அயோத்தியில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் சமரச விவகாரம்: இந்து தரப்பு பரிந்துரை முஸ்லீம்களுக்கு அனுப்பப்பட்டது

அயோத்தி விவகாரத்தில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதில் இந்து தரப்பு  பரிந்துரையை முதன்முறையாக இன்று முஸ்லீம்களுக்கு அனுப்பப்பட்டது.

வாழும்கலை அமைப்பின் நிறுவனரான ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அயோத்தி விவகாரத்தை கடந்த வருடம் அக்டோபரில் கையில் எடுத்தார்.

இதில் அனைத்து தரப்பினருடன் சமரசம் பேசி ராமர் கோயில்-பாபர் மசூதி பிரச்சினை சுமூகமாக முடிக்க முயன்று வருகிறார். இவருக்கு சில இந்து அமைப்பினர் மற்றும் உபி மத்திய ஷியா வக்பு வாரியத்தின் தலைவரான வசீம் ரிஜ்வி ஆகியோர் ஆதரவளித்து வருகின்றனர்.

கடந்த நவம்பரில் அயோத்தி மற்றும் லக்னோவிற்கு நேரில் சென்ற ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அங்கு இந்து மற்றும் முஸ்லீம் தரப்பினருடன் உத்தரப் பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் சந்தித்து பேசி  இருந்தார்.

இதையடுத்து, இந்துக்கள் தரப்பில் இருந்து பரிந்துரை முதலில் அனுப்பப்பட வேண்டும் எனவும், அதன் பிறகு  அதன் மீது பரிசீலனை செய்வதாகவும் அகில இந்திய முஸ்லீம் தனிச்சட்ட வாரியத்தினரால் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்துக்கள் தரப்பில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) முதன்முறையாக எட்டு பக்க பரிந்துரை அகில இந்திய முஸ்லீம் தனிச்சட்ட வாரியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ’அயோத்யா சம்பவ்னா சாம்னிவாய் மஹா சமிதி’ எனப் பெயரிடப்பட்ட  அமைப்பின் பெயரில் அதன் பொதுச்செயலாளர் அமர்நாத் மிஸ்ரா அனுப்பியுள்ளார்.

தனிச்சட்ட வாரியத்தில் தலைவரான மவுலானா ரபே ஹசன் நத்வீக்கு அனுப்பப்பட்டுள்ளதன் நகல் பிரதமர் நரேந்திர மோடி, உபி முதல்வர் யோகி உட்பட எட்டு பேருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் முஸ்லீம் தனிச்சட்ட வாரியத்தின் நிர்வாகிகள் தரப்பு கூறும்போது, ‘பிரச்சினைக்குரிய இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்காக இந்துக்களிடம் முஸ்லீம்கள் ஒப்படைக்க வேண்டும் எனவும், அங்கிருந்த பாபர் மசூதியை அயோத்தியின் வேறு இடத்தில் அமைக்க நிர்மோஹி அகாடாவினர் நிலம் அளிப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று ஐதராபாத்தில் துவங்கும் எங்கள் பொதுக்குழுவில் விவாதிக்கப்படும்.’ எனத் தெரிவித்தனர்.

கடந்த நவம்பர் 1-ல் அயோத்தி சென்ற ஸ்ரீஸ்ரீரவிசங்கர், இந்து தரப்பில், விஹெச்பி ஆதரவு பெற்றவருமான ஸ்ரீராமஜென்ம பூமி கோயில் அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் நிருத்திய கோபால் தாஸ், ராமர் கோயில் மனுதாரர்களில் ஒருவரான  நிர்மோஹி அகாடாவின் சாது தீரேந்தர தாஸ் உட்பட சிலருடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.

முஸ்லீம்களின் தரப்பில், பாபர் மசூதி தரப்பு மனுதாரர்களான இக்பால் அன்சாரியின் வீட்டிற்கே ஸ்ரீஸ்ரீ சென்றிருந்தார். அதன் மற்றொரு மனுதாரரான ஹாஜி மஹபூப்கானையும் ஸ்ரீஸ்ரீ சந்தித்து பேசி இருந்தார். லக்னோவில் பிராங்கிமஹால் இஸ்லாமிய நிறுவனத்தின் பொறுப்பாளரும் அகில இந்திய முஸ்லீம் தனிச்சட்ட வாரியத்தின் நிர்வாகக்குழு உறுப்பினருமான மவுலானா காலீத் ரஷீதையும் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் லக்னோவில் சந்தித்தார். ஆனால், இந்த இருதரப்பு சந்திப்புகளும் மரியாதை நிமித்தம் நடைபெற்றதாகக் கூறப்பட்டது.

பாபர் மசூதி தரப்பின் மனுதாரர்கள் அனைவரும் வழக்கை தொடருவதில் அகில இந்திய முஸ்லீம் தனிச்சட்ட வாரியத்தின் ஆலோசனைகள் பெற்று செயல்பட்டு வருகின்றனர். இந்த வாரியம் இந்தியாவில் உள்ள சன்னி முஸ்லீம் தரப்பினரின் உயரிய  அமைப்பாகக் கருதப்படுகிறது. தற்போது முஸ்லீம் தரப்பிற்காக வாரியத்திற்கு அனுப்பப்பட்டுள்ள பரிந்துரையில் எடுக்கப்படும்

நடவடிக்கையை பொறுத்து சமரசப் பேச்சுவார்த்தையின் அடுத்தகட்டம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்