ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளை வளைக்கப்பட்டது எப்படி? - வருமான வரித் துறையின் பிடியில் சிக்கிய செந்தில் அன்ட் கோ

By இரா.வினோத்

ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளையான வழக்கறிஞர் செந்திலும், அவருக்கு நெருக்கமானவர்களும் வருமான வரித் துறையால் வளைக்கப்பட்டது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தோடு பார்க்கப்படுகிறது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை முழுமையாக கவனித்து வந்தவர் வழக்கறிஞர் செந்தில். நாமக்கல்லில் பிரபல வழக்கறிஞரான சண்முகத்தின் மகனான இவர், சேலம் சட்டக் கல்லூரியில் படித்தவர். தன் தந்தையைப் போல நில அபகரிப்பு, சொத்து விவகாரம் உள்ளிட்ட வழக்குகளை சேலம், நாமக்கல், கரூர் ஆகிய நீதிமன்றங்களில் கவனித்து வந்தார்.

சேலம் - மதுரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின்போது ஆயிரக்கணக்கானோரின் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது செந்தில் மும்முரமாக செயல்பட்டு நூற்றுக்கணக்கான வழக்குகளைப் பிடித்து, அதில் இழப்பீடு தொகைப் பெற்றுக்கொடுத்ததில் பெருந்தொகையை கமிஷனாக பெற்றார். இதேபோல கரூர் - சேலம் இடையேயான இருப்பு பாதை விரிவாக்கத்தின் போது ஆயிரக்கணக்கானோரின் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போதும் செந்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளைப் பிடித்து, பெருந்தொகையை கமிஷனாக பெற்றார்.

இதன்மூலம் பிரபலமான செந்தில் மேல்முறையீட்டுக்காக சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்தபோது அப்போதைய அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணனுக்கு பழக்கமானார். இதன்மூலம் சசிகலா குடும்பத்தினருக்கு நெருக்கமானோரின் சொத்து விவகார வழக்குகளில் ஆஜராகும் வாய்ப்பு செந்திலுக்கு கிடைத்தது. இதையடுத்து 2010-ல் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கிற்காக நவநீத கிருஷ்ணனுக்கு ஜூனியராக பெங்களூரு வர தொடங்கினார்.

இந்நிலையில் நவநீத கிருஷ்ணன் டிஎன்பிசி தலைவர், மாநிலங்களவை எம்பி உள்ளிட்ட பதவிகளை நோக்கி போனதால் செந்தில் சசிகலாவுக்கு நெருக்கமானார். சசிகலாவிடம் மிகவும் பணிவுடன் நடந்துக் கொண்டதால் பெங்களூரு சொத்துக்குவிப்பு வழக்கை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு செந்திலுக்கு வழங்கப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் வழக்கின் அன்றாட நடவடிக்கை தொடர்பாக செந்தில் தினமும் சசிகலாவிடம் தெரிவிப்பார்.

கடந்த 2011-ல் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, சசிகலா போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனாலும் ஜெயலலிதா, செந்திலை மாற்றாமல், தொடர்ந்து வழக்கை கவனித்துக்கொள்ளுமாறு பணித்தார். அந்த காலக்கட்டத்தில் தினமும் காலை 4 மணிக்கும், மாலை 5 மணிக்கும் ஜெயலலிதா செந்திலுடன் பேசுவார். நீதிமன்றத்தின் அன்றாட நடவடிக்கைகளை ஜெயலலிதாவுக்கு பக்குவமாக எடுத்துச்சொல்லி செந்தில் அவரது செல்லப்பிள்ளையாக மாறிவிட்டார்.

இதனால் அதிமுக வட்டாரத்திலும், போயஸ் கார்டனிலும் செந்தில் அசைக்க முடியாத சக்தியாக மாறினார். இந்த செல்வாக்கைக் கொண்டு எம்பி, எம்எல்ஏக்களுக்கு சீட் வாங்கி தருவது, அதிகாரிகள் இடமாற்றம், சொத்துகள் பரிமாற்றம் உள்ளிட்ட பல விவகாரங்களில் செந்தில் பங்கும் இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் நமது எம்ஜிஆர், ஜெயா டிவி உள்ளிட்ட நிறுவனங்களையும் கவனிக்கும் பொறுப்பு செந்திலை தேடிவந்தது. அதிமுக அமைச்சர்களுக்கு சிக்கல் இல்லாமல் சொத்துகளை வாங்கி தருவது உள்ளிட்ட வேலைகளையும் செய்துவந்தார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு சசிகலா, தினகரன் ஆகியோருக்கு நெருக்கமான செந்தில் சிறையில் அடிக்கடி சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார். சசிகலா கடந்த மாதம் பரோலில் சென்னை வந்த போது கூட செந்தில் அவரை நாள்தோறும் சந்தித்து பேசியுள்ளார். அப்போது ஏராளமான சொத்துகள், நிறுவனங்களின் முதலீடுகள் தொடர்பாக முக்கிய மாற்றங்கள் நடந்ததாக தெரிகிறது.

இந்த விவகாரம் குறித்து மோப்பம் பிடித்த வருமான வரித்துறை, சசிகலா, தினகரனுக்கு நெருக்கமான செந்திலை வளைத்துள்ளது. நேற்று நாமக்கல்லில் உள்ள செந்திலின் வீட்டில் மட்டுமல்லாமல் அவருக்கு நெருக்கமான வழக்கறிஞர்கள், நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோரின் வீடுகளிலும் சல்லடைப்போட்டு தேடியுள்ளது.

குறிப்பாக நாமக்கல்-மோகனூர் சாலையில் முருகன் கோயிலுக்குப் பின்புறம் உள்ள செந்திலின் வீட்டில் நடத்திய சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. இதேபோல செந்திலின் நண்பரும், விஜயலட்சுமி டிரான்ஸ்போர்ட் உரிமையாளாருமான பால சுப்பிரமணியத்தின் வீடு மற்றும் அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை நடந்தது.

செந்திலின் ஜூனியர்களான நாமக்கலில் உள்ள பாண்டியனின் வீடு, கும்பகோணத்தில் உள்ள வழக்கறிஞர் பரணி குமாரின் வீடு, அரியலூரில் உள்ள வழக்கறிஞர் கருப்பையாவின் வீடு, வேதாரண்யத்தில் உள்ள வழக்கறிஞர் வைரமூர்த்தியின் வீடு உள்ளிட்டவற்றில் சோதனை நடந்தது. இதேபோல செந்திலுக்கு நெருக்கமான தமிழக அரசு தேர்வு வாரிய உறுப்பினர் எ.வி. பாலுசாமி, வழக்கறிஞர் பிரகாஷ், ஹரி கிருஷ்ணன் ஆகியோரின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் செல்லப்பிள்ளையான செந்தில், அவருக்கு நெருக்கமானோரின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது அக்கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா குடும்பத்தினர் வாங்கி குவித்த அத்தனை சொத்துகள் தொடர்பான விபரமும், ஒட்டுமொத்த முதலீடுகள் தொடர்பான தகவல்களும் அறிந்தவர்கள் இவர்களே. வருமான வரித் துறை சோதனையின்போது செந்தில் மற்றும் அவரது வழக்கறிஞர்கள் வீடுகளில் சர்ச்சைக்குரிய ஆவணங்கள் சிக்கியிருந்தால், சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்படும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

சினிமா

55 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

உலகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்