கோவை | பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் ஒருவர் கைது

By செய்திப்பிரிவு

கோவையில் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் பிஎஃப்ஐ அமைப்பை சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையில் கோவை மாநகர் மாவட்ட பாஜகவின் தலைமை அலுவலகம் உள்ளது. கடந்த 22-ம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், இந்த அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த காட்டூர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று தடயங்களை சேகரித்து விசாரணையில் ஈடுபட்டனர். பாஜக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை கண்டறிந்து, காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியினர் போராட்டத்திலும் அப்போது ஈடுபட்டனர்.

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலர் சரவணன் அளித்த புகாரின் பேரில் காட்டூர் காவல்துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மர்மநபர்களை பிடிக்க, காட்டூர் சரக உதவி ஆணையர் வின்சென்ட் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பாஜக அலுவலகம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தனிப்படையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.

அதேசமயம், மறுபுறம் தொலைதொடர்பு நிறுவனங்களின் உதவியோடு, மேற்கண்ட பகுதியில் சம்பவத்தன்று பதிவாகியிருந்த செல்போன் அழைப்புகளின் விவரங்களை சேகரித்து விசாரணையில் ஈடுபட்டனர்.

மற்றொரு தனிப்படையினர் சந்தேகத்துக்குரிய நபர்களிடம் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக சதாம் உசேன் என்பவரை நேற்று போலீஸார் கைது செய்தனர். இவர், பிஃஎப்ஐ முன்னாள் நிர்வாகி. தற்போது எஸ்டிபிஐ கட்சியில் உள்ளார்.

இது தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக துடியலூர் பகுதியைச் சேர்ந்த சதாம்உசேன் (31) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர், துடியலூர் பகுதி பிஎஃப்ஐ முன்னாள் பொறுப்பாளர் ஆவார். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை தேடி வருகிறோம். விரைவில் அவரும் கைது செய்யப்படுவார். முன்னர் இரு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டிருந்தது.

தற்போது வெடிபொருள் தடுப்புச் சட்டம், ஆட்கள் குடியிருப்புப் பகுதியில் தீ விபத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.

மேலும், காந்திபுரம் நூறடி சாலையில் உள்ள பாஜக நிர்வாகியின் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கிலும் மேற்கண்ட நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

19 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

38 mins ago

விளையாட்டு

52 mins ago

சினிமா

1 hour ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்