தி.மலை ஏடிஎம் கொள்ளை | மகாராஷ்டிரா, ம.பி-யில் ஈடுபட்ட அதே கும்பலா? - ஐஜி கண்ணன் அப்டேட்

By இரா.தினேஷ் குமார்

திருவண்ணாமலை: “மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேச மாநில ஏடிஎம் கொள்ளையிலும், திருவண்ணாமலை மாவட்ட ஏடிஎம் கொள்ளையிலும் ஈடுபட்டுள்ளது ஒரே கும்பலைச் சேர்ந்தவர்களா என 3 நாட்களில் முடிவு தெரியவரும்” என்று வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் 3 ஏடிஎம் மையங்கள் மற்றும் தனியார் வங்கியின் ஒரு ஏடிஎம் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.12) அதிகாலை ரூ.73 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்தக் கொள்ளையில் வட மாநில கும்பல் ஈடுபட்டிருப்பதும், அவர்கள் பயன்படுத்திய காரில் இருந்த ஆந்திர மாநில பதிவு எண் போலியானது என காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளன.

நான்கு ஏடிஎம் மையங்களில் நடைபெற்றுள்ள கொள்ளை தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன், திருவண்ணாமலையில் 2-வது நாளாக இன்று (13-ம் தேதி) முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார். திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ''திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ம் தேதி அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரை, நான்கு ஏடிஎம் மையங்களில் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளன.

ஏடிஎம் மையங்களில் நானும், டிஐஜி மற்றும் எஸ்பிக்கள் ஆய்வு செய்துள்ளோம். ஏடிஎம் இயந்திரத்தின் செயல்பாடு மற்றும் அமைப்பு குறித்த தொழில்நுட்பத்தை நன்றாக தெரிந்த செயல்முறை குற்றவாளிதான் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற எங்களது கணிப்பு என்பது முற்றிலும் உண்மையாகி உள்ளன. ஏடிஎம் திருட்டில் ஈடுபடும் குறிப்பிட்ட கும்பல்தான், கொள்ளையில் ஈடுபட்டுள்ளன. ஏடிஎம் மையங்களில் இருந்த அலாரங்களை செயலிழக்க செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஏடிஎம் கொள்ளை சம்பவத்தை போன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் 3 கொள்ளையும், மத்தியப் பிரதேசத்தில் 2 கொள்ளையும், ஒடிசா மற்றும் அசாம் மாநிலத்தில் தலா ஒரு கொள்ளை நடைபெற்றுள்ளது. இதே செயல்முறையை பின்பற்றி, தமிழகத்தில் ஏடிஎம் கொள்ளை நடைபெற்றுள்ளது என்பது இதுவே முதல் முறையாகும்.

தமிழகத்தில் சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகள், புதுச்சேரி, வேலூர் மற்றும் திருவண்ணாமலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் 22 இடங்களில் ஏடிஎம் கொள்ளை நடைபெற்றுள்ளது. அனைத்தும் குறிப்பிட்ட டெபாசிட் இயந்திரத்தில் நடைபெற்றுள்ளது. இந்தக் கொள்ளை வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர். இவர்களும், திருவண்ணாமலை மாவட்ட ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களும், ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது, எங்களது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஏடிஎம் கொள்ளைச் சம்பவம் மீது அரசின் பார்வை கடுமையாக உள்ளன. இதனால், ஐஜி ஆகிய நான் முகாமிட்டுள்ளேன். டிஐஜி தலையில் விசாரணை நடைபெறுகிறது. 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தனிப்படையில் 5 எஸ்பிக்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்துக்கு வெளியே தனிப்படையினர் முகாமிட்டுள்ளனர். ஏடிஎம் கொள்ளை வழக்குகளில் விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி நியமிக்கப்பட்டுள்ளது.

சில துப்புக்கள் கிடைத்துள்ளன. எங்களுக்கு கிடைத்துள்ள தடய அறிவியல் சோதனையின் ஆதாரங்களால் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம். ஒரே கும்பலை சேர்ந்தவர்களால், ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

கார்த்திகை தீப திருவிழா நடைபெறும் திருவண்ணாமலை மாவட்டத்தில் காவலர் பணியிடம் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு சில நிகழ்வு, இதுபோன்று நடைபெறும். இதற்காக காவலர்களை குறைசொல்ல முடியாது. கேஜிஎஃப் கொள்ளைக்கும், திருவண்ணாமலை மாவட்ட ஏடிஎம் கொள்ளைக்கும் தொடர்பு உள்ளதா என பின்னர் தெரிவிக்கப்படும். ரோந்து பணியை சரியாக மேற்கொள்ளாத காவல்துறையை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

உலகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

5 hours ago

மேலும்