சென்னை | வங்கி கொள்ளை நடந்த மூன்றே நாட்களில் 31.7 கிலோ நகைகளும் மீட்பு - நகைகளை உருக்க பேரம் பேசிய நபரிடம் விசாரணை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை வங்கியில் பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்ட 31.7 கிலோ தங்க நகைகளை மூன்றே நாட்களில் போலீஸார் மீட்டுள்ளனர். இந்த வழக்கில் ஏற்கெனவே 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். நகைகளை உருக்கித் தருவது தொடர்பாக பேரம் பேசிய கோவை நகை வியாபாரியின் உறவினரிடமும் விசாரணை நடக்கிறது.

சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டன் சாலையில் பெடரல் வங்கியின் நகைக்கடன் பிரிவான பெட் வங்கி நிதிச் சேவைகள் மையம் இயங்கி வருகிறது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த 31.7 கிலோ தங்க நகைகள், கடந்த 13-ம் தேதி கொள்ளை போனது. பட்டப்பகலில் வங்கி ஊழியர்களை கத்திமுனையில் மிரட்டி கட்டிப் போட்டுவிட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

11 தனிப்படைகள்

கொள்ளை குறித்து அரும்பாக்கம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த துணிகர கொள்ளையில் 7 பேர் வரை ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. கொள்ளையர்களைப் பிடிக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரடி மேற்பார்வையில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொள்ளை நடந்த வங்கியின் வில்லிவாக்கம் கிளையில் மேலாளராக பணிபுரிந்த முருகன் என்பவர்தான் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. அவரது கூட்டாளிகளான வில்லிவாக்கம் பாரதி நகரைச் சேர்ந்த சந்தோஷ் (30), அதே பகுதி மண்ணடி தெருவைச் சேர்ந்த பாலாஜி (28) ஆகிய இருவரை முதலில் போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 18 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.8.5 கோடி ஆகும். கொள்ளைக்கு பயன்படுத்திய 2 கார்களும் ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன. முக்கிய குற்றவாளியான முருகன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், கொள்ளையடித்த நகைகளை வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்வது, அவற்றை உருக்கி விற்பனை செய்வது குறித்து திட்டம் தீட்டியதாக வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சூர்யா என்பவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். கொள்ளையடித்த நகையின் ஒரு பகுதியை விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா (20) என்பவரிடம் சூர்யா கொடுத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து நேற்று அதிகாலை குண்டலப்புலியூர் சென்ற தனிப்படை போலீஸார், இளையராஜா வீட்டில் இருந்த 13.7 கிலோ நகைகளை மீட்டனர். அவரையும் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வந்தனர்.

சென்னை கோட்டூர்புரத்தில் தங்கி வேலை செய்தபோது சூர்யாவுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவர் தனது தோழியுடன் வந்து ஒரு பையை கொடுத்து வைத்திருக்கச் சொன்னதாகவும், போலீஸார் வந்து பிடிக்கும் வரை அந்த பையில் என்ன இருந்தது என்பது தனக்கு தெரியாது என்றும் இளையராஜா கூறியுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

அதேநேரத்தில், கொள்ளையடித்த நகைகளை உருக்குவது தொடர்பாக கோவை வீரகேரளத்தைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரின் உற வினரான ஸ்ரீவத்சவ் என்பவரிடம் சூர்யா ஏற்கெனவே பேரம் பேசிய தகவலும் போலீஸாருக்கு கிடைத்தது. இதையடுத்து கோவைக்கு சென்ற தனிப்படையினர், உள்ளூர் போலீஸார் உதவியுடன் ஸ்ரீவத்சவை பிடித்து ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு இடத்தில் வைத்து விசாரித்தனர்.

இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, “கொள்ளையடித்த பின்னர் சென்னையில் இருந்து தப்பிய சூர்யா, ஒரு பகுதி நகையை நண்பரிடம் ஒப்படைத்துவிட்டு கோவைக்கு சென்றுள்ளார். நகையை உருக்குவது தொடர்பாக நகை வியாபாரிகளை அணுகி விசாரித்துள்ளார். ஆனால், நகையை உருக்கித் தர யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து ஸ்ரீவத்சவை சந்தித்துள்ளார். நகையை உருக்கித் தர அவர் ஒப்புக்கொண்டார். நகை விற்பனை தொடர்பாகவும் அவரிடம் சூர்யா பேரம் பேசியுள்ளார். இதுபற்றி ஸ்ரீவத்சவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரை தனிப்படை போலீஸார் சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்” என்றனர்.

கொள்ளைபோன 72 மணி நேரத்தில் மொத்த நகையான 31.7 கிலோ நகைகளையும் மீட்டதுடன், வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களை கைது செய்த தனிப்படை போலீஸாரை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பாராட்டினார்.

கொள்ளையர்கள் பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:

கொள்ளை சம்பவத்தில் முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு மறைமுகமாக உதவி செய்த மேலும் சிலரை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர். அவர்களைப் பிடிக்க கோவை, பெங்களூரு, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.

ஆடம்பரமாக வாழ ஆசை

கட்டுமஸ்தான உடலுடன் பாடி பில்டர் போல இருக்கும் முருகன், ஆடம்பரமாக வாழ்வதற்கு ஆசைப்பட்டுள்ளார். உடற்பயிற்சி கூடத்துக்கு செல்லும்போது அங்கு பழக்கமான தனது நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபடுவது குறித்து ஆலோசனை செய்துள்ளார். அதற்கு அவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

போலீஸாரிடம் சிக்காமல் இருப்பதற்கு என்னென்ன வழிகள் இருக்கிறது என்பது குறித்து பல திரைப்படங்களை பார்த்து ஆலோசித்துள்ளனர். கொள்ளையடித்த நகைகளை மொத்தமாக எடுத்துச் செல்லாமல் ஒவ்வொருவரும் பிரித்து எடுத்துச் சென்று, பின்னர் ஒரே இடத்தில் வைத்து விற்பனை செய்வது என முடிவு செய்திருந்தனர்.

போலீஸாரின் கவனத்தை திசை திருப்புவதற்காக பல்வேறு இடங்களில் செல்போனை ஆன் செய்து ஆப் செய்துள்ளனர். போலீஸார் தங்கள் செல்போன் சிக்னலை பின் தொடர்ந்தால் அது பல வழிகளில் கடந்து செல்வது போன்று ஆன்லைன் மூலம் வடிவமைத்துள்ளனர். இவர்களுக்கு பக்கபலமாக இருந்தது யார் என்பது குறித்தும் தனிப்படை போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். வேறு சில வங்கிகளிலும் கொள்ளை அடிக்க முருகனும் அவரது கூட்டாளிகளும் திட்டமிட்டுள்ளனர். ஆனால், முதல் கொள்ளை வழக்கிலேயே அவர்கள் போலீஸில் சிக்கிவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

19 mins ago

சினிமா

18 mins ago

இந்தியா

24 mins ago

ஓடிடி களம்

42 mins ago

கருத்துப் பேழை

39 mins ago

தமிழகம்

43 mins ago

இந்தியா

32 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்