2019 தேர்தலுக்கு முரசு அறையப்பட்டுவிட்டது

By சேகர் குப்தா

நடந்த நம்பிக்கையில்லாத் தீர்மான விவாதம் பல கேள்விகளுக்கு விடையளித்துவிட்டது. முதலாவதாக, 2019 தேர்தலை ‘நரேந்திர மோடி எதிர் ராகுல் காந்தி’

என்று பாஜக சித்தரிக்க எதிர்க்கட்சிகள் அனுமதிக்க வேண்டுமா அல்லது ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு தலைமையின் கீழ் போட்டியிட வேண்டுமா? இனி போட்டி தனக்கும் மோடிக்கும் இடையில் மட்டுமே என்று மாற்றிவிட்டார் ராகுல்.

இரண்டாவது, ராகுல் குறித்து பாஜக இப்போதும் கவலைப்பட வேண்டுமா? உண்மை என்னவென்றால் ராகுலை பாஜக எப்போதும் அலட்சியப்படுத்தியதே இல்லை! நாட்டின் பிரதமர் பல லட்சம் மதிப்புள்ள சூட்டைத்தான் அணிந்திருக்கிறார் என்று ராகுல் மிகச் சாதாரணமாகச் சொன்ன விமர்சனம், மோடி அரசின் அரசியல் பொருளாதாரக் கொள்கையையே மாற்றிவிட்டது; நாடாளுமன்றத்தின் இந்த அவையில் மேலும் சில சான்றுகள் வெளிவந்துள்ளன. தகவல் அறியும் சட்டத்துக்குக் கொண்டுவர உத்தேசித்துள்ள திருத்தங்களுக்கு ராகுல் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்திருக்கிறார். எனவே பாஜக அரசு அதிலும் பின்வாங்கிவிடும். இனி யாரைக் குறிவைத்துப் பேச வேண்டும் என்பதில் பாஜக திட்டவட்டமான முடிவுக்கு வந்திருக்கும். ‘ராகுல் ஒன்றும் அவ்வளவு முக்கியமானவரல்ல’ என்று மிகுந்த முக்கியத்துவம் அளித்து தங்களுடைய சேனைகளை ஏவி கூவத் தொடங்கிவிடுவார்கள்.

மூன்றாவதாக, தான் ஒரு தீவிரமான அரசியல்வாதிதான் என்று பாஜகவுக்கு அல்ல - தன்னுடைய கட்சிக்காரர்களுக்காவது ராகுல் காந்தி இனி உணர்த்துவாரா? அதற்கான விடை அவருடைய நாடாளுமன்ற நடவடிக்கையிலேயே இருக்கிறது. அது ‘ஆம்’ என்பது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற அங்கீகாரத்தைக்கூடப் பெற முடியாத அளவுக்கு கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், எதிர்க்கட்சித் தலைவர்களிடையே முக்கியமானவராக உருவெடுத்து வருகிறார். இதன்மூலம் மோடிக்கு எதிராக அடுத்த தேர்தலில் போட்டியிடப்போகும் எதிர்க்கட்சி கூட்டணிக்குத் தலைமை தாங்க தனக்குள்ள உரிமையை இவ்விவாதத்தின் மூலம் வலியுறுத்தியிருக்கிறார்.

நாலாவது: ஏதுமறியாத பாலகன் என்ற பிம்பத்தை நொறுக்கியிருக்கிறாரா ராகுல்? என்னை அப்படி யாராவது அழைத்தாலும் அதைப்பற்றி நான் கவலைப்படப்போவதில்லை என்றே விவாதத்தில் கூறியிருக்கிறார். அந்த பிம்பம் மாறிவிட்டது என்றே காங்கிரஸ்காரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் நாமோ, அந்த நிலையை அவர் தாண்டவில்லை என்றே கருதுகிறோம். அவ்வளவு ஆக்ரோஷமாகப் பேசிமுடித்து, பிரதமர் இருக்கை வரை சென்று அவரைக் கட்டி அணைத்துத் தனது இருக்கைக்குத் திரும்பிய பிறகு, காங்கிரஸ் தோழர்களைப் பார்த்து வாலிபக் குறும்பில் அப்படி கண் சிமிட்டியிருப்பாரா? மூத்த அரசியல்வாதிகள் இதை கண்ணியமற்ற செயலாகக் கருதினாலும், இப்படி நடந்துகொள்வது பாவமல்ல.  இந்த விவாதத்தில் யார் வென்றார்கள் என்பது தேவையற்றது. மோடி மிகச் சிறந்த பேச்சாளர், பேச்சில் எதிராளிகளை வீழ்த்துவதில் வல்லவர்.

தன்னுடைய எதிராளி யார், இலக்கு எது என்று மோடிக்குத் தெரிந்துவிட்டது. மோடி எதிர்ப்பது யார் என்று தெளிவில்லை என்று மோடி ஆதரவாளர்கள் இனியும் கூறிவிட்டுத் தப்பிக்க முடியாது. ராகுல் காந்தி பேச்சில் காட்டிய தெளிவும், தீவிரமும் அவர்களுக்கு வியப்பை அளித்திருக்கும்.

பிரதமரைக் குறிப்பிட்டுப் பேசியபோதெல்லாம் ‘அச்சப்பட வேண்டாம்’ என்று அடிக்கடி கூறினார். பிறகு அவருடைய இடத்துக்கே சென்று தழுவிக்

கொள்ள முயன்றார். தன்னுடைய எதிராளி கடைப்பிடிக்கும் அதே உத்திகளைக் கையாண்டார். தன்னுடைய 14 ஆண்டுகால அரசியல் வாழ்வில் மோடியை அவருடைய குகைக்கே சென்று எதிர்கொள்ளும் சவாலை ஏற்றிருக்கிறார் ராகுல் காந்தி.  விவாதங்களில் சில கேள்விகளைக் கேட்டுவிட்டதாலேயே அரசியலின் யதார்த்தம் மாறிவிடாது. மக்களவையில் அரசை எதிர்த்தவர் 126 என்றால் ஆதரித்தவர் 325.

மோடிக்கு உண்மையான சவாலாக விளங்க ராகுல் கடக்க வேண்டிய தொலைவு நிரம்ப இருக்கிறது. இதுவரை தேர்தல் ரீதியிலான வெற்றி எதுவும் கிட்டிவிடவில்லை. அவருடைய கூட்டங்களுக்கு வருவோர் எண்ணிக்கைக் கூடியிருக்கிறது. இப்போது பஞ்சாப், கர்நாடகம் என்ற ஒன்றரை மாநிலங்களைத்தான் காங்கிரஸ் ஆள்கிறது. (கர்நாடகத்தில் முதல்வர் வேறு கட்சிக்காரர் என்பதால் அரை!). கட்சியின் நிதி வளம் வற்றியிருக்கிறது. பிரச்சாரம் தொடங்கும் வேளையில் கட்சிப் பிரமுகர்களில் பலர் ஊழல் வழக்குகளை எதிர்கொள்ள நீதிமன்றங்களுக்கு ஓடிக்கொண்டிருப்பார்கள்.

ராகுல் காந்தி எதிர்க்கட்சிகளுக்குத் தலைமை ஏற்க உருவாகிவிட்டார் என்பதல்ல உண்மை; அதற்கு இன்னும் நிறைய தொலைவைக் கடக்க வேண்டும். இப்போதைக்கு எதிர்க்கட்சிகளுக்குத் தலைமை தாங்கக்கூடிய முகமாக காட்சிபடத் தொடங்கியிருக்கிறார். அடிக்கடி காணாமல் போவது, வெளிநாடுகளில் போய் தங்கிவிடுவது இனி கூடாது என்று கட்சிக்காரர்களால் அவரிடம் நேரடியாகக் கூற முடியவில்லை.  அடுத்தது, அவருடைய அம்மாவின் பாணியிலிருந்து ராகுலின் பாணி மாறியிருக்கிறது. வாஜ்பாய் காலத்துக்குப் பிந்தைய பாஜகவை சோனியாவும் காங்கிரஸ்காரர்களும் மிகக் கடுமையாகத் தாக்கினார்கள், எதிரியாகவே நடத்தினார்கள். மோடியை தீண்டத்தகாதவராகவே நினைத்தார்கள்.

மோடியை ‘மரண வியாபாரி’ என்று கண்டித்தார் சோனியா. மோடி அதற்கு ஈடாக பதில் அளித்தார். ‘ஜெர்சி பசுவும் கன்றும்போல’ என்று ராகுலையும் சோனியாவையும் கேலி செய்தார். உங்களை நேசிக்கிறேன் என்று கூறி மோடியை கட்டித் தழுவினார் ராகுல். உண்மையிலேயே ராகுல் அதைத்தான் விரும்புகிறார் என்று நம்பும் அளவுக்கு மற்றவர்கள் அப்பாவிகள் அல்லர்.  காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரத்துக்கு மாறாக, கர்நாடகத்தில் மிகக் குறைந்த தொகுதிகளில் வென்ற கட்சிக்கு முதலமைச்சர் பதவியைத் தானாகவே தாரை வார்த்துவிட்டார் ராகுல். ராகுலின் அரசியல் இப்போது தெளிவாகிவிட்டது. “மோடியைத் தவிர வேறு யார் பிரதமராக வந்தாலும் சரி, அது நானாக (ராகுலாக) இல்லாவிட்டாலும் பரவாயில்லை” என்று குமாரசாமியை முதல்வராக்கி உணர்த்தியிருக்கிறார்.

ராகுலின் பேச்சும் செயலும் இந்தத் தேர்தல் ஆண்டில் அரசியலை எப்படி மாற்றும் என்று முன்கூட்டியே கணித்துவிட முடியாது. கலங்கிய நிலை நீங்கிவிட்டது, தெளிவு பிறந்துவிட்டது. நாடாளுமன்றத்தில் நல்ல விவாதம் நடந்தது. பிற நடவடிக்கைகளும் சுமுகமாக நடைபெற்றாக வேண்டும். இதற்குப் பிறகு, மக்களவை பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிஜோரம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் பொதுத் தேர்தல் நடக்க வேண்டும்.

சேகர் குப்தா, ‘தி பிரின்ட்’ தலைவர்,

முதன்மை ஆசிரியர்

தமிழில்: ஜூரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்