பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பும், பொதுமக்களின் பங்களிப்பும்

By எஸ்.கோபு


பொள்ளாச்சி: வெளிநாடுகளில் கிறிஸ்துமஸ் தினத்தில் பொதுமக்கள் தங்கள் வீட்டின் அருகிலோ, சுற்றுப்புறங்களிலோ தென்படும் பறவைகளைப் பார்த்து பட்டியல் தயாரித்து, அதை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் வழக்கம் இருந்து வருகிறது. கிறிஸ்துமஸ் பறவைகள் கணக்கெடுப்பு பல்லாண்டு காலமாகத் தொடர்ந்து நடந்து வருகிறது. இதன்மூலமாக, பொது பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளையும், பரவலையும் அறிந்துகொள்ள முடியும்.

இதேபோல், இந்தியாவில் ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. கேரளாவில் ஓணம் பண்டிகையின்போது பறவைகள் கணக்கெடுப்பை, கேரளா பறவைகள் குழுவினர் நடத்தினர். தமிழகத்தில் பறவைகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே அதிகரிக்க செய்யும் வகையில், 2015-ம் ஆண்டு முதல் பொங்கல் பண்டிகையையொட்டி, பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

2024-ம் ஆண்டுக்கான 10-ம் ஆண்டு பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு ஜனவரி 14-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட பொங்கல் பறவைகள் கணக்கெடுப்புகளில் தமிழகம் முழுவதும் காகம், மைனா, மடையான், பச்சைக் கிளி, வெண்மார்பு மீன்கொத்தி, உண்ணிக்கொக்கு, பனை உழவாரன், மணிப்புறா, மாடப்புறா, கரிச்சான், அண்டங்காக்கை ஆகியவை அதிகமாக அதற்கான இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக பறவை ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அரசு பள்ளி ஆசிரியரும், பறவைகள் ஆர்வலருமான செல்வகணேஷ் கூறியதாவது: தமிழகத்தில் பறவைகளின் பரவல், தற்போதைய நிலை, அவை வாழுமிடங்களின் நிலை ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்க, ஆண்டுதோறும் பொங்கல் நாட்களில் நடத்தப்படுவதே பொங்கல் பறவை கணக்கெடுப்பு. ஜனவரி மாதம் 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை பொங்கல் நாட்களில் இப்பறவை கணக்கெடுப்பு நடைபெறும்.

பறவைகள் மீது ஆர்வம் கொண்டவர்கள் கலந்துகொள்ளலாம். கணக்கெடுப்பில் பங்கேற்க உங்களைச் சுற்றியுள்ள ஏரி, குளம், ஆறு, தோட்டம், பள்ளி, கல்லூரி, அலுவலகம், வீட்டு மாடி என எந்த பகுதியிலும், தொடர்ச்சியாக குறைந்தது 15 நிமிடங்களுக்கு என்ன வகையான பறவைகள் வருகின்றன என்று பார்க்க வேண்டும். பின்னர், அடையாளம் கண்டு அவற்றின் எண்ணிக்கையை கணக்கிட்டு, பறவை பட்டியலை தயார் செய்ய வேண்டும். அந்தப் பட்டியலை http://ebird.org/india என்ற இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.

பொங்கல் நாட்களில் எத்தனை முடியுமோ, அத்தனை பறவை பட்டியல்களை உள்ளிடலாம். பறவைகளை பார்க்க சிறந்த நேரம் அதிகாலை மற்றும் மாலை வேளை. எனினும், உங்களால் எப்போது முடியுமோ அப்போதுகூட பார்த்து பட்டியலிடலாம். மொபைல் போன் வைத்திருப்பவர்கள் ebird என்ற செயலி மூலமாக தகவலையும், படங்களையும் பதிவேற்றலாம்.

பறவைகள் கணக்கெடுப்பு ஒரே நேரத்தில் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறுவதால், அவற்றின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்கள், ஏற்றத் தாழ்வுகளை கண்காணித்து, அதற்கான காரணங்களை கண்டறிய முடியும்.

பறவைகளின் வாழிடங்கள் பாதுகாப்பில் பொதுமக்களின் பங்கும், ஆதரவும் மிகவும் அவசியம். பறவைகளின்மேல் நாட்டம் வருவதற்கும், அவற்றின் மேல் கரிசனம் கொள்ளவும் பொதுமக்கள், இளைய தலைமுறையினரிடையே பறவைகளை பார்த்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதை ஒரு நல்ல பொழுதுபோக்காக அனைவரும் எடுத்துக்கொள்ள, மக்களிடையே எடுத்துச்சொல்வது அவசியம்.

ஆகவே, பறவைகள் குறித்த விழிப்புணர்வு, ஆர்வத்தை ஏற்படுத்துவது, பொங்கல் தினத்தில் பறவைகளை பார்த்து கணக்கிட்டு பட்டியலிடும் பழக்கத்தை ஏற்படுத்துவது எனும் நோக்கில் பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த பொங்கலுக்கு பறவைகளை கணக்கிட்டு, சுற்றுச்சூழலை காக்க அனைவரும் முன்வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்