தெலங்கானா ஆளில்லா லெவல் கிராசிங்கில் பயங்கரம்: பள்ளி பஸ் மீது ரயில் மோதி 17 மாணவர்கள் பலி

By செய்திப்பிரிவு

தெலங்கானா மாநிலம் மேதக் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற பள்ளி பஸ் மீது ரயில் மோதி 17 மாணவர்கள் உயிரிழந்தனர்.பள்ளி பஸ் டிரைவரும் கிளீனரும் அதே இடத்தில் பலியாயினர். அவர்களையும் சேர்த்து மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 மாணவர்கள் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மாற்று டிரைவர்

தெலங்கானா மாநிலம் மேதக் மாவட்டம் சேகுண்டா மண்டலம் துருபான் பகுதியில் காகதீயா டெக்னோ என்ற தனியார் பள்ளி உள்ளது. நர்ஸரி முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பள்ளி பஸ்கள் மூலம் மாணவ, மாணவர்களை அழைத்து வருவது வழக்கம்.

வியாழக்கிழமை காலை பஸ் டிரைவர் வராத காரணத்தால் டிராக்டர் டிரைவர் பிக்‌ஷபதி என்பவரை பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இவர் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து மாணவ, மாணவர்களை பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு இஸ்லாம்பூர் பகுதியில் இருந்து பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார்.

செல்போன் பேச்சால் விபரீதம்

மசாய்பேட்டை அருகே வந்தபோது செல்போனில் பேசியபடி டிரைவர் பஸ்ஸை ஓட்டி உள்ளார். அங்குள்ள ஆளில்லா லெவல் கிராசிங் அருகே வந்தபோது நாந்தேட்-ஹைதராபாத் பயணிகள் ரயில் வந்து கொண்டிருந்தது.

ரயில் வருவதற்குள் தாண்டிவிடலாம் என எண்ணிய டிரைவர் வேகமாக பஸ்ஸை ஓட்டியுள் ளார். ஆனால் தண்டவாளத்தை கடந்தபோது வேகமாக வந்த ரயில் பள்ளி பஸ் மீது மோதி சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரை இழுத்துச் சென்றது.

இந்த கோர விபத்தில் 11 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். டிரைவர் பிக்‌ஷபதி, கிளீனர் தனுஷ்கோடியும் அதே இடத்தில் பலியாயினர். பலத்த காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்ட 6 மாணவர்கள் சிறிது நேரத்தில் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

19 பேர் படுகாயம்

இந்த விபத்தில் 19 மாணவர்கள் படுகாயமடைந்தனர். ஆபத்தான நிலையில் உள்ள அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

சுமார் 10 ஆம்புலன்ஸ்கள், 4 தீயணைப்பு படைகள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. அருகில் உள்ள கிராம மக்களும் மீட்புப் பணியில் உதவியாகச் செயல்பட்டனர்.

பெற்றோர் முற்றுகை

முன்னதாக மேதக் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சரத், போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு மீட்புப் பணிகளை விரைவுபடுத்தினர். தண்டவாள பகுதியில் பள்ளி பைகள், தண்ணீர் பாட்டில்கள், டிபன் பாக்ஸ்கள், புத்தகங்கள் சிதறிக் கிடந்தன. இதை பார்த்த தாய்மார்கள் மயங்கி விழுந்தனர்.

மாணவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக போலீஸார் கொண்டு செல்ல முயன்றபோது பெற்றோர், உறவினர்கள் தடுத்தனர். போலீஸ் ஜீப், ஆம்புலன்ஸ்களை மறித்தனர். இதனால் போலீஸா ருக்கும் கிராமத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த இடத்தில் ரயில்வே கேட் அமைக்கும்படி பலமுறை கூறியும் அலட்சியப் போக்கால் கேட் அமைக்காததால் இன்று எங்கள் பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர் என கதறிய பெற்றோர் அதிகாரிகளை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி கிராம மக்களைக் கலைத்து உடல்களை பிரேத பரிசோத னைக்காக மேதக் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

ரூ.5 லட்சம், அரசு வேலை

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்கப் படும் என்று தெலங்கானா அரசு அறிவித்துள்ளது. மேலும் குடும்பத் தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்கப்படும் என்றும் அரசு உறுதியளித்துள்ளது. காயமடைந்தோ ருக்கு தலா ரூ. 20 ஆயிரமும் இலவச மாக மருத்துவச் சிகிச்சை அளிக்கப் படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பங் களுக்கு ரயில்வே சார்பில் தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.20 ஆயிரமும் வழங்கப்படும் என்று அத்துறை அமைச்சர் சதானந்த கவுடா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அறிவித்தார்.

முதல்வர் ஆறுதல்

தெலங்கானா முதல்வர் கே. சந்திர சேகர ராவ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்த சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஆளுநர் நரசிம்மன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்