கர்நாடகாவில் பாஜக ஆட்சியை கைப்பற்றுவதை தடுத்து காங்கிரஸை காத்த ‘கிங் மேக்கர்’ டி.கே.சிவகுமார்

By இரா.வினோத்

ர்நாடக அரசியலில் கடந்த சில நாட்களாக காங்கிரஸுக்கு எதிராக‌ அரங்கேறிய அத்தனை சோதனைகளையும் அடித்து நொறுக்கியுள்ளார் டி.கே.சிவகுமார். பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, எடியூரப்பா, ரெட்டி சகோதரர்கள்என எல்லோரும் வீசிய பந்துகளை சிக்ஸர் அடித்து ‘ஆட்ட நாயகன்’ ஆகியிருக்கிறார். இறுதியில் எடியூரப்பாவை முதல்வர் நாற்காலியில் இருந்து இறக்கி, அதை குமாரசாமிக்கு கொடுத்து ‘கிங் மேக்கர்’ ஆகவும் உயர்ந்திருக்கிறார்.

56 வயதான டி.கே.சிவகுமார் பெங்களூருவை அடுத்துள்ள கனகபுராவை சேர்ந்தவர். ஒக்கலிகர் வகுப்பை சேர்ந்த இவர், இளம் வயதிலே ரியல் எஸ்டேட், கிரானைட், சுரங்கம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வந்தார். 1980-களில் காங்கிரஸில் இணைந்து கனகபுராவில் தேவகவுடாவின் மஜதவுக்கு போட்டியாக கட்சியை வளர்த்தார். 1989-ல் சாத்னூர் தொகுதியில் வென்று முதல் முறையாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். டி.கே.சிவகுமாரின் வேகத்தை பார்த்த முதல்வர் பங்காரப்பா இவரை சிறைத்துறை அமைச்சராக நியமித்தார். கர்நாடகா முழுவதும் அறியப்பட்ட டி.கே.சிவகுமார், தங்களது வகுப்பில் பெரிய தலைவராக இருந்த தேவகவுடாவுடன் மோத ஆரம்பித்தார்.

தேவகவுடா உடன் மோதல்

தேவகவுடா போட்டியிட்ட தொகுதிகளில் அவருக்கு எதிராக ஆட்களை நிறுத்துவது, அவரது மஜதவை தோற்கடிப்பது என டி.கே.சிவகுமார் தொடர்ந்து எதிர்ப்பு அரசியல் செய்து வந்தார். 1999 தேர்தலில் காங்கிரஸ் வென்று, ஒக்கலிகர் வகுப்பை சேர்ந்த எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வரானார். தன் வகுப்பை சேர்ந்த டி.கே.சிவகுமாரின் வேகத்தை கண்ட எஸ்.எம்.கிருஷ்ணா அவருக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பதவியை கொடுத்தார்.

2002 மக்களவை இடைத்தேர்தலில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவை எதிர்த்து களமிறங்கினார். இருவருக்கும் கடும் போட்டி நிலவிய நிலையில், 5 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளில் டி.கே.சிவகுமார் தோல்வி அடைந்தார். இந்த கோபத்தை மனதில் வைத்திருந்த டி.கே.சிவகுமார் 2004 மக்களவை தேர்தலில் தேவகவுடாவுக்கு எதிராக தனது ஆதரவாளரும், பத்திரிகையாளரருமான தேஜஸ்வினியை நிறுத்தி, தேவகவுடாவை தோற்கடித்தார். இளம்பெண்ணை வைத்து முன்னாள் பிரதமரை தோற்கடித்ததால் டி.கே.சிவகுமார் மேலும் பிரபலமானார்.

பழிவாங்கிய கவுடா

இந்நிலையில் 2006 தேர்தலில் கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் மஜத உடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்த‌து. அப்போது தேவகவுடா, டி.கே.சிவகுமாருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கக் கூடாது என கூறி, அவரை பழிவாங்கினார்.

2008-ல் எடியூரப்பா முதல்வரானபோது டி.கே.சிவகுமார் காங்கிரஸ் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். 2013 தேர்தலில் வென்ற நேரத்தில் இவர் மீது சுரங்க முறைகேடு வழக்குகள் இருந்ததால் அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. 2014-ல் வழக்கில் இருந்து விடுதலையான பிறகு, சித்தராமையா இவருக்கு மின்சாரத் துறை அமைச்சர் பதவியை கொடுத்தார். டி.கே.சிவகுமாருக்கும், சித்தராமையாவுக்கும் பொது எதிரி தேவகவுடா என்பதால் இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறினார்கள். கட்சியிலும், ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்திய இவர், கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் தன் சகோதரர் டி.கே.சுரேஷை எம்பி ஆக்கினார்.

கிங் மேக்கர்

காங்கிரஸுக்கு பிரச்சினை வரும்போதெல்லாம் டி.கே.சிவகுமார் முன்னால் நிற்பார். கடந்த 2002-ல் மகாராஷ்டிராவில் விலாஸ்ராவ் தேஷ்முக் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அப்போது காங்கிரஸ் எம்எல்ஏக்களை எதிர்க்கட்சி குதிரை பேரம் மூலம் வாங்க முயற்சித்தது. இதனால் காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவுக்கு விலாஸ்ராவ் தேஷ்முக் தனது ஆதரவு எம்எல்ஏக்களை அனுப்பி வைத்தார். அந்த எம்எல்ஏக்களை பெங்களூருவில் உள்ள ஈகள்டன் சொகுசு விடுதியில் பாதுகாத்து, விலாஸ்ராவ் தேஷ்முக் ஆட்சியை காப்பாற்றியவர் டி.கே.சிவகுமார்.

கடந்த ஆண்டு குஜராத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் களமிறங்கினார். அவரை தோற்கடிக்க திட்டமிட்ட அமித் ஷா காங்கிரஸ் எம்எல்ஏக்களை கோடிகளை கொடுத்து வாங்க முயற்சித்தார். உடனடியாக காங்கிரஸ் மேலிடம் டி.கே.சிவகுமாரை நம்பி, 44 குஜராத் எம்எல்ஏக்களை பெங்களூருவுக்கு அனுப்பியது. அவர்களையும் அதே ஈகள்டன் சொகுசு விடுதியில் பாதுகாப்பாக தங்க வைத்தார்.

அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு டி.கே.சிவகுமாருக்கு எதிராக வருமான வரித்துறை ஏவியது. ஈகள்டன் விடுதி, டி.கே.சிவகுமாரின் வீடு உட்பட 65 இடங்களில் 4 நாட்கள் சோதனை நடத்தியது. ரூ.150 கோடிக்கும் அதிகமான சொத்துகளின் ஆவணங்களை பறிமுதல் செய்தது. அதற்கும் அஞ்சாமல் டி.கே.சிவகுமார் குஜராத் எம் எல் ஏக்களை கட்சி தாவாமல் தடுத்து தேர்தலில் வாக்களிக்க செய்தார். அகமது படேல் வெற்றி பெற்றபோது அமித் ஷா அதிர்ந்து போனார்.

தற்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சியை கைப்பற்றுவதை தடுக்க காங்கிரஸ் மேலிடம் முடிவெடுத்தது. தனிபெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 8 எம்எல் ஏக்கள் தேவைபட்ட நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருவரை இழுத்தனர். இரு சுயேச்சை எம்எல்ஏக்களையும் இழுக்க முயற்சி நடைபெற்றது இதனை தடுத்த டி.கே.சிவகுமார் முதல் வேலையாக சுயேச்சைகள் இருவரையும் காங்கிரஸுக்கு ஆதரவளிக்க செய்தார்.

பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் ரூ.100 கோடி வரை தருவதாக காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் கூறினர். இதனால் முழு வீச்சில் களமிறங்கிய‌ டி.கே.சகோதரர்கள் (டி.கே.சிவகுமார், டி.கே.சுரேஷ்) காங்கிரஸ் எம்எல்ஏக்களை பத்திரமாக ஈகள்டன் விடுதியில் தங்கவைத்தனர். அதற்கு போடப்பட்ட பாதுகாப்பை எடியூரப்பா திரும்ப பெற்றதும், இரவோடு இரவாக எம்எல்ஏக்களை ஆந்திராவுக்கு அழைத்து சென்றனர்.

எப்படியாவது காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுத்து முதல்வர் பதவியை தக்க வைத்து விடலாம் என எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா, ஜனார்த்தன ரெட்டி, கருணாகர ரெட்டி, ஸ்ரீராமலு தீவிரமாக முயற்சித்தனர். இரவு பகலாக காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு வலை வீசினர். ஆனால் ஒருவரையும் தொடர்பு கொள்ள முடியாதவாறு தடுத்தார் டி.கே.சிவகுமார்.

கடைசியில் காங்கிரஸில் இருந்து 3 நாட்களுக்கு முன் பாஜகவினரால் கடத்தப்பட்ட இரு எம்எல்ஏக்களையும் மீட்டிருக்கிறார். இரு எம் எல் ஏக்களையும் நேற்று சட்டப்பேரவைக்கு டி.கே.சுரேஷ் அழைத்து வந்தபோது, பெல்லாரி ரெட்டி சகோதரர்களே மிரண்டு போனார்கள். தேவகவுடா குடும்பம் தனக்கு எதிரியாக இருந்தாலும், காங்கிரஸ் மேலிடம் சொன்னதற்காக குமாரசாமியை முதல்வராக்க டி.கே.சிவகுமார் கடந்த 4 நாட்களாக கடுமையாக உழைத்தார்.

அமித் ஷா, எடியூரப்பா, ரெட்டி சகோதரர்கள் என பெருந்தலைகள் பலர் களமிறங்கியபோதும், காங்கிரஸ் எம் எல் ஏக்களை டி.கே.சிவகுமார் ஆபத்பாந்தவனாக நின்று காத்தார். கர்நாடகாவில் அமையப் போகும் ஆட்சிக்கு மூலக்காரணமாக டி.கே.சிவகுமார் இருப்பதால், அவருக்கு பெரிய ப‌தவி கிடைக்கும். கட்சியிலும் பொறுப்பு கிடைக்கும் என்கிறார்கள். இன்று நாடு முழுவதும் அறியப்படும் ஆளாக மாறிய டி.கே.சிவகுமாரின் லட்சியம், கர்நாடக முதல்வராக ஆவதுதான். 7 முறை எம்எல்ஏ ஆன எனக்கு முதல்வராக தகுதி இல்லையா. நான் முதல்வராகும் நாளுக்காக காத்திருக்கிறேன். அப்போதுதான் என் முழு ஆட்டத்தையும் பார்ப்பீர்கள் என சிரிக்கிறார் டி.கே.சிவகுமார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

மேலும்