இந்தியா

மணிப்பூர் நிலவரம் முதல் என்ஐஏ சோதனை வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ செப்.27, 2023

செய்திப்பிரிவு

‘அடுத்த 2 ஆண்டுகளில் அரசுப் பணிகளுக்கு 50,000 பேர் தேர்வு’: "கடந்த இரண்டு ஆண்டு காலத்தில், 12,576 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. தற்போது 10,205 நபர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, நடப்பாண்டில், மேலும் 17,000 பேருக்கு பல்வேறு அரசுப் பணிகள் வழங்கப்பட உள்ளது . அடுத்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு அரசுப் பணிகளுக்கு சுமார் 50,000 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்" என்று டிஎன்பிஎஸ்சி பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வன்முறையைத் தூண்ட பாஜக முயற்சி: கே.எஸ்.அழகிரி: “காவிரி விவகாரத்தை கர்நாடக பாஜக அரசியலாக்கும் முயற்சியில் இரண்டு மாநில மக்களுக்கிடையே வன்மத்தையும், வன்முறையையும் தூண்டிவிட முயற்சிக்கிறது. செவ்வாய்க்கிழமை போராட்டத்தின்போது, தமிழக முதல்வர் படத்துக்கு அவமரியாதை செய்தவர்கள் மீது கர்நாடக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

இதனிடையே, காவிரி மேலாண்மை வாரிய உத்தரவை கர்நாடக காங்கிரஸ் அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் மாணிக்கம் தாக்கூர் எம்.பி கூறியுள்ளார்.

‘டல்’ சிட்டியான திருப்பூர்: முதல்வர் மீது இபிஎஸ் சாடல்: "திருப்பூரை டல் சிட்டியாக மாற்றிய பெருமை முதல்வர் ஸ்டாலினையே சாரும். சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினரை குழிதோண்டிப் புதைக்கும் நோக்கிலேயே அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவது கடும் கண்டனத்துக்குரியது. எனவே, உடனடியாக மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

“தொகுதி மறுவரையறை செய்தால் தமிழகத்துக்கு பாதிப்பு”: "தொகுதி மறுவரையறை செய்தால் மிகப் பெரிய அளவில் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும். தமிழகத்துக்கு 8 எம்பிக்கள் குறையலாம். மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எம்பிக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

‘உலகப் பொருளாதார சக்தியாக இந்தியா விரைவில் உருவெடுக்கும்’: துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாட்டின் 20 ஆண்டு நிறைவைக் குறிக்கும் விழாவில் பேசிய பிரதமர் மோடி, "2014-க்குப் பிறகு, உலகின் வளர்ச்சிக்கான இயந்திரமாக இந்தியாவை மாற்றும் நோக்கில் நாம் தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். இந்தியா விரைவில் உலகப் பொருளாதார சக்தியாக உருவெடுக்கும் ஒரு கட்டத்தில் நாம் நிற்கிறோம்” என்று பேசினார்.

காவிரி: மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாட கர்நாடகா முடிவு: காவிரி ஒழுங்காற்று குழு அளித்துள்ள பரிந்துரையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலம் முழுவதும் ‘கலவரப் பகுதி’யாக அறிவிப்பு: மணிப்பூரில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதையும் 'கலவரப் பகுதி’ ஆக அம்மாநில அரசு அறிவித்தது. தலைநகர் இம்பால் உள்ளிட்ட 19 காவல் நிலையங்கள் உள்ள பகுதிகளைத் தவிர மாநிலம் முழுவதும் இந்நிலை 6 மாதங்களுக்கு அமலில் இருக்கும்.

மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் மைத்தி மற்றும் குக்கி இன மக்களிடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை நீடித்து வருகிறது. வன்முறைச் சம்பவங்களில் 170 பேர் கொல்லப்பட்டனர். பலர் காணாமல் போயினர். கலவரத்தில் காணாமல் போனவர்களில் ஹிஜம், ஹேம்ஜித் இரு மாணவர்களும் அடக்கம்.

இந்நிலையில், மாணவர்கள் இருவரும் முகாம் ஒன்றில் புல் தரையில் உட்கார வைக்கப்பட்டு அவர்களுக்கு பின்னால் ஆயுதம் ஏந்தி சிலர் நிற்கும் காட்சிகளும் பின்னர், இரு மாணவர்களும் கொல்லப்பட்டு கிடப்பதுமான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டக்களத்தில் இறங்கியதை அடுத்து கொந்தளிப்பான சூழல் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கான முதல்படியாக திறமையற்ற முதல்வரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா சார்பில் ஆஸ்கர் விருது போட்டிக்கு ‘2018’ தேர்வு: டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி வரவேற்பை பெற்ற ‘2018’ மலையாள திரைப்படம், இந்தியா சார்பில், சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட பிரிவுக்கான ஆஸ்கர் விருது போட்டிக்கு அதிகாரபூர்வமாக தேர்வாகியுள்ளது.

‘ஹர்தீப் கொலை பற்றி எங்களிடம் கேள்வி கேட்பது பொருத்தமற்றது’: "நான் The Five Eyes புலனாய்வு அமைப்பைச் சார்ந்தவர் இல்லை. நான் எஃப்பிஐ அமைப்பைச் சார்ந்தவரும் இல்லை. அதனால் நீங்கள் கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை செய்யப்பட்டது பற்றிய கேள்வியை என்னிடம் கேட்பது பொருத்தமற்றது” என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் காட்டமாகத் தெரிவித்துள்ளார். நியூயார்க் நகரில் நடந்த வெளியுறவு கூட்டமைப்பு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெய்சங்கரிடம் காலிஸ்தான் தீவிரவாதி பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு இவ்வாறு அவர் பதில் அளித்துள்ளார்.

50 இடங்களில் என்ஐஏ சோதனை:பஞ்சாப், ஹரியாணா, டெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை புதன்கிழமை நடத்தியது. காலிஸ்தான் பிரிவினைவாத குழுக்களுடன் தொடர்புடைய இடங்களைக் குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT