கரும்பலகைக்கு அப்பால்... 12 - கொண்டாடுவோம், காப்போம்!

By ‘கலகல வகுப்பறை’ ரெ.சிவா

பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளி திறந்தது. காலை வகுப்புப் பாடங்களை எடுத்து முடித்த பிறகு மத்தியம் ஏழாம் வகுப்பு வகுப்பறைக்குள் நுழைந்ததும் ஆரவாரம்.

“ஐயா, படம் ஏதாவது பார்ப் போம்!” என்றான் ஒரு மாணவன்.

“முதலில் பொங்கல் கொண்டாட்டத்தைப் பற்றி பேசுவோமே!” என்றாள் ஒரு மாணவி.

‘இன்று என்ன படம் பார்க்கலாம்?’ என்று மனதிற்குள் யோசித்துக்கொண்டே உரையாடலைத் தொடக்கினேன்.

உயிர்ப்பான பொங்கல்

“உங்க ஊர் அல்லது உங்க பகுதில பொங்கலை எப்படியெல்லாம் கொண்டாடுனீங்க?” என்று கேட்டேன்.

‘நிறைய விளையாட்டுப் போட்டிகள் நடந்துச்சு’, ‘கரகாட்டம், ஒயிலாட்டம்னு ஏகப்பட்ட நடனங்கள் வீதியில்’, ‘ராஜா ராணி மாதிரி வேஷம் போட்டு ஆடுனாங்க’, ‘நான் ஜல்லிக்கட்டு போய்ப் பார்த்தேன்’, ‘கோலப் போட்டி, பானை உடைக்குறது’, ‘சைக்கிள் ரேஸ்  இப்படி நிறையப் போட்டிகள்ல கலந்துகிட்டேன்.’

பெரும்பாலும் விழாக்களை வீட்டிற்குள்ளேயே கொண்டாடுவது என்று மாறிக்கொண்டிருக்கும் இக்காலத்திலும் பொங்கல் விழா இன்னும் உயிர்ப்போடு கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளித்தது. மாணவர்களின் பதில்களிலிருந்து மனதுக்குள் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய ‘கர்ணமோட்சம்’ என்ற குறும்படம் நினைவுக்கு வரப் படத்தைத் திரையிட்டேன்.

கடத்தப்பட வேண்டிய கலை!

தெருக்கூத்து உடை அணிந்த ஒருவர் சாலையில் நடந்து வருகிறார். உடன் அவருடைய மகனான ஒரு சிறுவனும் வருகிறான். ஒரு பள்ளியில் கலை நிகழ்ச்சி நடத்துவதற்காக அந்தக் கலைஞர் சென்றுகொண்டிருக்கிறார். அதிலிருந்து கிடைக்கும் பணத்தில் தனக்குப் பிடித்தவற்றை வாங்கித் தருவார் என்று அவரது மகனும் காத்திருக்கிறான். எதிர்பாராத காரணத்தால் பள்ளிக்கு விடுமுறை.

திரும்பிச் செல்லப் பேருந்தில் பயணச்சீட்டு வாங்கக்கூட பணமில்லை. அதனால் பள்ளி முதல்வர் வரும்வரை காத்திருக்கிறார்கள். இருக்கும் காசில் சாலையோரக் கடையில் பையனுக்கு வடை வாங்கித் தருகிறார். அக்கடையில் வேலைபார்க்கும் வாய்பேச இயலாத சிறுமியிடம் உரையாடுகிறார். அதன்வழியே ஒரு கூத்துக் கலைஞனின் வாழ்வு சொல்லப்படுகிறது. கலை குறித்த பெருமிதமும் நம்பிக்கையும் ஏற்படுத்தும் நெகிழ்வுடன் படம் நிறைவடைகிறது.

“இந்தப் படத்தைப் பார்த்த பிறகு உங்க மனசுல என்ன தோணுது?” என்று மாணவர்களிடம் கேட்டேன்.

நாம கத்துகிட்டதை மத்தவங் களுக்குச் சொல்லித் தரணும்.

அடிக்கக் கூடாது!

‘நாட்டுப்புறக் கலைகளை வளர்க்கணும்’, ‘சிறுவர்களை வேலைக்கு வைக்கக் கூடாது கொடுமைப்படுத்தவும் கூடாது’ என்று பல்வேறு எண்ணங்களை மாணவர்கள் பகிர்ந்துகொண்டனர்.

“என்னென்ன கிராமியக் கலைகளை நீங்க நேரில் பார்த்திருக் கீங்க?” என்று கேட்டேன்.

கரகாட்டம், ஒயிலாட்டம், மாடு - மயில் ஆட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், கட்டைக்கால் ஆட்டம்.

‘ஐயா, தெற்குவாசல் சந்தனக்கூடு நடக்கும்போது கேரளாவிலிருந்து இதே மாதிரி வேஷம் போட்டு ஆடுவாங்க.’

மாணவர்களுடனான உரையாடலில் “கிராமியக் கலைகளைக் காக்க வேண்டும்!” என்ற ஒரு குரல் நீண்ட நேரம் மனதுக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது. அதோடு “நாம கத்துகிட்டதை மத்தவங்களுக்குச் சொல்லித் தரணும்” என்ற குரலும்.

அழிந்துவரும் கிராமியக் கலை வடிவங்களைக் காப்பது நம் கடமை. பள்ளிகள் அதை எளிதாகக் கைக்கொள்ள முடியும். அந்தந்தப் பகுதியில் நலிந்துவரும் கலை வடிவங்களை அந்தப் பகுதியில் இருக்கும் பள்ளி தத்தெடுத்துக் கொண்டாலே போதும்.

ஒரு தலைமுறை மாணவர்களுக்குப் பயிற்சி தருவதன்  மூலம் எளிதில் கலைகளைக் காத்துவிடலாம். அதை அவர்கள் மூலமே அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்திவிட முடியும். பாரம்பரியம், பண்பாடு என்று பெருமிதத்தோடு சொல்லுமளவு அவற்றைக் காப்பாற்றி அடுத்த தலைமுறையிடம் அளிப்பதும் நமது கடமை.

‘கர்ணமோட்சம்’


- கட்டுரையாளர், பள்ளி ஆசிரியர்,
தொடர்புக்கு: artsiva13@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 mins ago

ஜோதிடம்

18 mins ago

ஜோதிடம்

31 mins ago

வாழ்வியல்

36 mins ago

ஜோதிடம்

1 hour ago

க்ரைம்

52 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்