மோடியின் நெருங்கிய நண்பர் வஜுபாய் வாலா?

By இரா.வினோத்

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க பாஜக தலைவர் எடியூரப்பாவுக்கு ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு காரணம் அவரது பழைய பாஜக பாசம்தான் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

குஜராத்தை சேர்ந்த வஜுபாய் வாலா (79) பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர். மூத்த பாஜக தலைவரான அவர் அங்கு 7 முறை சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது வஜுபாய் வாலா நிதித்துறை, தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். அங்கு 18 முறை மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

மத்தியில் மோடி தலைமையில் ஆட்சி அமைந்ததும், கடந்த 2014 செப்டம்பர் 1-ம் தேதி வஜுபாய் வாலா கர்நாடக ஆளுநராக நியமிக்கப்பட்டார். கர்நாடக பாஜக தலைவர்களுடன் நெருக்கம் காட்டிய இவர், முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடுக்க அனுமதி கொடுத்தார். சித்தராமையா அரசு கொண்டுவந்த சில முற்போக்கு மசோதாக்களுக்கு அனுமதி தர மறுத்துவிட்டார்.

இதே போல ஆளுநராக பதவியேற்ற சில மாதங்களிலேயே கோடிக்கணக்கில் செலவு செய்தது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை வழங்க மறுத்தது, அனைவரும் சம்ஸ்கிருதம் கற்க வேண்டும் என கூறியது உள்ளிட்ட விவகாரங்களில் சிக்கி, ஆளுநர் வஜுபாய் வாலா கடும் விமர்சனத்துக்கு ஆளானார்.

கர்நாடக தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை (112 இடங்கள்) கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸ், மஜத கூட்டணி உருவானது. இதற்கு 118 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் மஜத தலைவர் குமாரசாமி ஆட்சி அமைக்க முதல் ஆளாக உரிமை கோரினார். அடுத்து 104 இடங்களைப் பெற்று தனிபெரும் கட்சியாக வென்ற பாஜகவுக்கு ஆட்சி அமைக்க அழைக்க வேண்டுமென எடியூரப்பாவும் உரிமை கோரினார்.

கடந்த இரு தினங்களாக எவ்வித உறுதியான பதிலும் கூறப்படாத நிலையில், நேற்று முன் தினம் இரவு வஜுபாய் வாலா திடீரென எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்தார். 112 உறுப்பினர்களின் ஆதரவு இல்லாத எடியூரப்பாவுக்கு ஆட்சி அமைக்க அழைத்தது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு நாடு முழுவதிலும் உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று காலை அவசரமாக எடியூரப்பாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. இதனைக் கண்டித்து காங்கிரஸ், மஜத தலைவர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பெங்களூருவில் தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும், ஆளுநரை திரும்ப பெறுமாறும் அவர்கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

உலகம்

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்