26 ஆண்டுகளுக்குப் பின் திறப்பு: ஆசியாவின் மிகப்பெரிய இடுக்கி அணை நிரம்புகிறது; தீவிரமாகத் தயாராகிறது கேரள அரசு

By பிடிஐ

ஆசியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான கேரள மாநிலத்தின் இடுக்கி அணை தனது முழுக் கொள்ளளவை எட்ட இருப்பதால், 26 ஆண்டுகளுக்குப் பின் அணை திறக்கப்பட உள்ளது.

தரைப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப் பட வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகளையும், அணை திறப்பதற்கான நடவடிக்கைகளையும் கேரள அரசு தீவிரமாகச் செய்து வருகிறது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ளது இடுக்கி அணை. குறவன் மலை, குறத்தி மலை ஆகிய இரு அணைகளையும் இணைத்து ஒரு அரைவட்டம் போன்று, பெரியாற்றின் குறுக்கே இந்த அணை கட்டப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே கட்டப்பட்ட வளைவு அணைகளில் இடுக்கி அணை மிகப்பெரியதாகும். கடந்த 1969-ம் ஆண்டு அணைக் கட்டும் பணி தொடங்கப்பட்டு 1973-ம் ஆண்டுபயன்பாட்டுக்கு இடுக்கி அணை வந்தது.

இந்த அணையின் மொத்த உயரம் 550 அடி உயரமாகும். இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், இடுக்கியில் உள்ள மூலமட்டம் பகுதியில் உள்ள நீர்மின்நிலையத்தில் மின்சாரம் எடுக்கப்பயன்படுகிறது. இந்த நீர்மின் நிலையத்தில் இருந்து 780 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

செருதோனி, குலமாவு ஆகிய இரு அணைகளையும் இணைத்து, இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது. 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அணையின் மொத்த கொள்ளவு 72 டிஎம்சி ஆகும்.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் பெய்துவரும் தீவிரமான தென் மேற்கு பருவமழையால், அணை நிரம்பி வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவான 2 ஆயிரத்து 403 அடியில் இப்போது, 2,395 அடிக்கும் மேல் தண்ணீர் இருப்பதால், அடுத்த சில நாட்களில் அணை நிரம்பும் சூழல் உள்ளது. இதனால், அணையை செருதோனி அணை மதகுகள் வழியாக திறக்கும் பணியில் கேரள அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதற்கு முன் கடந்த 1996-ம் ஆண்டு இடுக்க அணை தண்ணீர் செருதோனி அணை வழியாகத் திறக்கப்பட்டது. அதன்பின் கடந்த 26 ஆண்டுகளாக இடுக்கி அணை நிரம்பும் அளவுக்கு மழை பெய்யவில்லை. இந்நிலையில், இப்போது அணை தனது முழுக்கொள்ளவை எட்ட இருப்பதால், அணை திறக்கப்பட உள்ளது.

இடுக்கி அணையைத் திறப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன், வருவாய்துறை அமைச்சர் இ சந்திரசேகரன், நீர்வளத்துறை அமைச்சர் மாத்யு டி தாமஸ், வருவாய் கூடுதல் செயலாளர் பி.எச். குரியன் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனை நடத்தினார்கள்.

இடுக்கி அணை திறக்கப்படுவதால், செருதோனி ஆற்றில் வெள்ளம் பாயும் என்பதால், தரைப்பகுதியில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புவது குறித்தும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய இடுக்கி மாவட்ட நிர்வாகம்மூலம் விரைவாகச் செய்ய விவாதிக்கப்பட்டது.

அணை உள்ளபகுதியில் இருந்து 100 மீட்டர் சுற்றியுள்ள பகுதிகள், குடியிருப்பு பகுதிகள், வர்த்தக நிறுவனங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றைக் கணக்கெடுக்கும் பணிகளை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு செயற்கைக்கோள் உதவியுடன் கட்டிடங்கள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.

அடுத்த இரு நாட்களில் இடுக்கி அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கேரள அரசும், இடுக்கி மாவட்ட நிர்வாகமும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதற்கு முன் 1981-ம் ஆண்டும், 1992-ம் ஆண்டும் இருமுறை மட்டுமே இடுக்கி அணை தனது முழுக்கொள்ளளவை எட்டியதால், திறக்கப்பட்டுள்ளது அதன்பின் இப்போது திறக்கப்பட உள்ளது.

செருதோனி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், மூவாற்றுப்புழா பள்ளத்தாக்கில் உள்ள வேளாண் நிலங்களின் பாசன வசதிக்குப் பயன்படும்.

அணையின் பாதுகாப்பு கருதி இங்குச் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதியில்லை. அதேசமயம், ஆண்டில் கிறிஸ்துமஸ், ஓணம் பண்டிகை மட்டும் அணை மக்களின் பார்வைக்காக 15 நாட்கள் திறக்கப்படும். அப்போது, அணையில் உள்ள நீரில்படகு சவாரிக்கு அனுமதிக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

49 mins ago

கல்வி

46 mins ago

தமிழகம்

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

2 hours ago

சுற்றுலா

2 hours ago

மேலும்