2019 தேர்தலில் தென்னிந்தியாவுக்கு புதிய உத்தி: கர்நாடகாவில் ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்ததால் பாஜக முடிவு

By ஆர்.ஷபிமுன்னா

கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்ததால் தென்னிந்திய வாயில் மூடப்பட்டு விட்டதாக பாஜக தலைவர்கள் கவலை அடைந்துள்ளனர். இதனால் 2019 மக்களவை தேர்தலில் புதிய உத்தியை கையாள முடிவு செய்துள்ளனர்.

கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பேசும்போது, “இம்மாநிலத்தில் பாஜகவின் வெற்றி அதற்கு தென்னிந்திய வாயிலாக அமையும்” என நம்பிக்கை தெரிவித்திருந்தார். இத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் பாஜகவுக்கு சாதகமான முடிவுகள் வெளியாகின. இதைக்கண்டு மகிழ்ந்த அமித்ஷா, கர்நாடகா மூலம் 2019 மக்களவை தேர்தலுக்கு தென்னிந்தியாவின் வெற்றிக்கு உறுதியான அடித்தளம் அமைக்கவும் திட்டமிட்டிருந்தார். இதன் மூலம், 2014 தேர்தலை விட அதிக தொகுதிகள் தங்களுக்கு கிடைக்கும் எனவும் பாஜக நம்பியிருந்தது. இந்த எண்ணங்கள் அனைத்தும் குலையும் வகையில் கர்நாடகாவில் ஆட்சி அமைக்க முடியாமல்போனது. இதனால் வரும் 2019 மக்களவை தேர்தலில் தென்னிந்தியாவில் புதிய உத்திகளை கையாள பாஜக முடிவு செய்துள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் பாஜக தேசிய நிர்வாகிகள் வட்டாரத்தில் கூறும்போது, “ஆந்திராவில் எங்களுக்கு கால்பதிக்க உதவிய தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு அங்கு பாஜகவிற்கு எதிரான சூழலை உருவாக்கி விட்டார். இதனால் அங்கு எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி எங்களுடன் கூட்டணி சேரத் தயங்குகிறார். தமிழகத்தில் ஜெயலலிதாவிற்கு பிறகு அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ள நிலையில் ரஜினிகாந்த் தொடங்கும் கட்சியுடன் கூட்டணி வைக்கும் நம்பிக்கை உள்ளது.

ஆனால் கர்நாடகாவில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளதாக ரஜினி கூறியிருப்பது எங்கள் நம்பிக்கையை கேள்விக்குறியாக்கி உள்ளது. இதேநிலை கேரளா, தெலங்கானாவிலும் ஏற்பட்டுள்ளதால் புதிய உத்தியை கையாள வேண்டியக் கட்டாயம் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

ஒருங்கிணைந்த ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி வைத்து மக்களவை தேர்தலில் போட்டியிட்ட பாஜகவிற்கு 3 தொகுதிகள் கிடைத்தன. புதிய மாநிலமான தெலங்கானாவில் காங்கிரஸால் தமக்கு ஏற்படும் சிக்கலால், பிராந்திய மற்றும் மாநிலக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என முதல்வர் சந்திரசேகர ராவ் வலியுறுத்தி வந்தார். காங்கிரஸை விலக்கி வைக்கவும் கூறப்பட்ட இவரது கருத்து, பாஜக தந்த யோசனை என சந்தேகிக்கப்பட்டது.

ஆனால் கர்நாடகா தேர்தலில் குமாரசாமியை சந்தித்து மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு சந்திரசேகர ராவ் ஆதவரளித்த பிறகு இந்தக் கருத்து மாறியது. தற்போது, காங்கிரஸும் இணைந்ததால்தான் கர்நாடகாவில் பாஜகவை முறியடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதனால், பாஜகவுடன் கூட்டணி என்பதை மக்களவை தேர்தலுக்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என சந்திரசேகர ராவ் தனது முடிவை மாற்றி விட்டதாகத் தெரிகிறது. எனவே, மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு இனி தென்னிந்தியாவில் புதிய உத்தியை கையாள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

உலகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்