ஏழைகள், மதுவுக்கு அடிமையானவர்களின் வங்கிக் கணக்கு, சிம் கார்டைப் பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி: டெல்லியைச் சேர்ந்த மூவர் கைது

By என்.கணேஷ்ராஜ்

வேலை வாங்கித்தருவதாக குறுந்தகவல் அனுப்பி லட்சக்கணக்கில் மோசடி செய்த டெல்லியைச் சேர்ந்த 3 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்து தேனி அழைத்து வந்தனர்.

தமிழகத்தின் 20 மாவட்டத்தைச் சேர்ந்தவர்களிடம் இவர்கள் கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஜம்புலிபுத்தூரைச் சேர்ந்த மலைச்சாமி மனைவி சாரதா (31). பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில் இவருடைய மொபைலிற்கு வேலைவேண்டுமா உங்களது விவரங்களை அனுப்புங்கள் என்ற குறுந்தகவல் வந்துள்ளது.

இதனை நம்பி தனது முழுவிவரங்களைக்கொடுத்துள்ளார். பின்பு வேறொரு எண்ணில் இருந்து பேசிய நபர் தான் டெல்லி ஏர்போர்ட்டில் வேலை செய்வதாகவும், அங்கு வேலை காலியாக உள்ளது. முன்கட்டணமாக ரூ.2 ஆயிரத்து 550 செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

சம்பந்தப்பட்ட வங்கிக்கணக்கிற்கு இவர் பணம் செலுத்தி உள்ளார். இதனைத் தொடர்ந்து போலியான பணிநியமன ஆணை வந்துள்ளது. மேலும் பல்வேறு எண்களில் இருந்து தொடர்பு கொண்டு பயிற்சி கட்டணம், தொழில்நுட்ப கட்டணம், தொழில்நுட்ப கருவிகள், டெலிவரி கட்டணம், குடும்ப காப்பீடு, பயிற்சிக்கு தங்குவதற்கான கட்டணம், சம்பள கணக்கு தொடங்குதல், மருத்துவக்கட்டணம் என்று ஒவ்வொரு கட்டமாக பேசி பல தவணைகளாக ரூ.15 லட்சத்து 74 ஆயிரத்து 425 வரை மோசடி செய்துள்ளனர்.

வேலை கிடைக்காததால் சாரதா தேனி மாவட்ட சைபர் க்ரைம் போலீஸில் புகார் கொடுத்தார். விசாரணையில் டெல்லியில் இருந்து மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் மேற்பார்வையில் ஆய்வாளர் சரவணன் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவினர் டெல்லி சென்றனர்.

அங்கு நடந்த விசாரணையில் தொடர்பு எண்கள், வங்கிக்கணக்கு உள்ளிட்ட அனைத்தும் போலியானது என்று தெரிய வந்தது. ஒரு வங்கிக்கணக்கில் உள்ள கோவிந்த் (21) என்பவரைத் தொடர்பு கொண்ட போது குற்றவாளிகளுக்கும் இவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இவர் மூலமாக டெல்லியில் கால் சென்டர் நடத்திவரும் விஜய்(29), ராம்சந்திரன்(33) ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்து தேனி அழைத்து வந்தனர்.

இது குறித்து காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் கூறுகையில், கைது செய்யப்பட்ட விஜய், ராம்சந்திரன் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இரண்டு தலைமுறைகளாக டெல்லியிலேயே வசித்து வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட மொபைல்

வங்கியில் பியூன் வேலை பார்த்ததால் அங்குள்ள நடைமுறை, பரிவர்த்தனை உள்ளிட்ட விவரங்களை நன்கு தெரிந்து வைத்துள்ளனர். பின்பு மதுவுக்கு அடிமையானவர்கள், ஏழ்மையில் உள்ளவர்களிடம் பணம் கொடுத்து அவர்கள் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கி, மொபைல் சிம்கார்டு வாங்கி தங்கள் வசம் வைத்துள்ளனர்.

அதன் மூலமே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் நன்றாக பேசியதாலும், சிறிது சிறிதாக பணம் கேட்டு அதற்காக ஒரு ஆவணத்தையும் அனுப்பிக் கொண்டே இருந்ததாலும் பலரும் ஏமாந்துள்ளனர் என்றார்.

தனிப்படை ஆய்வாளர் சரவணன் கூறுகையில், பிடிபட்டவர்கள் குறைந்த கல்வித்தகுதி கொண்டவர்கள். 31மொபைல்களை வைத்து ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட எண்ணில் இருந்தே பேசி வந்துள்ளனர். போன் மாறி விடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு மொபைலிலும் ஏமாற்ற நினைப்பவரின் பெயரை எழுதி ஒட்டி வைத்துள்ளனர். இரவில் இந்த போன்கள் அனைத்தையும் அலுவலகத்திலே விட்டுச் சென்று விடுவர். தமிழகத்தில் 20க்கு மேற்பட்ட மாவட்டங்களில் தொடர்பு கொண்டு பல கோடிரூபாய் ஏமாற்றி உள்ளனர் என்றார்.

ஒவ்வொருவரும் பணம் அனுப்பியதுமே உடனடியாக அவற்றை எடுத்து விடுவதால் இவர்களிடம் இருந்து ரூ.50ஆயிரம் மட்டுமே மீட்க முடிந்தது. விமானத்தில் வெளிநாடு, உள்நாடு சுற்றுலா செல்லுதல், ஆடம்பரமான வாழ்க்கை, அபார்ட்மென்ட் குடியிருப்பு என்று செல்வச்செழிப்பில் இவர்கள் வலம் வந்ததும் தெரிய வந்துள்ளது.

தொடர் விசாரணையில் ஏமாந்தவர்கள், இழந்த பணம், இவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் உள்ளிட்ட விபரங்கள் தெரிய வரும்என்று போலீஸார் தெரிவித்தனர்.

தமிழகத்தை குறிவைப்பது ஏன்?

தமிழகம் தூரமான மாநிலமாக உள்ளதால் ஏமாந்தவர்கள் நேரடியாக இங்கு வரவோ, போலீஸ் விசாரணையிலோ சிரமம் இருக்கும் என்பதால் தமிழகத்தை குறிவைத்து பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றவாளிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மோசடி செய்ததும் மொபைல், வங்கிக்கணக்கு உள்ளிட்ட அனைத்தையும் முடக்கிவிடுவதால் மோசடிகளை பல ஆண்டுகளாக கண்டறிய முடியாத நிலை இருந்து வந்தது.

குறுந்தகவல்களை பார்வேர்டு செய்ய வேண்டாம்..

பல்க் எஸ்எம்எஸ் என்ற ரீதியில் நூற்றுக்கணக்கான எண்களுக்கு வேலை வேண்டுமா? என்ற தகவல்களை தொடர்பு எண்ணுடன் குற்றவாளிகள் அனுப்பி உள்ளனர். அதற்கு கீழே இது எவருக்கேனும் உதவலாம் எனவே இதனை பார்வர்டு செய்து உதவுங்கள் என்ற குறிப்பும் இருந்துள்ளது. இதை பலரும் பார்வர்டு செய்ததால் அதை நம்பி லட்சக்கணக்கான ரூபாயை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 mins ago

இந்தியா

48 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்