சட்டவிரோதமாக சேர்க்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு இழப்பீடு: 150 மாணவருக்கு தலா ரூ.10 லட்சம் - லக்னோ மருத்துவக் கல்லூரிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட 150 மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதால் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தனியார் மருத்துவக் கல்லூரிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பிரசாத் கல்வி அறக்கட்டளையைச் சேர்ந்த மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்த இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதிக்கவில்லை. இதுதொடர்பான வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரித்து வந்தது. ஆனால், எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்று உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. ஆனால், மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.

இதுதொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம்.கான்வில்கர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி அலகாபாத் உயர் நீதிமன்றம் மாணவர் சேர்க்கைக்கு உத்தரவிட்டது துரதிருஷ்டவசமானது. இதனால் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட 150 மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கல்லூரி கட்டணத்தையும் தலா ரூ.10 லட்சம் இழப்பீட்டையும் மருத்துவ கல்லூரி வழங்க வேண்டும். அத்துடன் ரூ. 25 லட்சம் அபராதத்தை உச்ச நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும். மேலும், 2018 - 19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு இந்த நீதிமன்றம் தடை விதிக்கிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

முன்னதாக இந்திய மருத்துவக் கவுன்சில் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் வாதிடும்போது, ‘‘மத்திய அரசிடம் இருந்து லக்னோ மருத்துவக் கல்லூரி முறைப்படி அனுமதி பெறவில்லை. அங்கு உள்கட்டமைப்புகளும் இல்லை. அப்படி இருந்தும் மாணவர் சேர்க்கைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், இதுதொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவையும் கவனத்தில் கொள்ளவில்லை’’ என்றார்.

லக்னோ மருத்துவக் கல்லூரிக்கு சாதகமாக உத்தரவு கிடைக்க சட்ட உதவி செய்ததாக ஓய்வு பெற்ற நீதிபதி குட்டூசி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து குட்டூசியை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்