அடங்கா மாணவர்கள்; தீர்வா தண்டனைகள்?

By முகமது ஹுசைன்

பொதுவெளியில் மாணவர்களின் அத்துமீறல்களும் வன்முறைகளும் எந்த அளவு கண்டிக்கத்தக்கதோ அதே அளவு கண்டிக்கத்தக்கது தண்டனை என்ற பெயரில் அவர்களுக்குப் பொதுவெளியில் கொடுக்கப்படும் அவமானங்களும். தண்டனையின் நோக்கம் தவறின் வீரியத்தைக் குறித்த புரிதலை உண்டாக்குவதும்தான்.

அந்தப் புரிதல் மீண்டும் அந்தத் தவறைச் செய்யாதபடி மாணவரை மேம்படுத்தும். இங்கே பெரும்பாலான தண்டனைகள் புரிதலுக்குப் பதில் அவமானத்தையும் பயத்தையும் அளிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. 18 வயது மாணவனைக் குற்றவாளி என்று பொதுவெளியில் அறிமுகப்படுத்துவதும் அடித்து உதைத்து அவமானப்படுத்துவதும், அதற்குப் பின்னான அவன் வாழ்வை அழித்துவிடாதா? அவனை ஒரு முழுநேர குற்றவாளி ஆக்கிவிடாதா?

‘பஸ் டே’யா ‘வன்முறை நாளா’?

பஸ் டே என்ற பெயரில் மாணவர்கள் அரங்கேற்றும் வன்முறைகள் சென்னை வாசிகள் அறிந்த ஒன்று. 2011-ல் நடந்த ’பஸ் டே’ சம்பவத்தின்போது நிகழ்த்தப்பட்ட வன்முறையின்போது, கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களைக் காவல்துறை தாக்கியது. கடந்த ஜூன் 18 அன்று கொண்டாடப்பட்ட ‘பஸ் டே’யில் சில மாணவர்கள் மொட்டை அடிக்கப்பட்டு காவல்துறையால் அவமானப்படுத்தப்பட்டனர்.

பத்தாண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஒரு பூங்காவில் இருந்த இளம் ஜோடிகள் எல்லாம் கைதுசெய்யப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டனர். மாணவிகள் மட்டும் அவர்களுடைய பெற்றோர்களிடம் எச்சரித்து ஒப்படைக்கப்பட்டனர். இன்று அந்த மாணவிகளின் நிலையோ அந்த ஆண்களின் நிலையோ என்ன என்பது யாருக்கும் தெரியாது.

வைரலான வீடியோ?

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 31 அன்று மாநகரப் பேருந்தில் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கையில் இரண்டடி நீளப் பட்டாக்கத்தியுடன் படிக்கட்டுகளில் பயணித்துள்ளனர். படியில் தொங்கியபடி தாங்கள் படிக்கும் கல்லூரிக்கு ‘ஜே’ என்று கோஷமிட்டபடி அவர்கள் பயணித்துள்ளனர். மேலும், சாலையில் சென்றோரை மிரட்டும் வகையில் சாலையில் பட்டாக்கத்தியைத் தீட்டியபடி தீப்பொறி பறக்கச் சென்றுள்ளனர். இந்த நிகழ்வின் காணொலி வாட்ஸ் அப்பில் வைரலாகப் பரவியது.

தொடரும் அவமானங்கள்

காவல்துறை, 5 மாணவர் களைக் கைதுசெய்தது. கைதுக்குப் பின் அந்த மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர்களால் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் உணர்வுரீதியாகவும் தாக்கப்பட்டனர். அவர்கள் அழுது அரற்றினர். அவர்கள் மன்னிப்புக் கேட்டுக் கெஞ்சிக் கதறினர். இவை கேமராவின் அகன்ற விழிகளுக்கு முன்பாக அரங்கேறின.

சடுதியில் அவர்களின் கெஞ்சல் வாட்ஸ் அப்பில் பரவியது.  “அவனுங்க எல்லாம் மாணவர்களே இல்லை, பொறுக்கிப்பசங்க, பஸ்ஸுல பாட்டுப் பாடறது, புட் போர்டு அடிக்குறது, வம்பு பண்றது இதுதான் அவங்க வேலை. படிக்கிற வயசுலேயே கத்திய தூக்குற இவனுங்களை எல்லாம் போலீஸ் சும்மா விடக் கூடாது” என்பதே அதைப் பார்த்த பலரின் கருத்தாக எதிரொலித்தது. மாணவர்களின் அத்துமீறல்களும் அதற்காகப் பொதுவெளியில் அவர்கள் அவமானப்படுத்தப்படுவதும் இன்றும் தொடர்வதை இந்த இரண்டு வீடியோக்கள் உணர்த்துகின்றன.

மாணவர்களின் பிரச்சினை என்ன?

சிறு வயது முதலே குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூன் தொடர்களும் திரைப்படங்களும் பலம் மிகுந்தவனையே நாயகனாகச் சித்திரிக்கின்றன. சண்டைக் காட்சி இல்லாத படம் அவர்களுக்குச் சலிப்பூட்டுவதாக இருக்கிறது. தன்னை நாயகனாக மாற்றுவதற்கு, அறிவுக்குப் பதிலாக அவன் பலத்தையே நம்புகிறான்.

bus day 2jpg பிருந்தா ஜெயராமன்

அபாயகரமான கூட்டணி

கல்லூரிப் பருவத்தில் மாணவர் களுக்குப் பெரும்பாலும், குடும்பத்தைவிட நண்பர்களே பிரதானமாகிவிடுகிறார்கள். நட்புக்காக எதையும் செய்ய அவர்கள் துணிகிறார்கள். ஒரு மாணவர் கல் எறிந்தால், மற்ற மாணவர்களும் கல் எறிகிறார்கள். ’நாயகனாக மாற வேண்டும்’ என்ற உந்துதலும் ’நட்பே பிரதானம்’ என்ற நிலைப்பாடும் ’குழு மனப்பான்மையும்’ மிகவும் அபாயகரமான கூட்டணி’ என்கிறார் மனநல மருத்துவர் பிருந்தா ஜெயராமன்.

“17, 18 வயதுகளில் இருக்கும் மாணவனுக்கு முன் பகுதி மூளை (Prefrontal Cortex) முழுமையாக வளர்ச்சி பெற்று இருக்காது. இதனால் எதையும் அலசி ஆராய்ந்து முடிவு எடுக்கும் பக்குவமும் தெளிவும் அவர்களிடம் இருப்பதில்லை. அதேநேரம் அவர்களுக்கு மூளையில் இருக்கும் Amygdala முழுமையாக வளர்ச்சி பெற்று இருக்கும். இதனால் அவர்கள் எப்போதும் உணர்ச்சிப் பிழம்பாக இருப்பார்கள். உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் எதையும் யோசிக்காமல் அவர்கள் செயல்படுவதன் காரணம் இதுதான்” என்கிறார் அவர்.

யார் தவறு இது?

சரி, தவறு என்று எதையுமே முழுமையாக முத்திரைகுத்திவிட முடியாது. நேற்று குற்றமாகக் கருதப் பட்டது இன்று சட்டரீதியாக நியாயமாக நிறுவப்படும்போது உலகம் அதைக் காலப்போக்கில் அங்கீகரிக்கும், ஏற்றுக்கொள்ளும். ஆக எது சரி, எது தவறு என்பதைச் சூழலே தீர்மானிக்கிறது.

அப்படியிருக்க, ஒரு சிறுவனை, இளைஞனைக் குற்றவாளி எனச் சொல்லிப் பொதுவெளியில் அசிங்கப்படுத்துவதும் முத்திரை குத்துவதும் எந்த வகையில் நியாயம்? இந்தச் செயல் அந்த மாணவனை நிஜக் குற்றவாளியாக்கிவிடும் ஆபத்து கொண்டது. சிறார் சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்று திரும்பியவர்களின் இன்றைய நிலை இதைத்தான் சொல்கிறது.

நாமும் பொறுப்பு ஏற்போம்

மாணவர்களின் செயல்களுக்கு அவர்களை மட்டும் பொறுப்பாளராக்குவது முறையல்ல; பெற்றோரும் ஆசிரியர்களும் சமூகத்தில் இருக்கும் நாமும் அவற்றுக்குப் பொறுப்பாளர்களே. வளர்ப்பின் குறைகளும் போதிப்பின் போதாமைகளும் சமூகத்தில் நீர்த்துப்போன ஒழுக்க விதிகளும் மாணவர்களைத் தவறு செய்யத் தூண்டிவிடும் ஊக்கிகள் என்பதை நாம் மறுக்க முடியாது.

அடித்து உதைத்து அவர்களின் வாழ்வைச் சிதைப்பதற்குப் பதில், அன்புடன் அணைத்துப் பக்குவமாகப் பேசி, அவர்களின் வாழ்வை நாம் செழுமையாக்குவோம், மேன்மையாக்குவோம். நம் நாட்டின் வருங்காலத் தலைவர்களை வார்த்தெடுக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

6 mins ago

இந்தியா

2 mins ago

இந்தியா

32 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்