மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸுடன் ரகசிய உடன்பாடு செய்ய சமாஜ்வாதி ஆலோசனை

By ஆர்.ஷபிமுன்னா

பிரியங்கா வத்ராவின் வரவுக்கு பின் காங்கிரஸ் உ.பி.யில் பலம் பெற்றிருப்பதாகக் கருதப்படுகிறது. இதனால், அக்கட்சியுடன் உ.பி.யின் சில தொகுதிகளில் ரகசிய உடன்பாடு செய்துகொள்ள சமாஜ்வாதி ஆலோசனை செய்கிறது.

உ.பி.யின் 80 தொகுதிகளில் போட்டியிட சமாஜ்வாதியின் அகிலேஷ்சிங் யாதவ், பகுஜன் சமாஜின் மாயாவதி மற்றும் அஜித்சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. அகிலேஷும், மாயாவதியும் சரிசமமாக தலா 38 எடுத்துக் கொண்டு அஜித்சிங்கிற்கு இரண்டு தொகுதிகள் அளித்தனர். இதில் காங்கிரஸை சேர்க்க மறுத்தவர்கள், ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியின் தொகுதிகளில் மரியாதை நிமித்தம் தம் வேட்பாளர்களை நிறுத்தப்போவதில்லை என அறிவித்திருந்தனர்.

இதனிடையே, தீவிர அரசியலில் இறங்கிய பிரியங்கா, காங்கிரஸின் பொதுச்செயலாளராக திடீர் என அமர்த்தப்பட்டுள்ளார். இதனால், தமது செல்வாக்கு உ.பி.யில் கூடியதாகக் கருதிய காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவித்தது. இந்த சூழலில் மும்முனை போட்டி நிகழ்ந்து வாக்குகள் பிரியும் நிலையும் உருவாகி உள்ளது. இது பாஜகவிற்கு சாதகமாகாமல் இருக்க அகிலேஷ் தீவிரமாக யோசித்து வருகிறார்.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் சமாஜ்வாதியின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘‘உ.பி.யில் எங்கள் கூட்டணியில் காங்கிரஸையும் சேர்க்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இது முடியாத நிலையில், சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸுக்கு இடையே சில தொகுதிகளில் ரகசிய உடன்பாடு செய்ய ஆலோசனை நடந்து வருகிறது. நாங்கள் காங்கிரஸுக்கு யாதவர் வாக்குகளை அளித்து முஸ்லிம் வாக்குகளை பெற்றுக் கொள்வோம்’’ எனத் தெரிவித்தனர்.

காஜியாபாத், லக்னோ, ஜான்சி, பிரயாக்ராஜ், பட்ரவுனா, சுல்தான்பூர், கான்பூர், முராதாபாத், சஹரான்பூர் மற்றும் பாராபங்கி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸுடன் சமாஜ்வாதி ரகசிய ஒப்பந்தம் செய்யும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை, 2009-ல் காங்கிரஸ் பெற்ற 21 தொகுதிகளில் இடம் பெற்றவையாகும். இதற்கு பதிலாகக் காங்கிரஸும் சில தொகுதிகளில் சமாஜ்வாதியுடன் நட்புரீதியான போட்டியில் இறங்கவும் யோசனை செய்வதாகத் தெரியவந்துள்ளது.

பிரியங்காவின் அரசியல் வருகை அறிவிப்பை அகிலேஷ்சிங் பாராட்டி இருந்தார். இவர், தொடர்ந்து காங்கிரஸ் மீது மாயாவதியை போல் நேரடியான விமர்சனம் செய்வதில்லை. ஆனால், பிரியங்காவின் வருகைக்கு பிறகும் மாயாவதி காங்கிரஸ் மீது அதிருப்தியாகவே உள்ளார். உ.பி.யில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகமாக சுமார் 19 சதவிகிதம் உள்ளனர். இதனால், சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸுக்கு பொதுவான முஸ்லிம் வாக்காளர்கள் பிரியாத வகையில் இந்த ரகசிய ஒப்பந்தம் போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்