‘நான் முதல்வன் - உயர்வுக்குப் படி’ திட்டம் மூலம் 15,713 பேர் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ப்பு: அரசு

By செய்திப்பிரிவு

சென்னை: ‘நான் முதல்வன் - உயர்வுக்குப் படி’ திட்டம் மூலம் 15,713 பேர் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘இளைஞர்களின் வாழ்க்கையை வடிவமைப்பதிலும் மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. இருப்பினும், 12ம் வகுப்பை முடித்த பிறகு மாணவர்களின் இடைநிறுத்த விகிதம் அதிகரிப்பது என்பது மாநிலத்தின் கல்வி வளர்ச்சியைப் பாதிக்கும் ஒரு போக்கு ஆகும். தமிழக இளைஞர்கள் தொழில்முயற்சிகளிலும் அரசாங்கத்தில் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிடுவதிலும் சம வாய்ப்புகளை உறுதிசெய்யும் அதே வேளையில், மாநிலத்தின் கல்வி வளர்ச்சியில் முக்கியமான அளவுகோலான உயர் கல்வி மொத்த சேர்க்கை விகிதத்தை (GER) அடைவதில் இந்தச் சிக்கல் குறிப்பிடத்தக்கச் சவாலாக உள்ளது.

12ம் வகுப்புக்குப் பிறகு மாணவர்கள் இடைநிற்றல் விகிதத்தைக் குறைப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக , முதல்வரின் “நான் முதல்வன்” தொலைநோக்குப் பார்வைத் திட்டம், கல்வி நிறுவனங்களின் அளவிலும் சமூக அளவிலும் பயனுள்ள பாதையை உருவாக்கியுள்ளது. பள்ளிகள் அளவில், நான் முதல்வன் முன்முயற்சியானது, வாழ்க்கை வழிகாட்டி ஆலோசகர்கள் அடங்கிய ஒரு குழுவை உருவாக்கி, எதிர்கால வாழ்க்கைக்கான உள்ளீடுகளை வழங்குவதற்கும், பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள் தங்கள் விருப்பப்படி உயர்கல்வியைத் தேர்வு செய்யவும், விண்ணப்பப் படிவங்களை நிரப்பவும் அவர்களுக்கு வழிகாட்டுவதற்கு உதவியது.

2022-23 கல்வியாண்டில், 3,23,456 மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து 12ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 2,40,460 பேர் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கப் பள்ளிகளில் உள்ள நான் முதல்வன் தொழில் பிரிவுகளால் வசதி செய்யப்பட்டது. மீதமுள்ள மாணவர்கள் மாவட்டம் வாரியாக அடையாளம் காணப்பட்டு, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை அமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ், அவர்கள் உயர்கல்வியைத் தொடரச் செய்யும்வகையில் "உயர்வுக்குப் படி" என்ற முன்முயற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசுத் துறைகள், வங்கிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்கு விரிவான சேர்க்கை வாய்ப்புகளை வழங்குவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன. முதல்வரின் அறிவுறுத்தலின் கீழ், மாணவர்களின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், ஒவ்வொரு வருவாய்க் கோட்டத்திலும் இரண்டு கட்டங்களாக இந்த முயற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் நோக்கம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு மாணவருக்கும் விரிவான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவை வழங்குவதும்; மாணவர்களுக்குக் கிடைக்கும் பல்வேறு கல்வி வாய்ப்புகள், உதவித்தொகை மற்றும் ஆதரவு சேவைகள் பற்றிய தகவல்களைப் பரப்புதல், அதற்கு உதவக்கூடிய அமைப்புகள் பற்றி மாணவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆலோசனை வழங்குதல், "புதுமைப் பெண்" போன்ற திட்டங்கள் மற்றும் இதர சமூக நலத்திட்டங்கள், கல்வி நிறுவனங்கள் அல்லது திறன் பயிற்சித் திட்டங்களில் அவர்கள் சேர்வதற்கு வழிவகுக்கும் சேவைகளின் 100% ஒருங்கிணைப்பை உறுதிசெய்வதாகும்.

நான் முதல்வன் “உயர்வுக்குப் படி” திட்டம் மூன்று கட்டங்களாகத் திட்டமிடப்பட்டுள்ளது - முதல் கட்டம் 22.06.2023 முதல் 27.06.2023 வரை தமிழகத்தின் மாவட்டங்களில் உள்ள 34 கோட்டங்களிலும்; இரண்டாம் கட்டம் 30.06.2023 முதல் 04.07.2023 வரை தமிழகத்தின் மாவட்டங்களில் உள்ள 38 கோட்டங்களிலும் மூன்றாம் கட்டம் 07.07.2023 முதல் 08.07.2023 வரை தமிழ்நாட்டின் மாவட்டங்களில் உள்ள 21 கோட்டங்களிலும் திட்டமிடப்பட்டது.

பள்ளிக் கல்வித் துறையால் அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் பிரிவு முகாம்களுக்குத் திரட்டப்பட்டனர். சார் ஆட்சியரின் ஏற்பாட்டில், மாவட்ட திறன் மேம்பாட்டு அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகியோர் முகாமின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தனர். இந்த முகாம்களில், வங்கிகள் தங்களிடம் உள்ள கல்விக் கடன் திட்டங்களை விளக்கி ,பல்வேறு மாவட்டங்களில் உடனடிக் கடன் வழங்க ஏற்பாடு செய்தன.

அத்துடன் மாணவர்களுக்கு, உயர் கல்வியின் முக்கியத்துவம், உதவித்தொகை விவரங்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் படிப்புகள், மருத்துவம் மற்றும் பாராமெடிக்கல் படிப்புகள், விவசாயம் மற்றும் அது சார்ந்த படிப்புகள், பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ படிப்புகள் மற்றும் அவற்றின் அருகில் உள்ள கல்லூரிகளின் பட்டியலைக் காட்டும் 'கல்லூரிக் கனவு' கையேடுவழங்கப்பட்டது. மேலும், பல்வேறு மூகப் பாதுகாப்புத் திட்டங்கள், உதவித்தொகைத் திட்டங்கள், பல்வேறு அரசுத் துறைகள்மூலம் கிடைக்கும் ஆதரவு வலையமைப்பு ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன.

மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித் துறை, சமூக நலத் துறை, முன்னணி வங்கிகள், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, திறன் மேம்பாடு ஆகிய துறைகளின் ஆதரவுடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் திறம்பட ஒருங்கிணைக்கப்பட்ட "உயர்வுக்குப் படி" யின் மூன்று கட்டங்களும் மாபெரும் வெற்றி பெற்றன. இந்நிகழ்ச்சிக்காகத் திரட்டப்பட்ட 30,269 மாணவர்களில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 7,884 பேர், பொறியியல் கல்லூரிகளில் 2,144 பேர், பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,461 பேர், ஐடிஐயில் 1,876 பேர் மற்றும் பிற உயர்கல்விப் படிப்புகளில் 2,348 பேர் உட்பட 15,713 மாணவர்கள் தாங்கள் விரும்பும் உயர்கல்வி நிறுவனங்களில் சேர வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் வெற்றிகரமாகச் சேர்க்கப்படுவதையும், அவர்களின் உயர்கல்வியைத் தீவிரமாகத் தொடர்வதையும் உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்டு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து கண்காணிப்பு அமைப்பையும் உருவாக்கியுள்ளது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

18 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

50 mins ago

வாழ்வியல்

59 mins ago

தமிழகம்

53 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

2 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்