ரூ.5 கோடி கேட்டு கடத்தப்பட்ட மாணவர் கேரளாவில் மீட்பு - போலீஸ் தேடுவதை அறிந்த கடத்தல்காரர் தற்கொலை

By செய்திப்பிரிவு

திருப்பூர்: திருப்பூரில் ரூ.5 கோடி கேட்டு கடத்தப்பட்ட 10-ம் வகுப்பு மாணவர் கேரளாவில் பத்திரமாக மீட்கப்பட்டார். மாணவரை கடத்திய இளைஞர், போலீஸார் தேடுவதை அறிந்து தற்கொலை செய்துகொண்டார்.

திருப்பூர் அடுத்த பெருமாநல்லூர் அருகே கடன் ஆலோசனை நிறுவனம் நடத்துபவர் ராஜசேகர். இந்த நிறுவனம் சார்பில் ஏராளமான வீடுகள் கட்டி விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தனர். இதற்காக பலரிடம் பணம் வாங்கி, வீடு கட்டும்பணி நடந்து வந்துள்ளது.

இந்த சூழலில், கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ராகேஷ் (29) என்பவரின் அறிமுகம் ராஜசேகருக்கு கிடைத்தது. வீடு கட்டும் திட்டத்துக்காக அவர் ரூ.38.60 லட்சம் கொடுத்துள்ளார். பின்னர், அந்த இடம் பிடிக்காததால், பணத்தை திருப்பி தருமாறு ராஜசேகரிடம் வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், ராஜசேகர் தரவில்லை.

இந்நிலையில், இந்த நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்யும் வேலம்பாளையம் சொர்ணபுரி பகுதியை சேர்ந்த சிவக்குமார் (54) என்பவரது வீட்டுக்குள் முகமூடி அணிந்த இருவர் கடந்த 16-ம் தேதி புகுந்துள்ளனர். கத்தியைக் காட்டி மிரட்டி, சிவக்குமாரையும், அவரது மனைவி கவிதாவையும் கட்டிப் போட்டுவிட்டு, வீடு முழுவதும் பணத்தை தேடியுள்ளனர்.

பள்ளிக்கு சென்றிருந்த அவர்களது மகனான 10-ம் வகுப்பு மாணவன் அஜய் பிரணவ் (14), மாலையில் வீடு திரும்பியுள்ளார். அவரையும் கட்டிப் போடுவதற்கு மர்ம நபர்கள் முயற்சித்துள்ளனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக ஒருவரது முகமூடி விலகியதால், அவர் ராகேஷ் என்பதை சிவக்குமார் கண்டுபிடித்துவிட்டார்.

இதையடுத்து, ரூ.5 கோடியை கொடுத்துவிட்டு மகனை மீட்டுச் செல்லுமாறு கூறிவிட்டு, அஜய் பிரணவ்வை அவர்கள் இருவரும் காரில் கடத்திச் சென்றனர்.

இதற்கிடையில், நீண்ட நேரமாக வீட்டின் கதவு திறந்திருந்ததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். வீட்டுக்குள் சிவக்குமார் மற்றும் அவரது மனைவி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டனர்.

இதுகுறித்து வேலம்பாளையம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதுதொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் விசாரித்தனர். கேரள மாநிலம் கொல்லத்துக்கு ராகேஷ் சென்றது தெரியவந்தது.

இந்த நிலையில், தனிப்படை போலீஸார் கேரளாவுக்கு வருவதை அறிந்த ராகேஷ், அங்குள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சிறுவனை போலீஸார் பத்திரமாக மீட்டு, திருப்பூருக்கு அழைத்து வந்துள்ளனர். கடத்தலில் ஈடுபட்ட ஓட்டுநர் உட்பட 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். இதுதொடர்பாக வேலம்பாளையம் போலீஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்