தொழில் செய்ய முடியாமல் மூடும் கட்டாயம் ஏற்படும்: திரையரங்கு உரிமையாளர்கள் முதல்வருக்கு கடிதம்

By செய்திப்பிரிவு

தொழில் செய்ய முடியாமல் திரையரங்குகளை மூடும் கட்டாயம் ஏற்படும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை அச்சுறுத்தலால் மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. அதற்குப் பிறகு படிப்படியாக கரோனா அச்சுறுத்தல் குறைந்தாலும், தமிழக அரசு இன்னும் திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் சிரமத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழக முதல்வரை சந்தித்துக் கரோனா நிவாரண நிதி அளித்துவிட்டு, திரையரங்குகள் திறப்பதற்குக் கோரிக்கை விடுத்தார்கள். ஆனால், இன்னும் திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ளன.

இதனிடையே, திரையரங்கு உரிமையாளர்கள் தமிழக முதல்வருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். இந்தக் கடிதத்தினை திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்துக் கொடுத்துள்ளனர்.

அந்தக் கடிதத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் கூறியிருப்பதாவது:

"கரோனா - இரண்டாம் அலை மிகவும் உச்சக்கட்ட நிலை இருந்த சூழ்நிலையில் தமிழக முதல்வராக தாங்கள் பொறுப்பேற்றதற்குப் பிறகு கடந்த ஒருமாத காலத்திற்குள் தமிழகத்தில் கரோனா இல்லை என்ற நிலையை உருவாக்கி உள்ளீர்கள். அதுமற்றுமின்றி தமிழக மக்களின் பொருளாதாரம் பாதித்திடாத வகையில் படிப்படியாக ஒவ்வொரு தொழிலுக்கும் தளர்வுகளுடன் அனுமதி வழங்கி அத்துனை தொழில்களும் சுமுகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தங்களின் ஆளுமைத் திறனைக் கண்டு எங்களது சங்கத்தின் சார்பில் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எனினும் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் அனைத்தும் கடந்த 17.03.2020 முதல் தமிழக அரசின் ஆணைக்கு இணங்க காட்சிகள் ரத்து செய்யப்பட்டு திரையரங்குகள் இயங்க முடியாத சூழ்நிலையில் உள்ளது. இதனால் எங்களது தொழில் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் இத்துறையைச் சேர்ந்த ஏறத்தாழ 1,50,000 தொழிலாளர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி திரையரங்குகள் இயங்காத நிலை ஏற்பட்டதால் அங்கு பணிபுரியும் பணியாளர்களின் பொருளாதாரமும் வாழ்வாதாரமும் மிகவும் பதிப்பிற்குள்ளாகியிருக்கிறது. தமிழக அரசின் அறிவுரையின் பேரில் சமூக இடைவேளை கடைப்பிடித்தல், கிருமி நாசினி தெளித்தல், வெட்ப நிலை சோதனை போன்ற அனைத்து தற்காப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிப்பது மட்டுமன்றி எங்களது ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய பின்னரே அனுமதிப்போம் என்பதை உறுதியாகக் கூறுகிறோம்.

திரையரங்குகள் இயங்காத கரணத்தினால் திரைப்படங்கள் எதுவும் வெளிவராமல் அந்த துறைக்குச் சம்பந்தப்பட்ட பல சிறு தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், துணை நடிகர்கள் மற்றும் பல கலைத் துறையைச் சார்ந்தவர்களும் அவர்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள்.

இந்த நிலை நீடித்தால் எங்களால் தொழில் செய்ய முடியாமல் திரையரங்குகளை மூடும் கட்டாயம் ஏற்படும். ஏற்கனவே ஏராளமான திரையரங்குகள் திருமண மண்டபத்திற்கும் மற்றும் பல வேறு உபயோக கிடங்குகளுக்கும் மாற்றப்பட்டுவிட்டது. இன்னும் சில திரையரங்குகள் நிரந்தரமாகவே மூடப்பட்டு விட்டது.

அதுமட்டுமின்றி திரையரங்குகளின் மூலமாக தமிழக அரசிற்கு வருமானமாக ஈட்டப்படும் வரிப்பணமும், கடந்த 18 மாதங்களாக நின்றுவிட்டது என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே, தமிழக முதல்வராகிய நீங்கள் இதனைக் கருத்தில் கொண்டு எங்களது வாழ்விலும் பல தொழிலாளர்கள் வாழ்விலும் ஒளியேற்றி வைக்க வேண்டுமென்றும், தமிழ் திரைத்துறையை மீண்டும் வாழ வைக்கத் திரையரங்குகளை நாங்கள் உடனடியாக திறப்பதற்கு உத்தரவிடும்படி தாய் உள்ளம் படைத்த தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்"

இவ்வாறு திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

25 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

மேலும்