தமிழகத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்கள் நலன் கருதி 4, 5-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டுமென, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்டத் தலைவர் ராஜ்குமார் தலைமையில் திருப்பூரில் நடந்தது. கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் பிரபு செபாஸ்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜா, மாவட்டப் பொருளாளர் ஜெயலட்சுமி உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.
2022-23-ம் கல்வி ஆண்டில் முதல் பருவத் தேர்வு தொடங்கியுள்ள நிலையில், 4, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே வினாத்தாளை பின்பற்றி தேர்வு நடத்த மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர் அலுவலகம் ஆணை வெளியிட்டுள்ளது.
இந்த வினாத்தாள்கள் வட்டாரக் கல்வி அலுவலகம் மூலம் குறுவள மையத்தை சென்றடைந்து, தினசரி தலைமை ஆசிரியர்கள் அங்கு சென்று அந்நாளுக்குரிய கேள்வித்தாளை பெற்றுச் சென்று தேர்வை நடத்த வேண்டும்.
தற்போது நடைபெற்றுவரும் இந்த தேர்வு முறையால், தொடக்கப் பள்ளி மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
தொடக்க நிலையில் உள்ள மாணவர்களுக்கு, கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களே அவர்களை மதிப்பீடு செய்யும் நடைமுறையே அறிவியல் பூர்வமாகவும், உளவியல் அடிப்படையிலும் சரியானது.
எனவே மாணவர்கள் நலன் கருதி 4, 5-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும். மேலும் அண்மைக் காலங்களில் பள்ளி வளாகத்துக்குள் வெளி நபர்கள் நுழைந்து ஆசிரியர்களை தாக்கும் நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.