சிவாஜி கணேசனுக்கு பிறந்தநாள்: டூடுல் வெளியிட்டு கவுரவித்தது கூகுள்

By செய்திப்பிரிவு

தமிழ் சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம் எனவும், நடிகர் திலகம் எனவும் போற்றப்பட்ட சிவாஜி கணேசன் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 1). இதனையொட்டி கூகுள் டூடுல் வெளியிட்டு அவரைக் கவுரவப்படுத்தியுள்ளது.

முக்கிய தினங்களின்போது, முக்கியப் பிரமுகர்களின் பிறந்ததினத்திலும் கூகுள் தனது தேடுபொறி பக்கத்தில் வித்தியாசமான டூடுல்களை வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் இன்று சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாளுக்காக கூகுள் டூடுல் வெளியிட்டு அவரைக் கவுரவப்படுத்தியுள்ளது.

அந்த டூடுலில் சிவாஜியின் மூன்று கெட்டப் அடங்கிய ஓவியங்களும் அதன் பின்னணியில் படச்சுருளும் உள்ளன. பெங்களூருவைச் சேர்ந்த ஓவியர் நூப்பூர் ராஜேஷ் சோக்ஸி இந்த டூடுலைத் தயாரித்ததாக கூகுள் தெரிவித்திருக்கிறது.

இந்த டூடுலை நடிகர் சிவாஜியின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த ட்வீட்டில் அவர், "இதோ பெருமைமிகு சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாளை ஒட்டி கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது. கூகுள் இந்தியாவுக்கும், இந்த டூடுலை உருவாக்கிய நூபூர் சோக்ஸிக்கும் நன்றி. இது இன்னொரு பெருமித தருணம். அவரை இன்றும் நேசிக்கிறேன். அவரது இழப்பின் வலி ஒவ்வோர் ஆண்டும் கூடுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

சிவாஜி: 10 முக்கியத் தகவல்கள்

1. விழுப்புரத்தில் பிறந்தவர் (1927). விழுப்புரம் சின்னய்யா கணேசன் என்பது இவரது இயற்பெயர். தந்தை, விழுப்புரம் ரயில்வே தொழிற் சாலையில் பணியாற்றியவர்.

2. சிறுவன் கணேசனுக்கு, படிப்பில் ஈடுபாடு வரவில்லை. நாடகம், பஜனைக் கோஷ்டியில் பாடு வதில்தான் ஈடுபாடு. 1935-ல் நாட கங்களில் நடிக்கத் தொடங்கினார். முதலில் பெண் வேடங்களில் நடித்தார். பின்னர் ‘ராஜபார்ட் நடிகர்’ ஆனார். பொன்னுசாமி பிள்ளை நாடகக் கம்பெனி, எம்.ஆர்.ராதா கம்பெனி, என்.எஸ்.கே. சபா உள்ளிட்ட பல நாடக கம்பெனிகளில் சேர்ந்து நடித்தார்.

3. 1945-ல் ஒரு நாடகத்தில் சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்தார். அதில் இவரது நடிப்பினால் கவரப்பட்ட தந்தை பெரியார், இவரை ‘சிவாஜி கணேசன்’ என்று குறிப்பிட்டார். அன்றுமுதல் வி.சி.கணேசன், ‘சிவாஜி கணேசன்’ என அழைக்கப்பட்டார். 1952-ல் ‘பராசக்தி’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.

4. மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜ ராஜ சோழன், கப்பலோட்டியத் தமிழன் உள்ளிட்டத் திரைப்படங்களில் இவர் பேசிய வசனங்கள் ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அபார நடிப்புத் திறன் ஆகியவை இவரது தனிச்சிறப்புகள்.

5. காதல், வெற்றி, தோல்வி, வீரம், கோபம், சாந்தம், நகைச்சுவை, குணச்சித்திர நடிப்பு, பணக்காரன், ஏழை, நல்லவன், கெட்டவன், கிராமவாசி, நகரவாசி என இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை. பாசமலர், வசந்த மாளிகை, உயர்ந்த மனிதன், சிவந்த மண், தில்லானா மோகனாம்பாள், நவராத்திரி, வியட்நாம் வீடு, திருவருட்செல்வர், திருவிளையாடல், கர்ணன் உள்ளிட்ட வெற்றித் திரைக்காவியங்கள் இவருக்கு அழியாப் புகழ் பெற்றுத் தந்தன.

6. அந்நாட்களில் நடிக்க வருபவர்கள் பேசிக் காட்டுவது பராசக்தி, திருவிளையாடல், வீரபாண்டிய கட்டபொம்மன், மனோகரா உள்ளிட்ட திரைப்பட வசனங்களைத்தான். டி.எம். சவுந்தரராஜன் இவருக்காகப் பாடிய பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தன. திரையுலகில் நேரம் தவறாமைக்கு உதாரணமாக கூறப்படுபவர். தமிழில் ஏறக்குறைய 300 திரைப்படங்கள், தெலுங்கில் 9 , மலையாளத்தில் ஒன்று, இந்தியில் 2 திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

7. கவுரவ வேடங்களில் ஐந்து மொழிகளில் 19 திரைப்படங்களிலும் நடித்தவர். இவரது திரைப்படங்களில் பெரும்பாலானவை கன்னடம், தெலுங்கு, இந்தி, மராத்தி, வங்காளம் ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. சிவாஜி நாடக மன்றம் தொடங்கி பலருக்கு வாய்ப்பளித்தார். தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக 8 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

8. ஆப்பிரிக்க-ஆசியத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது, கலைமாமணி விருது, பத்மஸ்ரீ,, பத்மபூஷண், 1995-ல் செவாலியே விருது (இந்த விருதைப் பெற்ற முதல் இந்திய நடிகர் இவர்தான்), 1996-ல் தாதாசாகேப் பால்கே விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது நடிக்கும் பாணியை மையமாக வைத்தே மற்ற நடிக, நடிகையரின் நடிப்பு, ஒலி, ஒளி, பாடல், இசை, பின்னணி, இயக்கம் உள்ளிட்டவை அமைந்தன.

9. இந்தியாவில் 50 ஆண்டுகளில் தோன்றிய நடிகர்களில் தலைசிறந்தவர், நடிப்புச் சக்ரவர்த்தி, சிம்மக்குரலோன், தனக்குப் பின் வந்த அத்தனை நடிகர்களிடமும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்றெல்லாம் போற்றப்பட்டவர். அரசியலில் ஈடுபாடும் காமராஜரிடம் பற்றும் கொண்டவர்.

10.1982-ல் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவின் நயாகரா சிட்டியின் ஒருநாள் மேயராகும் கவுரவம் இவருக்குக் கிடைத்தது. தமிழ்த் திரையுலகின் ஒரு சகாப்தமாக தடம் பதித்த சிவாஜி கணேசன், 2001-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி காலமானார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

49 mins ago

இந்தியா

55 mins ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

மேலும்