தாராளவாத பீடங்களின் சங்கராச்சாரிகள்!

By சேகர் குப்தா

ந்தத் தலைப்பை ‘தாராளவாதிகளின் அயதுல்லாக்கள், பாதிரிமார்கள்’ என்று வைத்திருந்தால் சரியான உருவகமாகவோ, பொருத்தமான தலைப்பாகவோ இருந்திருக்கும். ஆனால் இப்போதெல்லாம் உருவகங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ‘அயதுல்லாக்கள் அல்லது பாதிரிமார்கள்’ என்று தலைப்பிட்டுவிட்டால், பழமைவாதிகளும் – சிறுபான்மையினருக்கு கேடயமாக விளங்கும் தாராள சிந்தனையாளர்களும் என் மீது பாயத் தொடங்குவார்கள். நான் சார்ந்திருக்கும் இந்து மதத் தலைவரையே உருவகமாக்கிவிட்டால் பிரச்சினையே இல்லை!

இப்போது மனிதாபிமானத்துடன் உருவாகிவரும் ‘தாராளவாத மதம்’ பற்றி பேச விழைகிறேன். மதங்களைப் போல இதில் இன்னும் திரிபுகள் ஏற்படவில்லை. இச் சிந்தனையிலிருந்து விலகி யாரும் மாற்றாகச் சிந்திப்பதை இது சகித்துக்கொள்ளாது. ஷியா-சன்னி, கத்தோலிக்கர்- பிராட்டஸ்டண்ட், வைணவர்-சைவர் என்பது போன்ற பாகுபாடுகளுக்கே இங்கே இடமில்லை. ‘என்னைப் பின்பற்றுவதாக இருந்தால், என்னை மட்டும்தான் பின்பற்ற வேண்டும். இதில் விதிவிலக்கோ, சலுகைகளோ கிடையாது. வாரத்துக்கு ஒரு நாள் சிந்தனையிலிருந்து விலகியிருக்கக்கூட கூடாது. ஒன்று எங்களோடு நில், அல்லது எதிர்த்து நில்’ என்பதுதான் தாராளவாத சிந்தனை!

நீங்கள் தாராளவாதியா என்பதை அறிய கேள்விகள் உண்டு. தாராளர்கள் எப்படிப் பேச வேண்டும், நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு இறுக்கமான விதிகள் உண்டு. இதற்கான குறைந்தபட்ச விதிமுறைகளை தொகுக்கிறேன். முதலில் நீங்கள் ‘மதச்சார்பற்றவராக’ இருக்க வேண்டும். உங்களுடைய மத நம்பிக்கைகளையும், கடவுளர்களையும் தூக்கி குப்பையில் போடுங்கள். இரண்டாவதாக, தடையில்லா வர்த்தகம், உலகமயமாதல், கட்டுப்பாடுகளைக் களைதல் தொடர்பான சிந்தனைகளையும் களையுங்கள். அரசு மட்டுமே வழிபாட்டுக்குரிய தெய்வமெனக் கருதுங்கள், அதை மிகச் சிறந்ததாக மாற்ற உதவுங்கள். எல்லா பெருந்தொழில் நிறுவனங்களும் ‘திருடர்கள்’ என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள், யார் – எவர் என்றெல்லாம் கேள்வி கேட்காதீர்கள். எல்லா அணைகளுக்கும் எதிர்ப்பு தெரிவியுங்கள். கடந்த காலத்தில் கட்டப்பட்ட அணைகளினால் அழிவுதான் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். மின்சார உற்பத்தியெல்லாம் ‘தீமை’ என்று நம்புங்கள். முட்டாள் அமெரிக்கர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தீயவர் ட்ரம்ப்; ஜி ஜின்பிங், புதின் ஆகியோர் அப்படி அல்ல – அவர்கள் அதிபரானதற்கு அந்த நாட்டு மக்களை எந்த விதத்திலும் குற்றஞ்சாட்ட முடியாது! பிராணிகள் பவித்திரமானவை, மனிதர்கள்தான் உண்மையிலேயே மிருகங்கள்! அரசாங்கம் என்ற அமைப்பு நல்லது, ஆனால் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அரசைவிட மேலானவைகள்! அறிவியல் ஆபத்தானது – அதுவும் தனியார் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது. இப்போது உலகையே அழிக்க வந்துள்ள பேராபத்து மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள், பழங்கள், உணவு தானியங்களுக்கான விதைகள்தான்! இயற்கையாக சாகுபடியாகாத உணவைச் சாப்பிடுவது தற்கொலைக்குச் சமம். இந்தச் சிந்தனைகளில் அல்லது கருத்துகளில் ஏதாவது ஒன்றில் நீங்கள் முரண்பட்டால்கூட நீங்கள் சுதந்திரச் சிந்தனையே இல்லாத பன்றி. அதுமட்டுமல்ல; பெரு நிறுவனங்களின், அமித் ஷாவின் அல்லது இருவரின் கைக்கூலிகள். சுருக்கமாகச் சொல்வதென்றால் என்னைப் பின்பற்றிப் பேசினால், என்னைப்போலவே செயல்பட்டால் நீங்களும் தாராளவாதிதான்.

அமித் ஷா பற்றிப் பேசினோமா? நீதிபதி லோயா பற்றிப் பேசும்போது ‘அதை சர்ச்சைக்குரிய மரணம்’ என்றால் நீங்கள் போலி (தாராளவாதி); அதுமட்டுமல்ல, புதிதாகவும் நேர்மையாகவும் விசாரணை தேவை என்றாலும்கூட நீங்கள் போலிதான். இதை எப்படிப் பேச வேண்டும்? ‘நீதிபதி லோயா கொலை’ என்று மட்டுமே. இனியும் விசாரணை நடத்தி ஏன் நேரத்தை வீணாக்க வேண்டும்? அவர் கொலை செய்யப்பட்டார் என்பதும் யாரால் என்பதும் தெரிந்ததே; இதில் தொடர்புள்ள நூலைக் கண்டுபிடியுங்கள், அதனைக் கொண்டே சுருக்கு தயாரித்து அதில் அமித் ஷாவை மாட்டிவிடுங்கள். இப்படிச் சிந்திக்க நீங்கள் மறுத்தால் ஒன்று நீங்கள் அமித் ஷாவைப் பார்த்து அஞ்சி நடுங்குகிறீர்கள் அல்லது அவருடைய கைக்கூலியாகப் பணம் வாங்குகிறீர்கள் - அல்லது இரண்டுமே!

மிக எளிமையாகவும் வெளிப்படையாகவும் உங்களை மதிப்பிட முடிவதால் எஞ்சியவை தானாகப் பின்தொடர்கின்றன. மக்களுக்கு அறிமுகமானவராகவோ, அறிவுஜீவியாகவோ இருந்தால் சமூக ஊடகம் உங்களை ‘கருத்துச் செல்வாக்காளர்’ என்று அழைக்கிறது. நீங்கள் எதை எழுதினாலும் பேசினாலும் தாராளவாதக் கருத்தாளர்களின் சங்காராச்சாரியார் உங்களைக் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்.

தேர்தல் ஜனநாயகங்களில் கட்சிகளுக்கென்று விசுவாசமான வாக்கு வங்கிகள் உண்டு. ஆனால் வெற்றியைத் தீர்மானிப்பது, தேர்தலுக்குத் தேர்தல் வாக்குகளை மாற்றிப் போடும் குறிப்பிட்ட சதவீத வாக்காளர்கள்தான். அவர்களை விவரம் தெரியாதவர்களாக, மூளையற்றவர்களாக, நாகரிகம் தெரியாதவர்களாக, அடிமைபுத்தி கொண்டவர்களாக நீங்கள் கருதினால், தீவிர தேசியவாதம் பேசுகிறவர்களுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லையென்றே அவர்கள் கருதுவார்கள். எனவே தங்களை முற்போக்காளர்கள், தாராளவாதிகள் என்று கருதிக் கொள்வார்கள் இனியும் தனித் தீவுகளாக இருக்கக்கூடாது. தங்களைச் சுற்றியிருப்பவர்களுடன் சேர்ந்துகொள்ள முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மற்றவர்கள் பேசுவதை கேட்கும் கலாச்சாரத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

தமிழில்: ஜூரி

சேகர் குப்தா, ‘தி பிரின்ட்’ தலைவர்,

முதன்மை ஆசிரியர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்