சபரிமலை சென்ற பொன். ராதாகிருஷ்ணன் நிலக்கலில் தடுத்து நிறுத்தம்: எஸ்.பி.யுடன் கடும் வாக்குவாதம்

By பிடிஐ

இருமுடி கட்டி சபரிமலைக்குச் சென்ற மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், நிலக்கல் பகுதியில் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அதன்பின் அவரை வாகனத்தில் அனுமதிக்க மறுத்துவிட்டதால், அவருக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு கேரள மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இந்து அமைப்புகள், பாஜக, காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சபரிமலை மகரவிளக்கு சீசன் தொடங்கிவிட்டதால், பக்தர்கள் சபரிமலைக்கு வந்து செல்ல கடும் கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் போலீஸார் விதித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பெய்த மழையால், பம்பையில் வாகனங்களை நிறுத்தும் இடம் அடித்துச் செல்லப்பட்டு விட்டதால், அதற்குப் பதிலாக அடிவாரப் பகுதியான நிலக்கலில் வாகனங்கள் அனைத்தையும் நிறுத்தக் கூறியுள்ளார்.

அதன்பின் பக்தர்கள் அனைவரும் தங்களின் சொந்த வாகனத்தில் செல்ல முடியாது. கேரள அரசுப் பேருந்திதான் செல்ல முடியும். மேலும் இரவு நேரத்தில் சன்னிதானத்திலும் பக்தர்கள் தங்குவற்கு கடும் கட்டுப்பாடுகளை போலீஸார் விதித்துள்ளனர். போலீஸாரின் விதிமுறைகளை மீறிய 70 பக்தர்கள் கடந்த 3 நாட்களுக்கு முன் இரவு நேரத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மத்திய கப்பல் மற்றும் நிதித்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சபரிமலைக்கு விரதம் இருந்து இருமுடிகட்டி நேற்று சபரிமலைக்குப் புறப்பட்டார். அமைச்சரின் அதிகாரபூர்வ வாகனம் சபரிமலை சன்னிதானத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள நிலக்கல் பகுதி வந்தவுடன் அதற்கு மேல் செல்ல போலீஸார் அனுமதி மறுத்துவிட்டனர்.

தனியார் வாகனங்களையும், அமைச்சர் வாகனங்களையும் பம்பை வரை செல்ல அனுமதிக்கக் கோரினர். ஆனால், போலீஸார் திட்டவட்டமாக மறுத்து, அரசுப் பேருந்தில்தான் செல்லவேண்டும் என்று தெரிவித்தனர். மேலும், நிலக்கல் பகுதியில் பக்தர்களுக்குச் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளையும் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ் எஸ்.பி. யாதிஷ் சந்திராவிடம், "ஏன் கேரள அரசுப் பேருந்துகளை மட்டும் பம்பை வரை அனுமதிக்கிறீர்கள். தனியார் வாகனங்களையும் அனுமதிக்கலாமே. இப்படிச் செய்தால் பக்தர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும். போலீஸார் தேவையில்லாமல் பக்தர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது. இவ்வாறு போலீஸார் நடந்து கொள்வது ஐயப்ப பக்தர்களுக்கு நல்லதல்ல. தனியார் வாகனங்களும் அனுமதிக்கப்பட வேண்டும்" என்று பொன்.ராதாகிருஷ்ணன் வாதிட்டார்.

ஆனால், எஸ்.பி. சந்திரா, "பம்பையில் வாகனங்களை நிறுத்தும் இடவசதி இல்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் வாகன நிறுத்தும் அழிந்துவிட்டது. ஆதலால், கேரள அரசுப் பேருந்து கூட அங்கு நிறுத்தப்படாமல், பக்தர்கள் சேர்ந்தவுடன் வாகனத்தை எடுத்துவந்து விடுகிறார்கள். தனியார் வாகனங்களைப் பம்பை வரை அனுமதித்தால், மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஆதலால் அனுமதிக்க முடியாது" என்று திட்டவட்டமாக மறுத்தார்.

இதையடுத்து, போலீஸ் எஸ்.பி.யுடன், அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, பம்பையின் இயற்கை சூழல், அதன் தன்மை, சூழில் ரீதியான தன் முக்கியத்துவம் ஆகியவை குறித்து பொன். ராதாகிருஷ்ணனிடம் எஸ்.பி. விளக்கிக் கூறினார்.

"அனைத்து வாகனங்களையும் அனுமதியுங்கள் என்று மத்திய அமைச்சர் உத்தரவிட்டுக் கைப்பட எழுதிக்கொடுத்தால், வாகனங்களை நான் அனுமதிக்கிறேன்" என்று அமைச்சரிடம் எஸ்.பி. சந்திரா தெரிவித்தார். ஆனால், அதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அதன்பின் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அங்கிருந்த மற்ற மாநில பக்தர்களிடம் பம்பையிலும், நிலக்கல் பகுதியிலும் கேரள அரசு செய்துள்ள அடிப்படை வசதிகள் குறித்துக் கேட்றிந்தார். அதன்பின் இருமுடியுடன், கேரள அரசுப் பேருந்தில் தன்னுடன் வந்தவர்களுடன் பம்பைக்குப் பயணித்தார்.

பஸ்ஸில் பம்பை வந்த பின் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், “கேரள அரசு தன்னைச் சரி செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால், மக்கள் அந்த அரசைச் சரி செய்துவிடுவார்கள்” என்று தெரிவித்தார்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஓடிடி களம்

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்