தற்காப்புக்குச் சுட்டோம்: உ.பி.யில் 48 மணி நேரத்தில் 18 என்கவுண்ட்டர்கள்; மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

By செய்திப்பிரிவு

48 மணிநேரத்தில் குறைந்தது 18 என்கவுண்டர்களை நடத்தியுள்ளது உத்தரப் பிரதேச காவல்துறை. இதில் 25 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த என்கவுண்டர்கள் குறித்து மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மேலும் தலைக்கு ரூ.25,000 விலை வைக்கப்பட்ட மிகப்பெரிய குற்றவாளி முசாபர் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சிறப்புக் காவல் படையினர் காஜியாபாத்தைச் சேர்ந்த குற்றவாளி இந்த்ரபால் என்பவரை சுட்டுக் கொன்றனர். இவருக்கு எதிராக 33 கொலை வழக்குகள் உள்ளன. 2013-ம் ஆண்டு ஹரித்வாரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்த்ரபால் சுட்டதில் போலீஸ் ஒருவர் பலியானார். என்கவுண்டரின் போதும் இந்தரபால் சிறப்பு அதிரடிப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் 2 போலீஸார் காயமடைந்தனர்.

இந்த என்கவுண்டர் அதிகாலை 2 மணிக்கு நடந்துள்ளது. ஆனாலும் பல கிரிமினல்கள் தப்பிவிட்டதாக சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளியன்று நடைபெற்ற இன்னொரு என்கவுன்ட்டரில் 2 கிரிமினல்கள் கைது செய்யப்பட்டனர். தினேஷ் குப்தா என்ற தொழிலதிபரைக் கொலை செய்ததை இருவரும் ஒப்புக் கொண்டனர்.

அடிக்கடி நடக்கும் இத்தகைய என் கவுன்ட்டர்களை நியாயப்படுத்தும் விதமாக புதிதாக நியமிக்கப்பட்ட டிஜிபி ஒ.பி.சிங், ‘என்கவுண்டர்கள் நடக்கவே செய்யும், காரணம் குற்றவாளிகளை நாங்கள் பிடித்தாக வேண்டும். நாங்கள் தற்காப்புக்காகவே சுடுகிறோம்’ என்றார்.

முதல்வராக பாஜகவின் யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பிறகு ஓராண்டுக்குள் சுமார் 950 என்கவுண்ட்டர்கள் நடைபெற்றுள்ளன. 200 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த என்கவுண்ட்டர்களை தாங்களாகவே கவனமேற்ற மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

ஆனால் ஒவ்வொரு என்கவுண்ட்டருக்கு முன்பாகவும் நீதித்துறை மட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்று உ.பி. அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் மதுரா அருகே போலீஸாருக்கும் கிரிமினல்களுக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சிக்கி 8 வயது சிறுவன் பலியானது கடும் கண்டனங்களைக் கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்