புதிய சிபிஐ இயக்குநர் தேர்வு: பிரதமர் மோடி தலைமையில் நடந்த 2-வது கூட்டத்திலும் முடிவு எடுக்கவில்லை

By ஐஏஎன்எஸ்

சிபிஐ அமைப்புக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்ய, பிரதமர் மோடி தலைமையில் நேற்று கூடிய 2-வது கூட்டத்திலும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மாவும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறியதையடுத்து, அவர்கள் இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. சிபிஐ இணை இயக்குநர் நாகேஸ்வர ராவை தற்காலிக சிபிஐ இயக்குநராகவும் மத்திய அரசு நியமித்தது.

இதை எதிர்த்து, சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்றும், அலோக் வர்மா மீண்டும் இயக்குநர் பதவியைத் தொடரலாம் என்றும் கடந்த 10-ம் தேதி உத்தரவிட்டது.

மேலும், அலோக் வர்மா குறித்த இறுதி முடிவைப் பிரதமர் தலைமையிலான உயர்நிலைக் குழு முடிவு செய்யும் என்று தெரிவித்திருந்தது.

அதையடுத்து அலோக் வர்மாவைப் பதவி நீக்கம் செய்து பிரதமர் மோடி தலைமையிலான உயர் நிலைக்குழு அதிரடியாக அறிவித்து சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் தொடருவார் என்றும் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் மீண்டும் பொறுப்பேற்றார்.

இந்நிலையில், சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரிக்க இயலாது என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், ஏ.கே.சிக்ரி, ரமணா ஆகியோர் அறிவித்தனர். இதையடுத்து, நேற்று நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவின் சின்ஹா ஆகியோர் கொண்ட புதிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ இயக்குநர் பதவி என்பது முக்கியமானது. நீண்ட நாட்களுக்கு இடைக்கால இயக்குநரை நியமிப்பது சரியாகாது. ஆதலால், உடனடியாக முழுநேர இயக்குநரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதையடுத்து, நேற்று மாலை பிரதமர் மோடியின் இல்லத்தில் சிபிஐ அமைப்புக்கு புதிய இயக்குநரைத் தேர்வு செய்யும் கூட்டம் நடந்தது. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான மல்லிகாரஜுன கார்கே ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் இறுதியில் எந்தவிதமான முடிவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்தக் கூட்டத்தில் புதிய சிபிஐ இயக்குநரை நியமிப்பது தொடர்பாக எந்தவிதமான முடிவும் எடுக்கப்படவில்லை. மற்றவகையில் வேறு எந்தத் தகவலும் இல்லை" எனத் தெரிவித்தார்.

ஏற்கெனவே கடந்த 24-ம் தேதி நடந்த முதல் கூட்டத்திலும் எந்த விதமான முடிவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 24-ம்தேதி கூட்டத்துக்குப் பின் காங்கிரஸ் எம்.பி. மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், " 70 முதல் 80 அதிகாரிகளின் பெயரை அரசு வழங்கியது. ஆனால், அவர்களின் பணி விவரம், அனுபவம் ஆகியவை குறித்து ஏதும் இல்லை. நானும், தலைமை நீதிபதியும், அனைத்து அதிகாரிகளின் முழு விவரங்களையும் கேட்டிருக்கிறோம். அடுத்த வாரம் நடக்கும் கூட்டம் கூட்டத்தில் இது குறித்து முடிவெடுப்போம்" எனத் தெரிவித்திருந்தார்.  

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

16 mins ago

சுற்றுலா

19 mins ago

வணிகம்

6 hours ago

இந்தியா

44 mins ago

சினிமா

39 mins ago

தமிழகம்

47 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்