காஷ்மீர் குறித்த ஐ.நா. அறிக்கையின் அபத்தம்

By சேகர் குப்தா

காஷ்மீர் தொடர்பான ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் அறிக்கை ஏகப்பட்ட தவறுகளோடு வெளியாகி இருக்கிறது. அதன் துல்லியம், உண்மைத்தன்மை மற்றும் ஆய்வு முறை குறித்து விவாதிப்பதே நேர விரயம்தான்.

அறிக்கையின் மிகப் பெரிய தவறு அரசியல் ரீதியானது. உலகின் மிகப் பெரிய அமைப்பின் மனித உரிமை கவுன்சிலில் தொண்டு நிறுவனப் போராளிகள் இடம்பெறுவதால் ஏற்படும் பிரச்சினை இது. இந்த அறிக்கையால் இந்தியாவுக்கோ, பாகிஸ்தானுக்கோ தலைகுனிவோ அல்லது அவமானமோ இல்லை. காஷ்மீரில் எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு எதிராகத்தான் நடவடிக்கை எடுத்து வருவதாக இந்தியா நினைப்பதால், மனித உரிமை மீறல் குறித்து அதற்குக் கவலை இல்லை.

காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு பாகிஸ்தான் நிதியுதவி செய்வதாகவும் தீவிரவாதிகளுக்கு பயிற்சியும் ஆயுதமும் கொடுப்பதாகவும் சொல்கிறது ஐ.நா. அறிக்கை. இதனால் பாகிஸ்தானுக்கு எந்தத் தலைகுனிவும் இல்லை. காஷ்மீரிகளின் சமூக நீதிக்காகப் போராடுவதாக அது நம்புகிறது.

காஷ்மீரில் கடைசி ஆள் இருக்கும் வரை இரு நாடுகளும் சண்டை போடத்தான் போகின்றன. அதனால் முட்டாள்தனமான ஐ.நா.வின் அறிக்கை குறித்து அவை கவலைப்படப் போவதில்லை. இந்த அறிக்கையைத் தயாரித்த ஐ.நா. ஆய்வாளர்கள் யாருமே காஷ்மீரின் எல்லைப் பகுதிக்கு சென்றிருக்க மாட்டார்கள்.

பல வழிகளில் காஷ்மீர் பிரச்சினை கடந்த 1990-களில் இருந்த நிலைக்குத் திரும்பவும் வந்துவிட்டது. அப்போது பலவீனமாக இருந்த இந்தியாவுக்கு, ஐ.நா. மற்றும் ஐரோப்பிய யூனியனின் மனித உரிமை குழுக்கள் அழுத்தம் கொடுத்தன. அப்போது பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரை மீட்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியது இந்தியா. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாயும் வெளியுறவு அமைச்சராக இருந்த சல்மான் குர்ஷித்தும் இணைந்து செயல்பட்டு ஜெனிவா வாக்கெடுப்பில் வென்றார்கள். ஐ.நா. மனித உரிமை கவுன்சில் அறிக்கை வெளியானதும் அதே நிலைதான் ஏற்பட்டது. வெளியுறவு அமைச்சகம் அதைக் கண்டிக்கும் முன்பே, காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், அரசுக்கு ஆதரவாக டிவி விவாதத்தில் அறிக்கையைக் கண்டித்துப் பேசியுள்ளனர்.

காஷ்மீர் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை வழங்க வேண்டும் என்றும் இந்தியா காஷ்மீர் மீது போர் தொடுக்கக் கூடாது என்றும் ஐ.நா. அறிக்கை கூறியிருக்கிறது. 1972-ல் உருவான சிம்லா ஒப்பந்தப்படி, காஷ்மீர், இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையிலான இரு தரப்பு விவகாரம் என முடிவான பிறகு, இதுவரை காஷ்மீர் சுய நிர்ணயம் பற்றி ஐ.நா. பேசியதில்லை. பிரச்சினையை இருதரப்பும் பேசித் தீர்க்க வேண்டும் என்றுதான் பாகிஸ்தானும் விரும்புகிறது.

காஷ்மீர் தீவிரவாதத்தைப் பொறுத்தவரை கடந்த 1989 முதல் 94 வரையிலான காலகட்டம்தான் மிகவும் மோசமானது. இப்போது மீண்டும் அந்த நிலைமை திரும்பியுள்ளது. மக்களுக்கு அரசியல் மீது நம்பிக்கை போய் விட்டது. மனித உரிமை மீறல் தொடர்பான அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன. பாகிஸ்தானின் அத்துமீறல் அதிகரித்து விட்டது. நமது தேசிய அரசியலும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

ஐ.நா. அறிக்கை மீது கோபப்படுவது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த நிலைமை வரக் காரணம் என்ன.. இதேபோல் இந்தியாவும் பல தவறுகளைச் செய்ததுதான். 1989-ல் வி.பி.சிங் ஆட்சிக்கு வந்த பிறகுதான் பிரச்சினை ஆரம்பமானது. காரணம் அதுவரை இருந்த அரசியல் நிலைப்பாட்டில் இருந்து மாறுபட்ட கருத்து கொண்ட இடதுசாரிகள் மற்றும் பாஜக ஆதரவுடன் இருந்த சிறுபான்மை அரசு அது.

காஷ்மீரில் கடுமையான நிலைப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என விரும்பியது பாஜக. இதையடுத்து, தீவிரவாதிகளை அடக்கி ஒடுக்க, அக்கட்சியின் ஜக்மோகன், காஷ்மீர் மாநில கவர்னராக அனுப்பப்பட்டார். ஆனால் அரசு முஸ்லிம் ஆதரவு நிலையை விரும்பியதோடு, இடதுசாரிகளையும் சார்ந்து இருந்தது. மேலும் முப்தி முஹமது சயீத் மத்திய அமைச்சரவையில் இருந்தார். எனவே, அவர்களைத் திருப்திபடுத்த, ஜார்ஜ் பெர்னாண்டஸை காஷ்மீர் விவகாரத் துறை அமைச்சராக்கினார் வி.பி.சிங்.

இப்போது அதிகார மையத்தின் ஒரு பிரிவு காயத்தை ஏற்படுத்தும். இன்னொரு பிரிவு மருந்து தடவும். விளைவு குழம்பம்தான். பாகிஸ்தான் ஆதரவில் தீவிரவாதம் தலைதூக்கியது. காஷ்மீர் பண்டிட்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். அடுத்ததாக, முழு மெஜாரிட்டி இன்றி ஆட்சிக்கு வந்த நரசிம்ம ராவ், ராணுவத்துக்கு முழு அதிகாரம் கொடுத்ததால், தீவிரவாதம் நசுக்கப்பட்டது.

மாநிலத்தின் மனித உரிமை வரலாற்றில் இந்த காலக்கட்டம்தான் மிகவும் மோசமானது. ஏகப்பட்ட விசாரணை மையங்கள் அமைக்கப்பட்டன. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் அப்பாவிகள் பலர் பலியானார்கள். இருந்தாலும் தீவிரவாதம் முழுமையாக அழிக்கப்பட்டது.

இப்போதும் சில குழப்பங்கள் இருக்கின்றன. வி.பி.சிங் அரசு, கூட்டணிக் கட்சிகளின் பேச்சைக் கேட்டது. ஆனால் இப்போது ஆட்சியில் இருப்பது வலுவான தேசியக் கட்சி. இருந்தும், காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் சேர்ந்து ஆட்சியில் பங்கேற்றுள்ளது. இது மீண்டும் காயத்தை ஏற்படுத்தி, மருந்து தடவுவதற்கு சமமான செயல்தான். ஒரே நிர்வாகத்தில் இருவேறு நிலைப்பாடுகளைக் கொண்ட ஜக்மோகனும் ஜார்ஜ் பெர்னாண்டஸும் இருந்தது போலத்தான். பற்றாக்குறைக்கு காஷ்மீர் பற்றிய ஐ.நா. அறிக்கையும் சேர்ந்து கொண்டுள்ளது. இதனால் மீண்டும் 1993-ம் ஆண்டு இருந்த நிலைக்கு காஷ்மீர் திரும்பியுள்ளது என்றே சொல்லலாம்.

சேகர் குப்தா

‘தி பிரின்ட்’ தலைவர், முதன்மை ஆசிரியர்

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்