

அகமதாபாத்: உலகப் பொருளாதார சக்தியாக இந்தியா விரைவில் உருவெடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாட்டின் 20 ஆண்டு நிறைவைக் குறிக்கும் விழாவில் பேசிய மோடி, "20 ஆண்டுகளுக்கு முன்பு "துடிப்புமிக்க குஜராத்" என்ற சிறிய விதை விதைக்கப்பட்டது. அது இன்று மிகப் பெரிய மரமாக வளர்ந்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக்கான இயந்திரமாக குஜராத்தை மாற்ற வேண்டும் என்ற நோக்கோடு "துடிப்புமிக்க குஜராத்" அறிமுகப்படுத்தப்பட்டது. 2014-க்குப் பிறகு, உலகின் வளர்ச்சிக்கான இயந்திரமாக இந்தியாவை மாற்றும் நோக்கில் நாம் தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
இந்தியா விரைவில் உலகப் பொருளாதார சக்தியாக உருவெடுக்கும் ஒரு கட்டத்தில் நாம் நிற்கிறோம். இன்னும் சில ஆண்டுகளில், உங்கள் கண்களுக்கு முன்பாக, உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருக்கும். இது எனது உத்தரவாதம். துடிப்புமிக்க குஜராத் என்ற பெயரில் எளிய முறையில் நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கினோம். பின்னர் அது நிறுவனமாக மாறியது. குஜராத் அரசின் இந்த முயற்சியை அடுத்து பல்வேறு மாநிலங்களும் முதலீட்டை ஈர்ப்பதற்கான நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கின.
ஒவ்வொரு முயற்சியும் மூன்று நிலைகளைக் கடந்து செல்லும் என்று சுவாமி விவேகானந்தர் கூறி இருக்கிறார். முதலில் அது கேலி செய்யப்படும்; பின்னர் அது எதிர்ப்பை எதிர்கொள்ளும்; இறுதியாக அது ஏற்கப்படும். முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தொழில்துறை முன்னேற்றத்தில் அலட்சியமாக இருந்த சமயத்தில், துடிப்புமிக்க குஜராத் வெற்றிகரமாக செயல்பட்டது" என தெரிவித்தார்.