ஓய்வுபெற்ற சார் பதிவாளருக்கு சொந்தமான ரூ.100 கோடி சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவு: மனைவிக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை

By செய்திப்பிரிவு

திருச்சி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஓய்வு பெற்ற சார் பதிவாளர், அவரது மனைவிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் தாத்தையங்கார்பேட்டையை அடுத்த பிள்ளாதுறை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன்(79). ஓய்வுபெற்ற சார் பதிவாளர். இவர், 1989-1993 காலகட்டத்தில் துறையூர்,உறையூர், முசிறி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் சார் பதிவாளராகப் பணியாற்றி வந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின்பேரில், 2001 ஆக. 17-ம்தேதி அப்போதைய திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு ஆய்வாளர் அம்பிகாபதி வழக்கு பதிவு செய்து, விசாரணைநடத்தினார். இதில், ஜானகிராமன் தனது பெயரிலும், மனைவி வசந்தி(65) பெயரிலும் வாங்கிய சொத்துகளின் மதிப்பு ரூ.32.25 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து, திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் அடிப்படையில், சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ஜானகிராமன், அவரது மனைவி வசந்தி ஆகிய இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கார்த்திகேயன் நேற்று தீர்ப்பளித்தார்.

மேலும், வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்துகளை பறிமுதல் செய்து அரசிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, ஜானகிராமன், அவரது மனைவி வசந்தி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். வருமானத்துக்கு அதிமாக சேர்க்கப்பட்ட சொத்துகளின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கு மேல் இருக்கும் என ஊழல் தடுப்பு மற்றும்கண்காணிப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

இந்த வழக்கின் தொடர் விசாரணையை டிஎஸ்பி மணிகண்டன், ஆய்வாளர் சேவியர் ராணி,உதவி ஆய்வாளர் பாஸ்கர் மேற்கொண்டனர். அரசுத் தரப்பில் வழக்கறிஞர் சுரேஷ்குமார் ஆஜரானார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

5 mins ago

உலகம்

47 mins ago

இந்தியா

1 hour ago

கல்வி

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

உலகம்

12 hours ago

வாழ்வியல்

12 hours ago

மேலும்