மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு: வாக்குச்சாவடிகளை கைப்பற்ற முயற்சி

By செய்திப்பிரிவு

இம்பால்: இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் நேற்று மக்களவை தேர்தலின்போது துப்பாக்கிச்சூடு, வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் முயற்சி, மின்னணு இயந்திரங்கள் உடைப்பு என வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதனால், பல வாக்குச்சாவடிகளில் தேர்தல் நிறுத்தப்பட்டது.

மணிப்பூரில் சமவெளி பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் மைதேயி சமூகத்தினருக்கும் மலைப் பகுதிகளில் வசிக்கும் குகி-சோ பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டு, இனக்கலவரமாக வெடித்தது.

இந்த கலவரத்தில் 210-க்கும்மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர். மாநிலத்தில் அமைதி இன்னும் முழுமையாக திரும்பவில்லை.

மணிப்பூரில் உள் மணிப்பூர், வெளி மணிப்பூர் என 2 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் உள் மணிப்பூர் மக்களவை தொகுதியில் முழுமையாகவும், வெளி மணிப்பூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 15 சட்டப்பேரவை தொகுதிகளிலும் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஆவணங்கள் தீக்கிரை: இந்நிலையில், மணிப்பூர் பள்ளத்தாக்கில் வாக்குச்சாவடிகளுக்கு அருகே 2 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்தன. கிழக்கு இம்பாலில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மதியம் 2 மணி அளவில் ஆயுதமேந்திய ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 65 வயது நபர் ஒருவர் காயம் அடைந்தார். பிறகு, இங்கு வாக்குச்சாவடி சேதப்படுத்தப்பட்டு, ஆவணங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுபோல, விஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள தமன்போக்பி என்ற இடத்தில் நேற்று மற்றொரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது.

இந்த 2 இடங்களும் உள்மணிப்பூர் தொகுதியில் அமைந்துள்ளன. இந்த தொகுதி பெரும்பாலும் மைதேயி சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளை உள்ளடக்கியது ஆகும். பள்ளத்தாக்கில் உள்ள பல்வேறு வாக்குச் சாவடிகளில் நாள் முழுவதும் ஆயுதமேந்திய நபர்கள் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் பழமைவாத மைதேயி ஆயுதக் குழுவை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது.

கிழக்கு இம்பாலில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் போலீஸாருடன் காங்கிரஸ் வேட்பாளர் பிமோல் அகோஜம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இங்கு காங்கிரஸ் முகவர்கள் அச்சுறுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

கிழக்கு இம்பால் தோங்ஜூவில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் அடித்து உடைக்கப்பட்டது, மேற்கு இம்பால் உரிபோக் பகுதியில் வாக்குச்சாவடி சூறையாடப்பட்டது. இத்தகவல்களை மணிப்பூர் தலைமை தேர்தல் அதிகாரி பிரதீப் குமார் ஜா உறுதிப்படுத்தினார்.

முகவர்களுக்கு மிரட்டல்: “இதுதவிர, மேற்கு இம்பாலில் சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள், முகவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் வாக்குச் சாவடியை கைப்பற்றும் முயற்சி நடந்ததாகவும் புகார்கள் வந்துள்ளன” என்றும் அவர் கூறினார்.

தேர்தல் நிறுத்தம்: வன்முறை சம்பவங்கள் நடந்த வாக்குச்சாவடிகளில் தேர்தல் நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே, வெளி மணிப்பூர் தொகுதியில் உள்ள காங்போக்பி மாவட்டத்தில் தேர்தலை புறக்கணிக்குமாறு பல்வேறு குகி அமைப்புகள் அழைப்பு விடுத்ததால் அங்கு வாக்குப்பதிவு விகிதம் குறைவாக இருந்தது.

மணிப்பூரில் காலை 11 மணிநிலவரப்படி 27.64 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தாலும், காங்போக்பியில் இது 12 சதவீதமாக இருந்தது. நாகா மக்கள், நேபாளிகள் போன்ற பிற சமூகங்கள் வசிக்கும் பகுதிகளில் வாக்குப்பதிவு அதிகமாக இருந்ததாக தேர்தல் அதிகாரிகள் கூறினர்.

வெளி மணிப்பூரின் எஞ்சிய 13 சட்டப்பேரவை தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு வரும் 26-ம் தேதி நடைபெற உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

24 mins ago

இந்தியா

27 mins ago

வேலை வாய்ப்பு

39 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்