“எளிய செயல்கள் சக்தி வாய்ந்தவை என்பதை உணர்ந்தால் சுற்றுச்சூழலில் சாதகமான மாற்றம் ஏற்படும்” - பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: "ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு தனிநபரும், அவர்களின் செயல்கள் பூமியைக் காக்கும் என்பதை அறிந்துகொள்ளச் செய்ய வேண்டும். மிஷன் லைஃப் என்பது காலநிலை மாற்றத்திற்கு எதிரான போரை ஜனநாயகப்படுத்துவதாகும். அன்றாட வாழ்வில் எளிய செயல்கள் சக்தி வாய்ந்தவை என்பதை மக்கள் உணர்ந்தால், சுற்றுச்சூழலில் மிகவும் சாதகமான மாற்றம் ஏற்படும்" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்.15) உலக வங்கியின் நிகழ்வில் தனிமனித நடத்தையில் ஏற்படும் மாற்றத்தினால் எவ்வாறு காலநிலை மாற்றத்தை சமாளிக்க முடியும் என்ற தலைப்பில் காணொலி மூலம் உரையாற்றினார். இந்த தலைப்புடன் தனக்கு உள்ள தனிப்பட்ட தொடர்பை கூறிய பிரதமர், இது ஒரு சர்வதேச இயக்கமாக மாறி வருகிறது என்றும் மகிழ்ச்சி தெரிவித்தார். சாணக்கியரை மேற்கோள் காட்டிய பிரதமர், சிறிய செயல்களின் முக்கியத்துவத்தையும் சுட்டிக் காட்டினார். "நமது பூமிக்கான ஒவ்வொரு நல்ல செயலும் முக்கியமற்றதாகத் தோன்றலாம். ஆனால் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து பணியாற்றினால், அதன் தாக்கம் மிகப்பெரியது. நமது பூமிக்கான சரியான முடிவுகளை எடுக்கும் நபர்கள் நமது பூமிக்கான இந்த போரில் முக்கியமானவர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இதுதான் மிஷன் லைஃப்பின் மையக்கரு.

மிஷன் லைஃப் இயக்கத்தின் தோற்றம் குறித்துப் பேசுகையில், 2015-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தனி மனிதர்கள் முன்னெடுக்கும் மாற்றத்தின் அவசியத்தைப் பற்றி தான் பேசியதையும், 2022-ம் ஆண்டு அக்டோபரில் ஐநா பொதுச்செயலாளர் மிஷன் லைஃப்-ஐ தொடங்கி வைத்ததையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். CoP-27 கூட்ட அறிக்கையின் முன்னுரை நிலையான வாழ்க்கை முறை மற்றும் நுகர்வு பற்றி பேசுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது அரசு மட்டுமல்லாமல், தாங்களும் பங்களிக்க வேண்டியது என்பதை மக்கள் புரிந்து கொண்டால், "அவர்களின் கவலை செயலாக மாறும்" என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். "காலநிலை மாற்றத்தை மாநாடுகளின் மூலம் மட்டும் எதிர்த்துப் போராட முடியாது. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் போராட வேண்டும். ஒரு யோசனை, விவாத மேசையிலிருந்து மக்களிடம் நகரும்போது, அது மக்கள் இயக்கமாக மாறுகிறது. ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு தனிநபரும், அவர்களின் செயல்கள் பூமியைக் காக்கும் என்பதை அறிந்துகொள்ளச் செய்ய வேண்டும். மிஷன் லைஃப் என்பது காலநிலை மாற்றத்திற்கு எதிரான போரை ஜனநாயகப்படுத்துவதாகும். அன்றாட வாழ்வில் எளிய செயல்கள் சக்தி வாய்ந்தவை என்பதை மக்கள் உணர்ந்தால், சுற்றுச்சூழலில் மிகவும் சாதகமான மாற்றம் ஏற்படும்" என்றார்.

இந்தியாவிலுள்ள பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிய பிரதமர், "மக்கள் இயக்கங்கள் மற்றும் தனி மனித நடத்தை மாற்றத்தின் மூலம், கடந்த சில ஆண்டுகளில் இந்திய மக்கள் நிறைய செய்திருக்கிறார்கள்" என்றார். எல்இடி பல்புகள் பயன்பாட்டைப் பரவலாக்கியதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 39 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைத் தவிர்த்தது, மேம்படுத்தப்பட்ட பாலின விகிதம் தூய்மை மேம்பாடு உள்ளிட்டவற்றை பிரதமர் உதாரணமாகக் கூறினார். சொட்டு நீர் பாசனம் மூலம் ஏறக்குறைய ஏழு லட்சம் ஹெக்டேர் விளைநிலங்களில் நீர் சேமிக்கப்பட்டதையும் பிரதமர் கூறினார்.

மிஷன் லைஃப் திட்டத்தின் கீழ், உள்ளாட்சி அமைப்புகளை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றுதல், தண்ணீரைச் சேமிப்பது, எரிசக்தி சேமிப்பு, கழிவுகள் மற்றும் மின்னணுக் கழிவுகளைக் குறைத்தல், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பது, இயற்கை விவசாயத்தை ஏற்றுக்கொள்வது, சிறு தானியங்களை ஊக்குவித்தல் போன்ற பல முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இந்த முயற்சிகளின் மூலம், 22 பில்லியன் யூனிட்களுக்கு மேல் மின் ஆற்றலைச் சேமிக்க முடியும், 9 டிரில்லியன் லிட்டர் தண்ணீரைச் சேமிக்க முடியும், 375 மில்லியன் டன்கள் கழிவுகளைக் குறைக்கும், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் டன் மின்-கழிவுகளை மறுசுழற்சி செய்து 2030-க்குள் சுமார் 170 மில்லியன் டாலர்களை கூடுதலாக சேமிக்க முடியும். “மேலும், 15 பில்லியன் டன் உணவு வீணாவதைக் குறைக்க உதவும். FAO தகவலின்படி 2020-ம் ஆண்டில் சர்வதேச பயிர் உற்பத்தி சுமார் 9 பில்லியன் டன்களாக இருந்தது" என்று பிரதமர் விரிவாகக் கூறினார்.

உலக நாடுகளை ஊக்குவிப்பதில் சர்வதேச நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். காலநிலை நிதியை 26% முதல் 35% வரை உயர்த்தும் உலக வங்கி குழுவின் முன்மொழிவைக் குறிப்பிட்ட பிரதமர், இந்த காலநிலை நிதியத்தின் கவனம் பொதுவாக வழக்கமான அம்சங்களில் மட்டுமே இருக்கும் என்று கூறினார். "நடத்தை முயற்சிகளுக்கும் போதுமான நிதி முறைகள் உருவாக்கப்பட வேண்டும். மிஷன் லைஃப் போன்ற நடத்தை முன்னெடுப்புகளுக்கு உலக வங்கி ஆதரவளிப்பது பல மடங்கு விளைவை ஏற்படுத்தும் என்று பிரதமர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

35 mins ago

சினிமா

43 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்