18 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை மாற்றக் கோரிய மனு; உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது

By எம்.சண்முகம்

தமிழகத்தைச் சேர்ந்த 18 எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி அவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்றக் கோரி, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் தமிழக ஆளுநரிடம் மனு அளித்தனர். இதில் ஜக்கையனைத் தவிர்த்து மீதமுள்ள 18 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து 18 எம்எல்ஏக்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. இந்த அமர்வு கடந்த 14-ம் தேதி தீர்ப்பளித்தது. அமர்வின் இரண்டு நீதிபதிகளும் இரண்டு மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அளித்த தீர்ப்பில், ‘18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும். இது தொடர்பாக சபாநாயகர் முடிவு சரியானதுதான். அவரது உத்தரவு நியாயமற்றது என்றோ சட்டத்துக்கு புறம்பானது என்றோ நான் கருதவில்லை’ என்று தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். மற்றொரு நீதிபதி எம்.சுந்தர், ‘சபாநாயகரின் முடிவு இயற்கை நீதிக்கு எதிரானது. உள்நோக்கம் கொண்டது’ என்று கூறி சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்தார்.

இரண்டு நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்பை அளித்துள்ளதால், மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு வழக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை நீதிபதி விமலா விசாரிக்க உள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கோ அல்லது வேறு மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களுக்கோ மாற்றி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ-க்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்ற விடுமுறைகால நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் எஸ்.கே.கவுல் முன்பாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், ‘‘சென்னை உயர் நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பளித்திருப்பதால் மூன்றாவது நீதிபதி விசாரிப்பார் என்று வாட்ஸ் ஆப் மூலம் எங்களுக்கு தகவல் தெரியவந்துள்ளது. இது முக்கியமான வழக்கு என்பதால், இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும்’’ என்று கேட்டார்.

அதற்கு நீதிபதிகள், ‘‘வாட்ஸ் ஆப் தகவலை வைத்து நாங்கள் விசாரணை நடத்த முடியாது. இந்த மனு வரும் 27-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’’என்று தெரிவித்தனர். அதன்படி இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது. உச்ச நீதிமன்றம் என்ன முடிவெடுக்கும் என்பது நாளை விசாரணைக்குப் பின் தெரியவரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

11 mins ago

உலகம்

32 mins ago

வாழ்வியல்

51 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

மேலும்