மரமாகும் முன்பே மக்கிய மரக்கன்றுகள் - தாம்பரத்தில் தொடங்கிய வேகத்தில் முடங்கிய மியாவாக்கி அடர்வன திட்டம்

By செய்திப்பிரிவு

தாம்பரம்: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டு நிறைவையொட்டி, தாம்பரம் மாநகராட்சியில் மியாவாக்கி அடர்வன வளர்ப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. ஒரு சில மரக்கன்றுகள் நடப்பட்ட நிலையில் அப்படியே முடங்கி போனது.

கடந்த 2021 மே 9-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்தது. இதையொட்டி தாம்பரம் மாநகராட்சி பெருங்களத்தூரில் மியாவாக்கி அடர்வனம் வளர்ப்பு திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, மேயர் கே.வசந்த குமாரி, துணை மேயர் ஜி. காமராஜ், அப்போதைய ஆணையர் இளங்கோவன் ஆகியோர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்.

காமராஜ்

அப்போது ஆணையர் இளங்கோவன் கூறும்போது, தாம்பரம் மாநகராட்சியில், 600-க்கும் மேற்பட்ட பூங்காக்கள் உள்ளன. அவற்றில் மரங்கள் குறைவாக இருக்கும் பூங்காக்களை அடர்வனமாக்கும் வகையில் கூடுதல் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு புதிய குடியிருப்புப் பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள, 147 திறந்தவெளி இடங்களில் மியாவாக்கி அடர்வன வளர்ப்புத் திட்டத்தின் கீழ், மரங்கள் வளர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.

ஆனால், தற்போது அங்கு ஒரு மரக்கன்றும் இல்லை.பெருங்களத்தூரில் நடப்பட்ட மரக் கன்றுகளைக் கூடகாணவில்லை. இது குறித்து பசுமை தாயகம் அமைப்பின் மாநில துணை செயலாளர் கண்ணன் கூறியது: இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 15 ஆயிரம் சதுர கி.மீட்டர் பரப்பளவிலான காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இதன் காரணமாக இந்தியாவின் வெப்ப நிலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மரங்கள் அழிப்பினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு தீர்வு காணும் வகையில், குறைந்த நிலத்தில் அதிக மரங்களை உருவாக்கும் மியாவாக்கி காடுகள் முறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இந்த வகை காடு வளர்ப்பினால் ஏற்படும் பயன்கள்ஏராளம்.

பல்லுயிர் பெருக்கத்துக்கான சூழல் கிடைக்கும். அடர்ந்த மரங்களாக இருப்பதால், ஆக்சிஜன் அதிக அளவு உற்பத்தியாகும். மரங்களுக்கு வேர்களில் தண்ணீரை சேமிக்கும் ஆற்றல் இருப்பதால், நிலத்தடி நீர்மட்டம் உயரும். திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஓராண்டு நிறைவையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள பூங்காக்களில் குறுங்காடு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டன.

பெரும்பாலான இடங்களில் அவை பராமரிப்பு இல்லாமல் முற்றிலும் பாழாய் போனது. தாம்பரம் மாநகராட்சியில் மரக்கன்றுகளை வளர்க்கும் மியாவாக்கி திட்டமும் காணாமல் போய்விட்டது. இவ்வாறு கூறினார்.

ரேகா

மக்கள் பசுமை இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் ரேகா ரெங்கையன் கூறியது: தாம்பரம் மாநகராட்சி 55-வது வார்டில் புட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற மனைப்பிரிவில் பூங்காவுக்கான இடத்தில் சுமார் 3 ஆயிரம் சதுர அடியில் அடர் காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் புங்கை, வேம்பு, மருது, சாரக்கொன்றை, கதம்பம், பூவரசு உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டன.

பூங்கா திறந்த வெளியாக இருப்பதால் சுற்றி வேலி அமைக்கவும் தண்ணீர் வசதி ஏற்படுத்தவும் ரூ.3.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் விடப்பட்டு கடந்த 2022 செப்டம்பர் 27-ம் தேதி பணி உத்தரவும் ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை அங்கு எந்த பணியையும் மேற்கொள்ளவில்லை. போர் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் உரிய விசாரணை நடத்த வேண்டும்.

மரக்கன்றுகள் நடுவது எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம் அதனை தொடர்ந்து பராமரிப்பது. மரக்கன்று நட திட்டமிடும் குழுவினர் அவற்றை தொடர்ந்து பராமரித்து, மரங்களாக வளர்க்கும் வரையிலான திட்டமிடல் வேண்டும். இந்த எண்ணம் அனைவருக்கும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அடர்வனம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து 4-வது மண்டல குழுத் தலைவர் காமராஜ் கூறியது: அடர்வனம் பராமரிக்க ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் அதனை முறையாக பராமரிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. செடிகளுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்த ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.

மோட்டார் இயக்க வேண்டி மின் இணைப்பு கேட்டு கடந்த 7-10-22 அன்று ரூ.6,250 கட்டணம் செலுத்தி மனு செய்யப்பட்டது. மின் வாரியத்தினர் மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் செய்வதினால் பணிகள் தொடங்கப்படவில்லை. ஓரிரு வாரங்களில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு குறுங்காடு அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதன்பிறகு அவற்றை பராமரிக்க குடியிருப்போர் நலச்சங்கத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

மின்வாரிய அதிகாரிகள் கூறியது: மின் இணைப்பு வேண்டி 7-10-22 விண்ணப்பித்தனர். அந்தப் பகுதியில்மின் கம்பம் இல்லாததால் புதிதாக நான்கு மின்கம்பங்கள், மின்கம்பிகள் அமைக்கப்பட்டு 19-5-2023 இணைப்பு வழங்கப்பட்டது. உதிரி பாகம், மின் மீட்டர் பற்றக்குறை காரணமாக சற்று தாமதம் ஆனது. மேலும் ஜனவரி மாதமே இணைப்புகள் கொடுக்க தயாராக இருந்தும் தாம்பரம் மாநகராட்சி சார்பில் மீட்டர் வைப்பதற்காக வசதி ஏற்படுத்தப்படவில்லை. நாங்கள் பல முறை தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை, எங்கள் மீது தவறு ஏதுமில்லை என மின்வாரியத்தினர் தெரிவித்தனர்.

மியாவாக்கி என்றால் என்ன?: ஜப்பானிய தாவரவியலாளர் அகிரா மியாவாக்கி, பூர்வீக தாவரங்களுடன் அடர்ந்த காடுகளை உருவாக்கும் நுட்பத்தை வழங்கினார். இதனால் அவரது பெயரிலேயே மியாவாக்கி நுட்பம் உலகம் முழுவதும் பரவியது. மியாவாக்கி என்பது இடைவெளி இல்லா அடா்காடு என்ற தத்துவப்படி அமல்படுத்தப்படுகிறது. இந்த முறையில் ஆழமான குழி தோண்டி அதில் மக்கும் குப்பைகளைக் கொட்டி நெருக்கமான முறையில் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நடும் முறை தான் ‘மியாவாக்கி' என்று அழைக்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

இந்தியா

8 mins ago

விளையாட்டு

48 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்