“காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை களங்கப்படுத்துகிறார் மோடி” - ப.சிதம்பரம் கண்டனம்

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்
Updated on
1 min read

புதுடெல்லி: “காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் ஆதரித்த கருத்துகளை, மோடியால் சுட்டிக்காட்ட முடியுமா?” என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த வாரம் ராஜஸ்தானில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சி இந்துக்களின் சொத்துகளை ஊடுருவல்காரர்களுக்கு பிரித்துக் கொடுத்துவிடும்” என்று விமர்சித்திருந்தார். அதற்கு காங்கிரஸ், இண்டியா கூட்டணிக் கட்சிகள் பரவலாக எதிர்வினையாற்றி வருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று (புதன்கிழமை) சிம்லாவில் செய்தியாளர்களிடத்தில் பேசுகையில், “காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் ஆதரித்த கருத்துகளை, மோடியால் சுட்டிக்காட்ட முடியுமா?. அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர்கள் மற்றும் ஏழைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கான நீதி வழங்கும் திட்டங்கள் காங்கிரஸ் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

காங்கிரஸின் தேர்தல் அறிக்கை, தமிழகத்தின் தொலைதூர கிராமங்களைக் கூட சென்றடைந்துள்ளது. அதோடு நாடு முழுவதும் பேசு பொருளாகவும் மாறியுள்ளது. ஆனால் பாஜக தேர்தல் அறிக்கை 2 மணி நேரத்தில் சுவடு தெரியாமல் காணாமல் போனது. அதில் எதுவும் இல்லை என்பதால் யாரும் அதைப் பற்றி பேசுவதில்லை.

மோடியின் கேரண்டி அரசியல் கட்சியின் அறிக்கையாக இருக்க முடியாது, எனவே அவர் (பிரதமர் மோடி) காங்கிரஸ் அறிக்கையை பார்த்து பொறாமை கொள்கிறார். எனவே அவர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை களங்கப்படுத்துகிறார். முதலில் பிரதமர் மோடி, காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை முழுமையாகப் படிக்குமாறு வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in