சத்தீஸ்கர் மாநில புதிய முதல்வராக பழங்குடியினத் தலைவர் விஷ்ணு தியோ சாய் தேர்வு

By செய்திப்பிரிவு

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல்வராக பழங்குடியின தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான விஷ்ணு தியோ சாய், தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்று ஒரு வாரத்துக்கும் மேலாக நிலவி வந்த சஸ்பென்ஸுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 54 இடங்களில் புதிதாக தேர்ந்தெடுக்ப்பட்ட பாஜக எம்எல்ஏக்களின் முக்கியக் கூட்டம் ராய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் விஷ்ணு தியோ சாயை முதல்வராக தேர்ந்தெடுக்கும் முடிவு எடுக்கப்பட்டதாகவும், பழங்குடி மக்கள் அதிகம் உள்ள மாநிலத்தில், பழங்குடியினத்தைத் சேர்ந்த ஒருவர் முதல்வராக இருக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கருத்துப்படியும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நடந்து முடிந்த சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் குங்குரி தொகுதியில் போட்டியிட்ட விஷ்ணு தியோ சாய், 87,604 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். 59 வயதாகும் விஷ்ணு தியோ, பாஜகவின் சித்தாந்த வழிகாட்டியான ஆர்எஸ்எஸ் அமைப்பால் மிகவும் விரும்பப்படுபவர். மேலும் மாநிலத்தின் செல்வாக்கு மிகுந்த பாஜக தலைவரான முன்னாள் முதல்வர் ராமன் சிங்குக்கு மிகவும் நெருக்கமானவர்.

பிரதமர் நரேந்திர மோடியின் முதல் அமைச்சரவையில் எஃகு துறை இணை அமைச்சாராகவும், 16 வது மக்களவையில் சத்தீஸ்கரின் ராய்கர் தொகுதி எம்.பி.யாகவும் இருந்துள்ளார். கடந்த 2020 - 2023-ல் சத்தீஸ்கர் மாநில பாஜக தலைவராகவும் விஷ்ணு தியோ சாய் இருந்துள்ளார்.

முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து விஷ்ணு தியோ சாய் கூறுகையில், "இன்று பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். என்மீது நம்பிக்கை வைத்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மோடியின் வாக்குறுதியின் கீழ் சத்திஸ்கர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக முழுமனதுடன் பாடுபடுவேன். மாநிலத்தின் முதல்வராக அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற பாடுபடுவோம். மக்களுக்கு 18 லட்சம் வீடுகள் வழங்குவதுதான் முதல் வேலை" என்று தெரிவித்தார்.

முன்னதாக, நடந்து முடிந்த சத்தீஸ்கர் மாநிலத் தேர்தலில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 54 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து மாநிலத்தில் புதிய முகத்தை முதல்வராக்க மத்திய தலைமை விரும்பியது. மூன்று மாநில முதல்வர்களைத் தேர்ந்தெடுப்பதில் கட்சி, சமூக, பிராந்திய நலன்களைக் கவனத்தில் கொள்வதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, சர்பானந்த சோனோவால் மற்றும் துஷ்யந்த கவுதம் ஆகியோரை மத்திய பார்வையாளர்களாக பாஜக தலைமை கடந்த 8ம் தேதி நியமித்ததது. இவர்கள் மாநிலத்துக்குப் பயணம் செய்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களின் கூட்டங்களை மேற்பார்வையிடுவார்கள் என்று கூறப்பட்டது. அதன்படி சத்தீஸ்கர் மாநில பார்வையாளர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை ராய்பூர் வந்து பாஜகவின் புதிய எம்எல்ஏக்களின் கூட்டத்தில் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

31 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

இணைப்பிதழ்கள்

3 hours ago

மேலும்