உ.பி.யில் 6 முறை சுயேச்சையாக வென்ற எம்எல்ஏ ராஜா பய்யா புதிய கட்சி அறிவிப்பு

By ஆர்.ஷபிமுன்னா

உ.பி.யின் சுயேச்சை எம்எல்ஏவாக ஆறு முறை வென்ற 'ராஜா பய்யா' (ராஜா அண்ணா) என்றழைக்கப்படும் ரகுராஜ் பிரதாப் சிங் (50) நேற்று முன்தினம் புதிதாக அரசியல் கட்சிக்கான அறிவிப்பை வெளியிட்டார். இதனால், அம்மாநிலத்தில் பாஜகவிற்கு எதிராக ஒன்றிணைந்து வரும் எதிர்க்கட்சி வாக்குகள் பிரியும் சூழல் தெரிகிறது.

உ.பி.யின் கிரிமினல் அரசியல்வாதிகளில் ஒருவராக இருப்பவர்  ராஜா பய்யா. பிரதாப்கரைச் சேர்ந்த இவர் 1993 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து சுயேச்சை எம்எல்ஏவாக இருப்பவர். உ.பி.யில் ஆளவரும் கட்சிகள் எதிலும் சேராமலே அதன் அமைச்சரவையில் இடம் பெறும் அளவிற்கு அரசியல் செல்வாக்கு கொண்டவர்.

இவ்வாறு, பாஜக, பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி ஆகிய கட்சிகளின் அரசில் உ.பி. அமைச்சராக இருந்தார். நேற்றுடன் ராஜா பய்யா அரசியலில் நுழைந்து 25 வருடங்கள் நிறைவு பெறுகிறது. இதைக் கொண்டாடும் வகையில் ராஜா பய்யா உ.பி.யில் புதிய கட்சி தொடங்க இருப்பதாக நேற்று அறிவித்துள்ளார்.

இது குறித்து லக்னோவின் செய்தியாளர்களிடம் ராஜ பய்யா கூறும்போது, ''ஒதுக்கீடு மூலம் குடிமைப்பணி அதிகாரிகள் தன் குழந்தைகளுக்கு மீண்டும் அந்த சலுகையைப் பெறக் கூடாது. அதேபோல், சாதி அடிப்படையில் எவருக்கும் ஒதுக்கீடுகளை அரசு தரக்கூடாது. எனது ஆதரவாளர் வற்புறுத்தலில் தொடங்கும் புதிய கட்சிக்கு எவருடனும் கூட்டு இல்லை. ஆனால், இதற்கான நல்ல வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்திக் கொள்வேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

சிறையில் இருந்து நேரடியாக அத்துறையின் அமைச்சர்

உ.பி. அரசியலில் அதிரடி நடவடிக்கைகளுக்குப் பெயர் போனவர் ராஜா பய்யா. மாயாவதியுடன் ஏற்பட்ட அரசியல் மோதலினால் அவரது ஆட்சியில் ஒரு டிஎஸ்பி கொலை வழக்கில் சிக்கியவர் பொடா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.  அடுத்து வந்த அகிலேஷ் ஆட்சியில் சிறையில் இருந்து விடுதலையானவர் நேரடியாக சிறைத்துறையின் அமைச்சராகப் பதவி ஏற்றார். ராஜா பய்யாவிற்கு உ.பி.யில் அதிகமுள்ள தாக்கூர் சமூகத்தினரின் மிகுந்த செல்வாக்கு இருப்பது அதன் காரணம்.

நவம்பர் 30-ல் லக்னோவில் மாபெரும் கூட்டம் நடத்தி கட்சியின் தொடக்கம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜா பய்யாவின் புதிய கட்சியினால், அகிலேஷ் சிங் யாதவ் மற்றும் மாயாவதியின் கட்சி வாக்குகள் பிரிந்து பாஜகவிற்கு சாதகமான சூழல் அமையும் வாய்ப்புகள் உள்ளன.

ராஜா பய்யா பின்னணி

பிரதாப்கரில்  நடக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க பொதுமக்கள் காவல் நிலையத்தை விட அதிகமாக ராஜா பய்யாவையே அணுகுவார்கள். அவர் அங்கு அந்தக் கால ராஜாக்களின் தர்பார்களைப் போல் நடத்தி கட்டப்பஞ்சாயத்து செய்வார்.

முதலைகளை வளர்த்தவர்?

இதனால், பிரதாப்கரின் ராஜாவாக கருதப்படும் அவர்  போட்டதுதான் அங்கு சட்டம். இவரது அரண்மனை வீட்டிற்குப் பின்புறம் உள்ள குளத்தில் (பிறகு இதை மாயாவதி அரசுடமையாக்கி சுத்தம் செய்த போது அதில் எலும்புக் கூடுகள் சிக்கின) முதலைகள் வளர்ப்பதாகவும்,  தன்னை எதிர்ப்பவர்களை அதில் வீசி இரையாக்குவார் எனவும் சர்ச்சைகள் உண்டு. 

தன் மீதுள்ள கிரிமினல் வழக்குகளை அடித்தளமாகப் பயன்படுத்தி அரசியலில் குதித்தார் ராஜா பய்யா. தாம் கைகாட்டி அரசியல்வாதிகளை ஜெயிக்க வைப்பதை விட தாமே தேர்தலில் நிற்க தற்போது முடிவெடுத்துள்ளார். மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடத் திட்டமிட்டிருப்பவர், கட்சியின் பெயர் பிறகு அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பல்கலை வகுப்பிற்கு விமானத்தில் சென்றவர்

லக்னோ பல்கலைக்கழகத்தில் பயிலும் போது பலமுறை வகுப்புகளுக்காக பிரதாப்கரிலிருந்து தனது சிறியரக தனி விமானத்தில் வந்து இறங்கிய போதும் சர்ச்சைக்குள்ளானார். பிறகு இதே விமானத்தை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்திய போது அதில் கோளாறு ஏற்பட்டதால் நடுரோட்டில் இறங்கியது சர்ச்சையானது.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

46 secs ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

56 mins ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

31 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்