நெல்லை, தென்காசி அணைகளில் நீர்மட்டம் சரிவு

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி, தென்காசி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கோடை வெயிலின் உக்கிரம் அதிகரித்துள்ளதால் அணைகள், குளங்களில் நீர்மட்டம் சரிந்து வருகிறது. பராமரிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது இந்த மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகிறது. வெயிலின் உக்கிரம் அதிகரிப்பதால் அணைகள், குளங்களில் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

சரியும் நீர் மட்டம்: திருநெல்வேலி மாவட்டத்தில் 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று காலையில் 59.60 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 22 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், 204 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. 118 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 89.80 அடியாக இருந்தது. அணைக்கு 34 கனஅடி தண்ணீர் வரும் நிலையில், 150 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.

தென்காசி மாவட்டத்தில் 85 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கடனா அணை நீர்மட்டம் 28.60 அடியாக சரிந்திருந்தது. அணைக்கு 4 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையிலிருந்து 10 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படகிறது. 84 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட ராமநதி நீர்மட்டம் 43 அடியாக இருந்தது. அணைக்கு 6 கனஅடி தண்ணீர் வரும் நிலையில், 10 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.

இரு மாவட்டங்களிலும் உள்ள பிறஅணைகளின் நீர்மட்டம் ( அடைப்புக்குள் உச்சநீர்மட்டம் ): சேர்வலாறு- 71.75 அடி (156 அடி), வடக்கு பச்சையாறு- 11.50 (50), நம்பியாறு- 12.96 (22.96), கொடுமுடியாறு- 9 (52.25), கருப்பாநதி- 41.34 அடி (72 அடி), குண்டாறு- 16 (36.10), அடவிநயினார்- 62.75 (132).

வறண்டு வரும் குளங்கள்: அணைகளில் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதுபோல் குளங்களிலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழையின்போது அனைத்து குளங்களிலும் நீர் பெருகியிருந்தது. ஒருசில குளங்களில் கரைகள் உடைப்பால் தண்ணீர் வீணாகியிருந்தது. இந்த குளங்களில் ஓரளவுக்கே தண்ணீர் இருப்பு காணப்பட்டது.

இந்நிலையில் தற்போது வெப்பநிலை அதிகரிப்பால் திருநெல்வேலியில் ஒருசில குளங்களில் தண்ணீர் முற்றிலும் வற்றியிருக்கிறது. இதனால் மே மாதத்தில் அக்னி நட்சத்திர காலத்தின் போது நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு செல்லும் அபாயம் இருப்பதால் தண்ணீருக்கு பிரச்சினை எழும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

அருவியில் குளிக்க அனுமதி: இதனிடையே அம்பாசமுத்திரம் புலிகள் காப்பக துணை இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திலுள்ள சூழல் சுற்றுலா பகுதியான மணிமுத்தாறு அருவியில், கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த கனமழையால் பொதுமக்கள் நின்று குளிக்கும் இடங்கள் முழுவதுமாக சேதம் அடைந்திருந்தது.

இதனால் பொதுமக்கள் நலன் கருதி இந்த அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து ஆண்கள், பெண்கள் தனித்தனியாக நின்று குளிக்கும் வகையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று (26-ம் தேதி) முதல் பொதுமக்கள் அருவியில் குளிப்பதற்கு காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வனவிதிகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கப் படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

உலகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்