திமுக மேடையில் நாஞ்சில் சம்பத்: ஸ்டாலினுக்குப் புகழாரம்

By செய்திப்பிரிவு

இந்தியாவின் பிரதமர் பெயரை அறிவிக்கிற துணிச்சல் ஒருவருக்கு இருக்கிறது. நீட் தீர்மானத்தில் குடியரசுத் தலைவர் ஏன் கையெழுத்து போட மறுக்கிறார் என்று கேட்கிற துணிச்சல் அண்ணன் ஸ்டாலினைத் தவிர வேறு யாருக்காவது இருக்கிறதா? என்று திமுக மேடையில் நாஞ்சில் சம்பத் புகழாரம் சூட்டினார்.

கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சென்னை  தம்பு செட்டித் தெருவில்  ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. இதில் நாஞ்சில் சம்பத் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

''போர்க்கால மேகங்கள் கரு கொண்டுவிட்டன. யமுனைக் கரையில் ஆதிக்க பீடத்தில் இருப்பவர்கள் தங்கள் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டார்கள். இருண்டு கிடக்கிறது என் இந்திய நாடு. வகுப்புவாதச் சேற்றில் என் தேசம் புதைந்துகொண்டு இருக்கிறது. இந்தியாவின் பலம் மதச்சார்பின்மை. அதற்கு இப்போது மாரடைப்பு வந்திருக்கிறது.  இந்தியாவின் பலம் சமயங்களின் பெயரால் சகிப்புத்தன்மை. அது சாக்காடு நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. கோபுரப் பெருமை உள்ள இந்திய தேசம் என் கண் முன்னால் குட்சுச் சுவராக மாறிக் கொண்டிருக்கிறது. இதை மீட்டெடுப்பதற்கு யாரால் முடியும் என்று கேட்டால், யாரால் முடிகிறதோ இல்லையோ இந்தியாவின் பிரதமர் பெயரை அறிவிக்கிற துணிச்சல் ஒருவருக்கு இருக்கிறது. அவர் பெயர் மு.க.ஸ்டாலின்.

நான் முடிவெடுத்துவிட்டேன் என்று சிலர் முணுமுணுப்பது எனக்குத் தெரிகிறது. எந்த முடிவையும் நான் எடுக்கவில்லை. கால் சட்டைப் பருவத்தில் கனவுகள் காணுகிற வயதில் எந்த கொள்கையைப் பேசினோனோ அந்தக் கொள்கைக்கு ஆபத்து வந்திருக்கிறது என்ற இந்நாளில் பாசிச சக்தியை வீழ்த்துவதற்கு என் குரல் ஒலிக்கும் என்றேன். அக்குரல் ஒலிக்கும் மேடை திராவிட மேடை.

கட்சி அரசியல் என்ற சிமிழுக்குள் இனி சிக்க வேண்டாம், ஒரு பொதுவெளியில் பயணிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன். என்னுடைய இலக்கியப் பேச்சுகளை புத்தகமாகத் தொகுக்க வேண்டிய பணிகள் உள்ளன. எனக்கு ஒரு முடிவு ஏற்படுவதற்கு முன்னால் என் அடையாளங்களை மீட்பதற்கு மீதமுள்ள நாட்களைப் பயன்படுத்த உள்ளேன்.

திரைப்பட வாய்ப்பால் இப்போது சாதாரணமாக வீதியில் நடக்க முடியாத அளவுக்கு உள்ளேன்.  இது யுத்த காலம். பாசிச சக்தியை முறியடிக்கிற வேள்வியில் என் குரல் ஒலிக்காமல் போனால் நான் உயிரோடு வாழ்வதற்கு அர்த்தம் இல்லை. திமுகவில் சீட் போட நான் வரவில்லை. என் நடை தள்ளாடலாம். என் நடை முடிவுறலாம். என் லட்சிய உணர்வுக்கு முடிவில்லை என்றார் கருணாநிதி. அவரது பேச்சு என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது.

இந்தியா ஒரு நாடல்ல. இது இணைக்கப்பட்ட துணைக்கண்டம். திராவிட  இயக்கத்தில் பற்று கொண்ட நாங்கள் யாரும் இந்தியா என்று சொல்ல மாட்டோம். இந்திய துணைக் கண்டம் என்றே சொல்கிறோம்.

இன்று ஒரு கூட்டணி அமைந்திருக்கிறது. நரகத்திற்குப் போனாலும் அவர்கள் வெயிட்டிங் லிஸ்ட்டில்தான் இருப்பார்கள்.

நீட் தீர்மானம் எங்கே? குடியரசுத் தலைவர் ஏன் கையெழுத்து போட மறுக்கிறார் என்று கேட்கிற துணிச்சல் அண்ணன் ஸ்டாலினைத் தவிர வேறு யாருக்காவது இருக்கிறதா?''

இவ்வாறு நாஞ்சில் சம்பத் பேசினார்.

இலக்கிய மேடைகளில் மட்டும் இனி என்னைப் பார்க்கலாம், அரசியலில் இருந்து விலகிவிட்டேன் என்று தெரிவித்த நாஞ்சில் சம்பத் வைகோவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வேன் என்று சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். இந்நிலையில் நாஞ்சில் சம்பத் திமுக மேடையில் ஸ்டாலினைப் புகழ்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

55 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

14 hours ago

மேலும்