசவிரோத மனப்பான்மை வேளாண்துறையிலும் எதிரொலித்து, ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு வந்துள்ளனர்.

மற்றொரு தேசவிரோத செயல்பாடு, ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு ரூ.30 ஆயிரம் கோடியை வழங்கியுள்ளார் மோடி. இந்த மூன்று விஷயங்களும் எவ்வாறு நடந்தது குறித்து மோடி விளக்கம் அளிக்க வேண்டும்.

நான் இங்கு போலியான, பொய்யான வாக்குறுதிகளை வழங்கவும், மனதோடு பேசுகிறேன் (மன்கி பாத்) என்று கூறவும் வரவில்லை. இங்குள்ள பிரச்சினைகளை உளமாறக் கேட்டறிந்து, குறிப்பாக இரவுநேர பயணத்தில் இருக்கும் சிக்கல்கள், மிருகங்கள், மனிதர்களிடையே இருக்கும் மோதல்கள், மருத்துவ வசதிக்குறைவு உள்ளிட்ட பிரச்சினைகளைக் கேட்டறிந்து அதை தீர்க்கும் தீர்மானத்துடன் வந்திருக்கிறேன்.

பிரதமர் மோடி போல் அல்ல நான். நான் உங்களுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் தருவேன். உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்று பொய்யான வாக்குறுதி தர இங்கு வரவில்லை. விவசாயிகள் கேட்டதையெல்லாம் தருவேன் என்று பொய்யான வார்த்தைகளைக் கூறுவதற்கு இங்கு வரவில்லை. நான் உங்களின் புத்திசாலித்தனத்தை, சிந்தனையை மதிக்கிறேன்.

உங்களுடனான உறவை தேர்தல் வரை சிலமாதங்கள் வைத்திருந்துவிட்டுச் செல்ல  இங்கு வரவில்லை. வாழ்நாள் முழுவதும் உங்களுடன் நட்புறவு தொடரவேண்டும்  என்பதற்காகவே வந்திருக்கிறேன். வயநாட்டின் சகோதரிகளிடம் நான் கூறுவதெல்லாம், நான் உங்களின் சகோதரன் போன்றவன். தந்தைகளுக்கும், தாய்களுக்கும் நான் உங்களின் மகன் போன்றவன்.

பல்வேறு சிந்தனைகள், கலாச்சாரங்கள் மூலம் வயநாட்டின் அழகை முன்னெடுக்க விரும்புகிறேன். தேசத்தின் மற்ற மாநிலங்கள் கேரள வயநாட்டில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். தென் இந்தியாவில் இருந்து தேர்தலில் போட்டியிட முடிவு செய்தபின், வயநாடுதான் சிறந்த இடம் என்று முடிவு செய்தேன். ஏனென்றால், இங்குதான் பல்வேறுவிதமான கலாச்சாரங்கள், சிந்தனைகள் நிரம்பி இருக்கின்றன. அமைதியாக சேர்ந்து வாழும் இடத்துக்கு கேரளா உதாரணம்''.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

24 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்