“சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது” - ராகுல் காந்தி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “எந்த சக்தியாலும் சாதிவாரி கணக்கெடுப்பை தடுக்க முடியாது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை புரட்சிகரமானது” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் கட்சி நடத்திய சமூக நீதி மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். 70 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு எடுக்கும் மிக முக்கிய நடவடிக்கையாக இது இருக்கும். இந்த கணக்கெடுப்பின் மூலம் நாட்டின் தற்போதைய நிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து கொண்டு, அடுத்து நாடு எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்பதை மதிப்பீடு செய்ய முடியும். எனவே, சாதிவாரி கணக்கெடுப்பை நாங்கள் அமல்படுத்துவோம்.

எனக்கு சீரியஸ்னெஸ் இல்லை என எதிர் தரப்பில் குற்றம் சாட்டுகிறார்கள். அரசியலில் ஆர்வம் இல்லை என்றும் சொல்கிறார்கள். நிலம் கையகப்படுத்தும் மசோதா, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஆகியவை எல்லாம் சீரியஸ்னெஸ் இல்லாத நடவடிக்கைகளா? உங்கள் கைகளில் லவுட் ஸ்பீக்கர் இல்லாவிட்டால் நீங்கள் என்ன பேசினாலும் அது சீரியஸ்னெஸ் இல்லாததுதான்.

ஊடகங்கள், நீதித்துறை, தனியார் மருத்துவமனைகள், பெரிய நிறுவனங்கள் ஆகியவற்றில் ஓபிசி, பட்டியலின மற்றும் பழங்குடியினர் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர். எனக்கு சாதிகளில் ஆர்வம் இல்லை; ஆனால், நியாயத்தில் ஆர்வம் உள்ளது. இன்று 90 சதவீத இந்திய மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. அநீதியைப் பற்றிப் பேசும்போதெல்லாம், நாட்டை பிளவுபடுத்தும் முயற்சி இது என எதிர்க்கிறார்கள். தேசபக்தர்கள் என தங்களைக் கூறிக்கொள்பவர்கள், சாதிவாி கணக்கெடுப்பு எனும் எக்ஸ்-ரேக்கு பயப்படுகிறார்கள்.

பிரதமர் மோடி எல்லோரிடமும் தான் ஓபிசி என்று கூறிக்கொள்கிறார். நான் சாதிவாரி கணக்கெடுப்பைப் பற்றி பேச ஆரம்பித்தபோது, சாதி என்பதே இல்லை; பணக்காரர், ஏழைகள் என இரண்டே சாதிகள் மட்டும்தான் இருக்கின்றன என்று சொன்னார்.

சாதிவாரி கணக்கெடுப்பை எடுத்தால், நாட்டில் உள்ள ஏழைகள் ஓபிசி, பட்டியலின மற்றும் பழங்குடியன மக்களாகத்தான் இருப்பார்கள். சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனது அரசியல் அல்ல, என் வாழ்க்கையின் நோக்கம். நான் உறுதியளிக்கிறேன். எந்த சக்தியாலும் சாதிவாரி கணக்கெடுப்பை தடுக்க முடியாது. அப்படி மேலும் மேலும் தடுக்கப்பட்டால், அது இன்னும் பெரிய சக்தியாகவே திரும்ப வரும். ஏனெனில், 90 சதவீத மக்களுக்கு நியாயம் கிடைத்தே தீர வேண்டும்.

நீங்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை விரும்புகிறீர்களா? அப்படியானால், காங்கிரஸின் தேர்தல் அறிக்கையைப் பார்த்து பிரதமர் பதற்றம் அடைந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஏனெனில், அது புரட்சிகரமான தேர்தல் அறிக்கை” என்று ராகுல் காந்தி பேசினார்.

பிரதமர் மோடி குற்றச்சாட்டு: இதனிடையே, “எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி மக்களின் உரிமைகளை காங்கிரஸ் கட்சி பறிக்க நினைக்கிறது. எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி இட ஒதுக்கீட்டில் 15 சதவீதத்தை மத அடிப்படையில் வழங்க காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது” என்று சத்தீஸ்கர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். | விரிவாக வாசிக்க > மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் திட்டம்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

அதேவேளையில், “காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் ஆதரித்த கருத்துகளை, மோடியால் சுட்டிக்காட்ட முடியுமா?” என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். வாசிக்க > “காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை களங்கப்படுத்துகிறார் மோடி” - ப.சிதம்பரம் கண்டனம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்