பங்களா விவகாரத்தில் மாயாவதி பின்வாங்கிய பின்னணி; பிரதமர் பதவிக்கான குறியா?

By ஆர்.ஷபிமுன்னா

உ.பி.யின் முன்னாள் முதல்வரான மாயாவதி தன் அரசு பங்களா விவகாரத்தில் பின்வாங்கிய ரகசியம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த செயலின் பின்னணியில் அவர் 2019 மக்களவை தேர்தலில் பிரதமர் பதவிக்கு குறி வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

உ.பி.யின் ஆறு முன்னாள் முதல்வர்களும் தம் அரசு பங்களாக்களை காலி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்காக, ஆறுபேருக்கும் 15 நாள் அவகாசத்துடன் நேற்று முன் தினத்திற்குள் காலி செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டு உ.பி. அரசு நோட்டீஸும் அளித்திருந்தது. ஆனால், மாயாவதி மட்டும் மால் அவென்யூ எண் 19 ஏ விலாச பங்களாவை காலி செய்ய மறுத்தார்.

அது, தன் கட்சி நிறுவனரான கன்ஷிராம் நினைவகத்திற்காக தம் ஆட்சியில் ஒதுக்கப்பட்டதாகக் கூறி ஒரு பெயர்ப் பலகையையும் திடீர் எனத் தொங்க விட்டார். அதன் ஓரமாக இருந்த இரு அறைகளில் மட்டும் தான் தங்கியதாகவும், தனக்கு ஒதுக்கப்பட்ட முதல்வர் பங்களா லால் பகதூர் சாஸ்திரி மார்கின் என் 9-ல் இருப்பதாகவும் கூறினார். இதை மட்டும் காலி செய்து மாயாவதி அனுப்பிய சாவியை உ.பி. அரசு ஏற்க மறுத்தது.

இந்நிலையில், கடந்த 2 ஆம் தேதி குறிப்பிட்ட சில ஊடகங்கள் மட்டும் மால் அவென்யூவிற்கு திடீர் என அழைக்கப்பட்டன. அங்கு இருந்த மாயாவதி மால் அவென்யூவையும் காலி செய்வதாகக் கூறி தாம் அவற்றை விட்டு வெளியேறும் காட்சிகளையும் பதிவு செய்தார். மாயாவதியின் இந்த திடீர் முடிவு தேசிய அரசியல் பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஏனெனில், அரசியல் முடிவுகளை எடுக்கும் மாயாவதிக்கு அதில் இருந்து பின்வாங்கும் பழக்கம் இருந்ததில்லை. இதற்காக, எழும் கடுமையான விமர்சனங்களை அவர் பொருட்படுத்தியதும் இல்லை. எனினும், தம் பங்களா விவகாரத்தில் பின்வாங்கியதன் பின்னணியில் ஒரு பெரிய அரசியல் நோக்கம் இருப்பதாகக் கருதப்படுகிறது. வரும் 2019-ல் மக்களவை தேர்தலில் கூட்டணியின் வெற்றி பெற்றால், தாம் பிரதமராக பங்களா பிரச்சினை தடையாக இருக்கும் என மாயாவதி கருதியது தெரியவந்துள்ளது.

இது குறித்து 'தி இந்து'விடம் பகுஜன் சமாஜ் நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ''உ.பி. மாநிலத்தின் முதல்வராக அகிலேஷ், மத்தியில் பிரதமராக எங்கள் பெஹன்ஜி. இதுதான் பரம எதிரிகளான இருவரும் கூட்டணி சேர்ந்த ரகசியம். இதில், காங்கிரஸைப் போல் குடும்ப அரசியல் புகார் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் அவர் கட்சியின் துணைத்தலைவராக இருந்த தனது சகோதரரை சமீபத்தில் பதவி நீக்கம் செய்திருந்தார். அதன் பிறகும் ஒரு தடையாக பங்களா விவகாரம் முளைத்திருப்பதை உணர்ந்தவர், அதையும் காலி செய்துள்ளார்'' எனத் தெரிவித்தனர்.

எதிர்க்கட்சிகள் வரிசையில் இடம்பெற்றும் தனி ஆவர்த்தனம் வழக்கம் கொண்டவர் மாயாவதி. பாஜகவிற்கு எதிராக அவர் குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர், பல போராட்டங்கள் என எதிலுமே எதிர்க்கட்சிகளுடன் நேரடியாக இணைந்ததில்லை. ஆனால், கடந்த மக்களவை மற்றும் உ.பி. சட்டப்பேரவை தேர்தல்களில் தனக்கு ஏற்பட்ட படுதோல்வி அவரிடம் பல மாற்றங்களை ஏற்படுத்தியது.

இதன் விளைவாக கர்நாடகாவில் மதச் சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்தார். அதன் வெற்றிக்குப் பின் எச்.டி.குமாரசாமி பதவி ஏற்பிலும் கலந்து கொண்டார். இதில் எதிர்க்கட்சிகளுடன் கைகோத்துப் பேசி மகிழ்ந்து தான் அரசியல் மாற்றத்திற்குத் தயாராக இருப்பதை அனைவருக்கும் உணர்த்தினார். எனவே, காங்கிரஸ் தலைமையில் உருவாகி வரும் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் போட்டியில் மாயாவதி மெல்ல, மெல்ல ஊடுருவி வருவது உறுதியாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

உலகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்