இடஒதுக்கீடு மசோதா: மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி; பிற்பகல் வரை ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில்  அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை பிற்பகல் வரை ஒத்தி வைக்கப்பட்டது.

 

அரசு வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்வி நிறுவன சேர்க்கையில் உயர் சாதி ஏழைகளுக்கு (பொதுப் பிரிவினர்) 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசியல் சாசன (124-வது சட்டத் திருத்த) மசோதாவை, மத்திய சமூக நீதித் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட்  மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். ஏற்கெனவே இந்த மசோதா மக்களவையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நிறைவேற்றப்பட்டது.

 

முன்னதாக மாநிலங்களவை தொடங்கியவுடன், கூட்டத்தை ஒரு நாள் நீட்டித்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஜனவரி 8-ம் தேதியோடு மாநிலங்களவைக் கூட்டத்தொடர் முடிந்த நிலையில், பாஜக  மசோதாக்களைத் தாக்கல் செய்வதற்காக கூட்டத்தொடரை நீட்டித்துள்ளதாக அவை குற்றம் சாட்டின.

 

''எதிர்க்கட்சிகள் அவையை நீட்டித்த விவகாரத்தில் கவனம் செலுத்துவதைவிட, முக்கிய மசோதாக்களின் மீது கவனம் செலுத்த வேண்டும்'' என மத்திய அமைச்சர் விஜய் கோயல் கோரிக்கை விடுத்தார்.

 

நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேசும்போது, ''மாநிலங்களவை சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நாடே எதிர்பார்க்கிறது. பெரும்பாலான நாட்கள், அவை ஒத்தி வைப்பதிலேயே கழிந்துவிட்டது. அதனால் சட்டத்தை இயற்ற ஒரு நாள் கூடுதலாகச் செயல்பட வேண்டும்'' என்று கூறினார். 

எதிர்க்கட்சிகளின் தொடர் கூச்சலால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 12 மணிக்கு அவை கூடியதும்  மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் அரசியல் சாசன (124-வது சட்டத் திருத்த) மசோதா 2019-ஐ மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.

அப்போது விவாதம் இன்றி அவசர கதியில் இடஒதுக்கீடு மசோதவை நிறைவேற்ற மத்திய அரசு முயல்வதாக கூறி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என திமுக மற்றும்  இடதுசாரிக் கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நீடித்ததால் அவை  2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உயர் சாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு

உயர் சாதியினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கியது. இப்போது எஸ்சி, எஸ்டி, ஓபிசி உள்ளிட்ட பிரிவினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

 

அரசியல் சாசன சட்டத்தின் 15 மற்றும் 16-வது பிரிவுகளின்படி சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க முடியும். பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது.

 

எனவே, உயர் சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டுமானால் அரசியல் சாசன சட்டத்தின் 15 மற்றும் 16-வது பிரிவில் திருத்தம் செய்ய வேண்டியது அவசியம். இதனால் ஆளும் பாஜக அரசு, சட்ட மசோதாவில் திருத்தம் செய்து இரு அவைகளிலும் தாக்கல் செய்தது.

 

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஓடிடி களம்

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்