வயநாட்டில் காங்கிரஸ் ‘கொடி' பறக்காதது ஏன்?

By செய்திப்பிரிவு

அந்த தொகுதியின் எம்பியாக பதவி வகிக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயற்குழு உறுப்பினர் ஆனி ராஜா, பாஜக சார்பில் அதன் மாநிலத் தலைவர் சுரேந்திரன் களமிறங்கி உள்ளனர்.

கடந்த 3-ம் தேதி வயநாடு மாவட்ட தலைநகர் கல்பேட்டையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் ராகுல் காந்தி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது தொண்டர்கள் புடைசூழ வாகனத்தில் அவர் ஊர்வலமாக சென்றார். அவரது ஊர்வலத்தில் காங்கிரஸ் கொடியோ, அதன் கூட்டணி கட்சியான முஸ்லிம் லீக்கின் கொடியோ தென்படவில்லை.

இதுகுறித்து கேரள முதல்வரும் மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன் கூறும்போது, “ராகுல் காந்தியின் பிரச்சாரத்தில் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக்கின் கொடிகளை ஒளித்து வைத்து விட்டனர். பிரச்சாரத்தில் கொடியை பயன்படுத்தக்கூட காங்கிரஸுக்கு துணிச்சல் இல்லை. இந்த கட்சியால் எப்படி சங்பரிவாருக்கு எதிரான போரை முன்னெடுத்துச் செல்ல முடியும்" என்று கேள்வி எழுப்பினார்.

கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் கடந்த 4-ம் தேதி கல்பேட்டையில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது நாலாபுறமும் பாஜக கொடிகள் பறந்தன.

பாஜக விமர்சனம்: வேட்புமனு தாக்கலின்போது உடனிருந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறும்போது, “வடமாநிலங்களில் கோயில், கோயிலாக ராகுல் காந்தி சுற்றித் திரிகிறார். ஆனால் கேரளாவில் தடை செய்யப்பட்ட பிஎப்ஐ அமைப்பின் ஆதரவை அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். வயநாடு தேர்தல் பிரச்சாரத்தில் கொடிகளை மறைத்து முஸ்லிம் லீக் உடனான கூட்டணியை மறைக்க ராகுல் காந்தி முயற்சி செய்கிறார். அவரது முயற்சி பலிக்காது" என்று விமர்சித்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஹாசன் கூறும்போது, “வயநாடு மக்களவைத் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கொடியை பயன்படுத்த மாட்டோம். கட்சியின் சின்னத்தை மட்டுமே பயன்படுத்துவோம்" என்றார். இதற்கான காரணத்தை நிருபர்கள் கேட்டபோது, அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறும்போது, “கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரத்தின்போது கூட்டணி கட்சியான முஸ்லிம் லீக்கின் பச்சை வண்ண கொடி பிரதானமாக இடம்பெற்றது. இதை பாகிஸ்தான் கொடி என்றும் இந்தியாவில் மினி பாகிஸ்தானை ராகுல் உருவாக்குகிறார் என்றும் சமூக வலைதளங்களில் பாஜக வதந்தி பரப்பியது.

இது காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அமேதியில் ராகுல் தோல்வி அடைந்ததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும். இதை கருத்தில்கொண்டு தற்போது வயநாடு தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடிகளை பயன்படுத்தவில்லை. ஆனால் இப்போதும் கூட 2019-ம் ஆண்டு புகைப்படம், வீடியோக்களை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்தன.

கல்பேட்டை காங்கிரஸ் எம்எல்ஏ சித்திக் கூறும்போது, “கடந்த 3-ம் தேதி ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தபோது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். கட்சி கொடிகளை பயன்படுத்தக்கூடாது. சர்ச்சைக்குரிய கோஷங்களை எழுப்பக்கூடாது என்று முன்கூட்டியே அறிவுறுத்தினோம். எங்களது தொண்டர்களும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்களும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டனர்" என்றார்.

கேரள அரசியல் நோக்கர்கள் கூறும்போது, “எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் காங்கிரஸும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. ஆனால் கேரளாவில் இருதரப்பும் நேருக்குநேர் மோதுகின்றன. இது இரு கட்சிகளுக்கும் பின்னடைவை ஏற்படுத்தும். ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது காங்கிரஸின் ‘கொடி' அரசியலுக்கான தெளிவான பதில் கிடைக்கும்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 mins ago

தமிழகம்

12 mins ago

இந்தியா

8 mins ago

க்ரைம்

39 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்