பெற்ற மகளின் பலாத்தார வழக்கில் ரூ.5 லட்சத்துக்காக சமரசம்: பெற்றோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு

By செய்திப்பிரிவு

பெற்ற மகள் பலாத்காரம் செய்யப்பட்டு அந்த வழக்கு நடந்தும் வரும் நிலையில், பணத்துக்காக ஆசைப்பட்டு வழக்கை வாபஸ் பெற முயன்ற பெற்றோர் மீது துணிச்சலாக மைனர் பெண் புகார் கொடுத்தார். இதையடுத்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த 2017ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் டெல்லியைச் சேர்ந்த 16 வயது மைனர் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அந்தப் பெண்ணின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர். 5 நாட்களுக்குப் பின் வீடு திரும்பிய அந்தப் பெண், தன்னை இருவர் கடத்திச் சென்று பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து, அந்த நபர்கள் குறித்த விவரங்களை அந்தப் பெண் போலீஸில் தெரிவித்ததையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. குற்றம்சாட்டப்பட்ட இருவரும் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் கடந்த 10-ம் தேதி பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, அந்தப் பெண் வீட்டில் ஒரு அறையில் இருந்தார். அப்போது வீட்டில் இருந்த அந்தப் பெண்ணின் தாய், தந்தையிடம் வழக்கை வாபஸ் பெறக்கோரியும், நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தையும் வாபஸ் பெறக்கோரியும் அந்த நபர் பேரம் பேசியுள்ளார்.

இதற்காகத் தான் ரூ.20லட்சம் தருவதாகவும், முதல்கட்டமாக ரூ.5 லட்சத்தைத் தான் இப்போதே தந்துவிடுவதாகவும் அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் அந்த நபர் தெரிவித்தார். முதலில் மறுத்த அந்தப் பெண்ணின் பெற்றோர் குடும்ப சூழல் கருதி, மகளின் பலாத்கார வழக்கோடு சமரசம் செய்ய முன்வந்து பணத்தைப் பெற்றுள்ளனர். இவர்களுக்குள் நடந்த உரையாடல் அனைத்தையும் ஒரு அறைக்குள் இருந்து அந்த பாதிக்கப்பட்ட பெண் கவனமாகக் கேட்டுக்கொண்டு இருந்துள்ளார்.

அதன்பின் அந்தப் பெண் வெளியே வந்து தனது பெற்றோரிடம் எதற்காக பணம் பெற்றீர்கள், அதைத் திருப்பிக்கொடுங்கள் என்று சண்டையிட்டுள்ளார். ஆனால், பெற்றோரோ குடும்பத்தின் இக்கட்டான சூழலை காரணம் காட்டி பணத்தை திருப்பித் தர வேண்டாம் என்றும், நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தை திரும்பப் பெற்றுவிடு என்று அந்தப் பெண்ணை கட்டாயப்படுத்தியுள்ளனர். ஆனால், அதற்கு அந்தப் பெண் மறுத்துவிட்டார்.

இதையடுத்து, அந்தப் பெண் டெல்லி போலீஸில் தனது பெற்றோர் மீது நேற்று புகார் அளித்தார். அந்தப் புகாரில், தான் இருநபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன். அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

அதில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர், கடந்த 8-ம் தேதி என் வீட்டுக்கு வந்து என் பெற்றோரிடம் பணத்தைக் கொடுத்து வழக்கை வாபஸ் பெறக்கோரி பேரம் பேசியுள்ளார். முதலில் மறுத்த என் பெற்றோர், ரூ.5 லட்சம் கொடுத்தவுடன் பெற்றுக் கொண்டனர். வழக்கை வாபஸ்பெற்ற பின் மீதத்தொகையான ரூ.15 லட்சத்தைத் தருவதாக தெரிவித்துள்ளார்.

பணத்தைத் திருப்பித்தருமாறு எனது பெற்றோரிடம் கூறியபோது அவர்களை என்னைக் கட்டாயப்படுத்தி, வாக்குமூலத்தை வாபஸ் பெறக்கோருகிறார்கள். குடும்பச் சூழல் கருதி என்னை பிறல்சாட்சியாக மாற்றப்பார்க்கிறார்கள். இதற்காக என்னை என் பெற்றோர் ஒரு அறையில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்துகிறார்கள் என்று புகாரில் தெரிவித்தார்.

மேலும், தனது பெற்றோர் பெற்றுக்கொண்ட ரூ.5 லட்சத்தையும் கொண்டு வந்து போலீஸில் அந்தப் பெண் ஒப்படைத்தார். இதையடுத்து, அந்தப் பெண்ணின் தாய், தந்தை இருவர் மீதும் ஐபிசி 195ஏ(போலியாகச் சாட்சி அளிக்க மிரட்டுதல்), 120பி(சதிசெய்தல்), 75பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

மகள் அளித்த புகாரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தது தெரிந்தவுடன், அந்தப் பெண்ணின் தந்தை தப்பி ஓடிவிட்டார். அந்தப் பெண்ணின் தாயை மட்டும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஓடிடி களம்

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்