ரஃபேல் வழக்கு: மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு; சீராய்வு மனுவில் தாக்கலான ஆவணங்கள் ஏற்பு- உச்ச நீதிமன்றம் அதிரடி

By ஏஎன்ஐ

ரஃபேல் போர் விமானக் கொள்முதல் வழக்கின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனுவில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஏற்கக் கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்துவிட்ட உச்ச நீதிமன்றம் அந்த ஆணவங்களை பரிசீலனைக்கு ஏற்கலாம் என்று அதிரடியாக தெரிவித்துள்ளது.

ரஃபேல் போர் விமானக் கொள்முதல் தொடர்பாக தி இந்து ஆங்கிலம் நாளேடு வெளியிட்ட ஆவணங்கள் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து திருடப்பட்டவை என்று முதலில் கூறிய மத்திய அரசு, அதன்பின் நகலெடுக்கப்பட்டவை என்றும் மத்திய அரசு வாதத்தை முன்வைத்து ஆவணங்களை ஏற்கக் கூடாது என்று வலியுறுத்தியது. அந்த வாதத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்து தள்ளுபடி செய்துவிட்டது.

ரஃபேல் போர் விமானக் கொள்முதல் வழக்கில் மத்திய அரசுக்கு  சீராய்வு வழக்கில் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 126 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்து, பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரஃபேல் விமானங்களை வாங்க ஆலோசிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் ரூ.58 ஆயிரம் கோடிக்கு  அதிகமாக விலை வழங்கப்பட்டுள்ளதாகவும்; விமான உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்கான ரூ.30,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.

இந்நிலையில், ரஃபேல் ஒப்பந்த முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்ற பொதுநலன் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி,  ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோர் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை முடிவில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ரஃபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கும், நீதிமன்றம் தலையிடுவதற்கும் எந்தவிதமான முறைகேடு இருப்பதாகத் தெரியவில்லை. ஆதலால், ரஃபேல் போர்விமானங்கள் கொள்முதலில் விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை என கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி தீர்ப்பளித்தது.

இந்தநிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து  முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி,  ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் கிஷன் கவுல், ஜோஸப் ஆகியோர் கொண்ட அமர்வால் விசாரிக்கப்பட்டது.

விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜராகிய அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், சீராய்வு மனுக்களை தொடக்க நிலையையே தள்ளுபடி செய்யவேண்டும், சில ஆவணங்கள் திருடப்பட்டு தி இந்து(ஆங்கிலம்) நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

அடுத்த கட்ட விசாரணையின்போது,  பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து அதிகாரபூர்வமற்ற வகையில் நகல் எடுக்கப்பட்டு நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ளது என்று வேணு கோபால் தெரிவித்தார்.

ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் உள்ள ஆவணங்கள் அனைத்தும் தேச பாதுகாப்புக்கு உகந்தவை, போர் விமானத்தின் தன்மையை விளக்குபவை என்பதால், அதை வெளியிடக்கூடாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த சீராய்வு வழக்கின் வாதங்கள் முடிந்த நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் கிஷன் கவுல், ஜோஸப் ஆகியோர் கொண்ட அமர்வு கடந்த மாதம் 14-ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்த, நிலையில், இன்று தீர்ப்பு வழங்கியது.

அதில்,  சீராய்வு மனுவில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு ஏற்கக் கூடாது எனும் மத்தியஅரசின் வாதத்தை தள்ளுபடி செய்கிறோம். சீராய்வு மனுவின் போது மனுதாரர்கள் தாக்கல் செய்த 3 ஆவணங்களும் பரிசீலனைக்கு ஏற்கப்படும். இந்த மனுக்கள் மீது விரிவான விசாரணை நடத்தப்படும்.  எப்போது விசாரணை நடத்தப்படும் என்பது குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தீர்ப்பளித்தனர்.

இந்த தீர்ப்பு குறித்து மனுதாரர்களின் ஒருவரான அருண் ஷோரி கூறுகையில், " பாதுகாப்பு அமைச்சகம் தொடர்பான ஆவணங்களை நீதிமன்றம் கண்டிப்பாக ஆய்வு செய்ய வேண்டும். ஆதாரங்களை நீதிமன்றம் கேட்டது, அதை  அளித்து நிரூபிக்கவும் செய்தோம். எங்கள்  மனுக்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மத்திய அரசின்  வாதத்தை நிராகரித்தது. ஒருமனதாக வழங்கப்பட்ட தீர்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பாதுகாப்பு துறையில் தவறுநடக்கவில்லை என்று மத்திய அரசு வாதிட்டது  " எனத் தெரிவித்தார்.

இந்த தீர்ப்பின் மூலம் ரஃபேல் போர்விமானக் கொள்முதல் குறித்த செய்திகளில் இடம் பெற்ற ஆவணங்களை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

43 mins ago

ஓடிடி களம்

55 mins ago

இந்தியா

33 mins ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

மேலும்