‘தல’யும் தல ரசிகர்களும் – தனித்துவம்மிக்க பந்தம் 

By ச.கோபாலகிருஷ்ணன்

எந்த ஒரு கலைஞனின் வெற்றிக்கும் ரசிகர்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும். அதுவும் சினிமா போன்ற வெகுஜனக் கலையில் கலைஞனுக்கும் ரசிகனுக்குமான பிணைப்பு ரத்த உறவுகளுக்கிடையிலான இணைப்பைப் போன்றது.

தமிழ் சினிமாவின் இன்றைய உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித் மற்றும் அவருடைய ரசிகர்களுக்கிடையிலான உறவு அன்பாலும் அக்கறையாலும் பாசத்தாலும் மரியாதையாலும் ஆழமாகவும் அழுத்தமாகவும் பிணைக்கப்பட்டது. தன்னளவில் பல தனித்துவம் மிக்க சிறப்புகளைக் கொண்டது.

ரசிகர்களால் அன்புடன் ‘தல’ என்று அழைக்கப்படும் அஜித்தின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் அவருடைய ரசிகர்களால் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படும். அவருடைய 50ஆம் பிறந்த நாளான இன்றும் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள்.

ஆனால் 50 வயதை நிறைவு செய்தல் என்பது ஒரு மனிதனின் வாழ்வில் மிக முக்கியமான தருணம். அஜித் அந்த முக்கியமான தருணத்தை அடைந்திருக்கும் வேளையில் அவருக்கும் அவருடைய ரசிகர்களுக்குமான உறவின் சிறப்புகளை நினைத்துப் பார்ப்பதற்கு சரியான தருணம்.

ஆக்‌ஷன் நாயகனாக முதல் வெற்றி

1990களில் நாயக நடிகராக தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியவர் அஜித். தொடக்கக் காலம் முதலே வெற்றியும் தோல்வியும் அஜித்துக்கு மாறி மாறிக் கிடைத்துள்ளன. அந்தத் தோல்விகளால் துவண்டுவிடாமல் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். சரண் இயக்கிய ‘அமர்க்களம்’ அஜித்தின் 25ஆம் படம். அந்தப் படம் அஜித்தை ஒரு ஆக்‌ஷன் நாயகனாக முன்னிறுத்தி ரசிகர்களின் வரவேற்பையும் பெற்று வெற்றி அடைந்தது.

இதற்கு முன் ‘காதல் கோட்டை’ போன்ற படங்களின் மூலம் ‘எல்லோருக்கும் பிடித்த பையன்’ என்னும் இமேஜைப் பெற்றார். ‘வாலி’ படத்தில் துணிச்சலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததோடு அதில் சிறப்பாக நடித்துத் தன் திறமையை நிரூபித்தார். இருந்தாலும் ஒரு நடிகர் அனைத்து வயதினரையும் சென்றடைய, தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்க ஆக்‌ஷன் படங்களில் நடிப்பதும் அவை வெற்றி பெறுவதும் இன்றியமையாதவை.

‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’ என சரண் இயக்கிய படங்கள் அஜித்தை ஆக்‌ஷன் நடிகராக அடையாளம் காட்டின. இந்தப் படங்களின் வெற்றிக்குப் பிறகும் அவர் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘முகவரி’ போன்ற படங்களில் மென்மையான நாயகனாக நடித்தார்.

’தல’ உருவான தருணம்

2001இல் வெளியான ‘தீனா’ அவரை ஆக்‌ஷன் நடிகர் என்பதைத் தாண்டி மாஸ் நடிகராக உயர்த்தியது. இந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரம் அவரை ‘தல’ என்று அழைக்க அதுவே அஜித்தை அவருடைய ரசிகர்கள் அன்புடன் அழைக்கும் சொல்லாக இன்றுவரை நீடிக்கிறது. இந்தப் படத்தில் நிலையானதாக உருவான அஜித் ரசிகர் படை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

‘தீனா’ வெற்றிக்குப் பிறகு ‘சிட்டிசன்’ படத்தில் ஒன்பது வித்தியாசமான கெட்டப்புகளில் தோன்றினார் அஜித். ஆக்‌ஷன் காட்சிகள், மாஸ் இமேஜ், பன்ச் வசனங்கள் ஆகியவற்றுக்காக மட்டுமல்லாமல் இதுபோன்ற மெனக்கெடல்களுக்காகவும் ரசிகர்கள் அஜித்தைக் கொண்டாடினர். தமிழில் முன்னணி நாயக நடிகராக உயர்ந்துவிட்ட நிலையில் ’அசோகா’ இந்திப் படத்தில் வில்லனாக நடித்தார்.

தமது அன்புக்குரிய ‘தல’ பலவகைப்பட்ட படங்களில் நடிப்பது குறித்து ரசிகர்களும் பெருமைகொண்டனர். அஜித்தும் அவருடைய ரசிகர்களை எல்லாவிதமான படங்களையும் தன்னைப் பல விதமான கதாபாத்திரங்களிலும் ஏற்றுக்கொண்டு ரசிப்பதற்குப் பழக்கினார். ரசிகர்களின் ரசனையை மதித்தார் என்று சொல்லலாம்.

எந்நிலையிலும் கைவிடாத ரசிகர்கள்

’தீனா’, ‘சிட்டிசன்’ போன்ற படங்களுக்குப் பிறகு அஜித் ரசிகர்கள் மாபெரு படையாக உருவெடுத்தனர். ‘தல’ தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திரமானார். ஆனால், அதற்குப் பிறகு சில வெற்றிகளும் பல தோல்விகளும், அஜித்தின் திரைப்படங்களின் நீண்ட தாமதங்களும், சில சர்ச்சைகளும் தொடர்ந்தன. ஆனால், அஜித்தை அவருடைய ரசிகர்கள் எந்த தருணத்திலும் கைவிடவில்லை.

‘தல’யின் புத்தெழுச்சிக்காக ஆவலுடன் காத்திருந்தனர். 2006இல் வெளியான ‘வரலாறு’ அஜித் திரையுலகில் கிட்டத்தட்ட இழந்துவிட்ட அந்தஸ்தை மீண்டும் பெற உதவியது. இந்தப் படத்தில் பெண் தன்மைகொண்ட பரதநாட்டியக் கலைஞராக அஜித் நடித்திருந்தார். பெண்களுக்குரிய நளினம் மிக்க உடல் மொழியையும் அசைவுகளையும் அவர் வெளிப்படுத்திய விதத்தையும் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

பொதுவான ரசிகர்களையும் இந்தப் படம் பெரிதும் கவர்ந்தது. அஜித்தின் திரைவாழ்வில் மிகப் பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது ‘வரலாறு’. இந்தப் படத்தின் வெற்றியை ஒவ்வொரு தல ரசிகரும் தன் சொந்த வெற்றியைப் போலக் கொண்டாடினர். அஜித்தும் தன் ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பை ஈடு செய்யும் வகையில் சரியான விருந்தைப் பரிமாறினார்.

அனைவரையும் சென்றடைந்த ஸ்டைலிஷ் நாயகன்

இதற்குப் பின் ‘பில்லா’ படத்தில் மிகவும் ஸ்டைலிஷான டானாக நடித்து தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் நாயகன் என்பதற்கு புதிய இலக்கணம் வகுத்தார் அஜித். பொதுவாக நகர்ப்புறங்களில் மட்டுமே செல்லுபடி ஆகக் கூடிய ஸ்டைலிஷ் ஆக்‌ஷன் திரைப்படங்கள் கடைக்கோடி கிராமங்களை உள்ளடக்கிய அனைத்து சென்டர்களிலும் வெற்றிபெற வைத்ததில் அஜித்துக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் பெரும் பங்கு உள்ளது.

’பில்லா’ மட்டுமல்லாமல் அவருடைய பிற்காலப் படங்களான ‘மங்காத்தா’, ‘என்னை அறிந்தால்’ போன்ற படங்களும் நகர்ப்புறத்தின் நவீனத்தன்மையையும் பளபளப்பையும் எல்லா வகையிலும் தரித்திருந்தன. ஆனால் இந்தப் படங்கள் வெளிநாட்டுச் சந்தையில் மட்டுமல்லாமல் தமிழகத்துக்குள்ளும் அனைத்துப் பகுதிகளிலும் வெற்றி பெற்றன.

மன்றக் கலைப்புக்குப் பின்னும் மாறாத ரசிகர்கள்

அஜித்தின் 50ஆம் படமான ‘மங்காத்தா’வும் நகர்ப்புற ஸ்டைலிஷ் படம்தான். இதில் முதல் முறையாக முழுநீள எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்ததோடு கறுப்பும் வெள்ளைத் தலைமுடியுடன் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தோன்றினார் அஜித். இந்த படமும் பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்துக்கு முன்புதான் அஜித் தன்னுடைய ரசிகர் மன்றங்களைக் கலைத்திருந்தார்.

தன் பெயரில் இயங்கிவந்த ரசிகர் மன்றங்களை சிலர் தவறான காரணங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்து எந்த வெகுஜன நட்சத்திரமும் செய்யத் துணியாத விஷயத்தைச் செய்தார். அதற்கு முன்பு தமிழக முதல்வருக்கு நிகழ்த்தப்பட்ட பாராட்டு விழாவில் மேடையில் முதல்வர் முன்னிலையில் அவ்விழா ஏற்பாட்டாளர்களை விமர்சித்துப் பேசினார். இது அவருக்குப் பல தரப்புகளிலிருந்து பாராட்டுகளையும் சில எதிர்ப்புகளையும் பெற்றுக்கொடுத்தது.

முதல்வரை நேரில் சந்தித்து விளக்கம் கொடுக்க வேண்டியதானது. இது தவிர வேறுசில சர்ச்சைகளிலும் தேவையின்றி அவருடைய பெயர் இழுக்கப்பட்டது. இதுபோன்ற தருணங்களில் அஜித் ரசிகர்கள் அவருக்கு உறுதுணையாக இருந்தனர். அவருக்காக எதை வேண்டுமானாலும் எதிர்கொள்ளத் தயாராக இருந்தனர். ஆனால் அஜித் தன் ரசிகர் படையை ஒரு இம்மியளவும் தவறாகப் பயன்படுத்தவில்லை.

தனக்கு ஆபத்து நேர்ந்துவிட்டதாகவோ, தான் யாராலோ டார்கெட் செய்யப்படுவதாகவோ அவர் எங்காவது பேசியிருந்தார். ரசிகர்கள் உணர்ச்சிவயப்பட்டு ஏதேனும் தவறு செய்ய முயன்றிருக்கக்கூடும். ஆனால் இதுபோன்ற தருணங்களில் அஜித் பொறுப்புடன் நடந்துகொண்டார். இவை எதைப் பற்றியும் அவர் பொதுவில் பேசாமல் அமைதி காத்தார். ரசிகர்களும் பொறுமையுடன் காத்திருந்தனர்.

அரிதாகிவிட்ட ‘தலை’காட்டல்

இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு அஜித் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை அறவே தவிர்த்தார் அஜித். தன்னுடைய திரைப்படங்கள் தொடர்பான விழாக்களிலும் அவர் பங்கேற்பதில்லை. படங்களை ப்ரமோட் செய்வதில்லை. ஊடகங்களைச் சந்திப்பதில்லை.

தன்னைப் பற்றிய சர்ச்சைகள், விமர்சனங்கள், சமூக ஊடகங்களில் நிகழ்த்தப்படும் ட்ரோல்கள் எதற்கும் பதில் கொடுப்பதில்லை. ரசிகர்கள் தன் படங்களைப் பார்த்து அந்தப் படங்கள் பிடித்திருந்தால் அவற்றை ரசிக்கட்டும். மற்ற நேரங்களில் தங்களது வேலையையும் குடும்பத்தையும் கவனிக்கட்டும் என்று பல முறை சொல்லிவிட்டார். அதற்கு வழிவகுக்கும் வகையிலேயே நடந்துகொள்ளவும் செய்கிறார்.

ஆனாலும், அவருடைய ரசிகர்கள் அவரை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள். ’தல’ மீதான தம்முடைய அன்பை வெளிப்படுத்துவதற்கான எந்த வாய்ப்பையும் அவர்கள் நழுவவிடுவதில்லை. சமூக ஊடகங்களில் அஜித்தை அல்லது அவருடைய திரைப்படங்களை ட்ரால் செய்வோருக்கு பதிலடி கொடுக்கிறார்கள்.

சில ரசிகர்கள் அஜித்தையோ அவருடைய படங்களையோ விமர்சிப்பவர்களை கண்ணியம் கடந்து இழிவுபடுத்துகிறார்கள். மிக அரிதாகப் பொது சமூகத்துடன் உரையாடும் அஜித், தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலோ விளக்கமோ தருவதைத் தவிர்க்கும் அஜித், தமது ரசிகர்களால் மற்றவர்களுக்கு இன்னல் வரும் சூழல் ஏற்படும்போது அமைதி காப்பதில்லை. தன்னை விமர்சிப்பவர்களை இழிவுபடுத்தும் ரசிகர்களின் போக்கைக் கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

அதேபோல் குறிப்பிட்ட அரசியல் கட்சியில் அஜித் ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் இணையப் போவதாகச் செய்திவந்தபோது அரசியல் செயல்பாடுகளுக்குத் தன் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்று தெளிவாக விளக்கி ஒரு அறிக்கை வெளியிட்டார். அடுத்ததாக அஜித் நடித்துவரும் ’வலிமை’ படம் குறித்த தகவல்கள் எதுவும் வராததால் நொந்துபோன ரசிகர்கள் சிலர் ‘வலிமை’ அப்டேட் கேட்டு மற்ற பிரபலங்களைத் தொந்தரவு செய்ததை அறிந்தவுடன் அந்தப் போக்கைக் கண்டிக்கும் வகையில் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

இவற்றால் எல்லாம் ரசிகர்கள் கோபமடையக்கூடும் என்று அஞ்சாமல் ரசிகர்கள் செய்வது தவறு என்று நினைத்தால் அதை உடனடியாக கண்டிப்பவராக இருக்கிறார் அஜித். இதையெல்லாம் தாண்டியும் அவருடைய ரசிகர் படை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்றால் அஜித்தை ரசிகர்கள் சரியாகப் புரிந்துகொண்டிருப்பதுதான் காரணம்.

தன்னுடைய வளர்ச்சிக்கோ சுயநலத்துக்கோ ரசிகர்களைப் பயன்படுத்தாதவராக அஜித் எப்போதும் இருந்துவந்திருக்கிறார். ரசிகர் மன்றத்தைக் கலைத்தது முதல் தவறு செய்யும் தன் பெயரைத் தவறாகப் பயன்படுத்தும் ரசிகர்களுக்கான கண்டன அறிக்கைகள் வரை அவருடைய அஜித்தின் செயல்பாடுகள் இதை நிரூபித்துள்ளன.

பரஸ்பர அன்பும் மரியாதையும்

அதேநேரம் ரசிகர்கள் தன் மீது வைத்திருக்கும் பேரன்பை மதித்து பதிலுக்கு அன்பைக் காட்டவும் அஜித் தயங்கியதில்லை. பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியே வரும்போது அவரை ரசிகர்கள் சூழ்ந்துகொள்கிறார்கள். அப்போதெல்லாம் எரிச்சலைக் காண்பிக்காமல் அனைவரிடமும் சிரித்துப் பேசி எத்தனை செல்ஃபிக்களுக்கு வேண்டுமானாலும் பொறுமையாக போஸ் கொடுக்கிறார் அஜித்.

ஆனால், கடந்த ஏப்ரல் 6 அன்று தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வாக்களிக்க வந்தபோது ஒரு ரசிகர் ஆர்வ மிகுதியில் கரோனா கட்டுப்பாடுகளை மீறி முகக்கவசம் அணியாமல் அஜித் அருகில் வந்து செல்ஃபி எடுக்க முயன்றபோது அந்த ரசிகரிடமிருந்து செல்போனைப் பறித்துக்கொண்டு சிறிது நேரம் கழித்து திருப்பிக்கொடுத்தார்.

மேலும் அப்போது வாக்குச் சாவடியில் அஜித்தை சுற்றிக் கூடிய கூட்டம் பல வகைகளில் அவருக்கும் மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியதாக இருந்தது. இதைத் தவிர்ப்பதற்காகவே அவசியம் ஏற்பட்டாலும் அதிக மக்கள் கூடும் பொது இடங்களுக்கு வருவதை அஜித் அறவே தவிர்க்கிறார்.

வாக்கு செலுத்தும் கடமையை நிறைவேற்றுவதற்குக்கூட அதிகாலையில் முதல் ஆளாக வந்துவிட்டார். இவ்வளவு எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டாலும் ஆர்வமிகுதியில் ஆழ்ந்துவிட்ட சில ரசிகர்களின் செயல்பாடுகளால் தவிர்க்கப்பட வேண்டிய சம்பவங்கள் நடந்துவிடுகின்றன.

ரசிகர்கள் தரக்கூடிய பிறந்த நாள் பரிசு

ரசிகர்களின் நலன் விரும்புவது. அவர்கள் மீது அன்பும அக்கறையும் செலுத்துவது. அவர்கள் திரைப்படங்களில் மூழ்கி இருக்காமல் தம் குடும்பத்தையும் தொழில் வாழ்க்கையையும் கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்துவது, அவர்கள் தன் சுயநல நோக்கங்களுக்குப் பயன்படுத்தாமல் இருப்பது, பொறுப்புள்ள பிரபலமாக நடந்துகொள்வது எனப் பல வகைகளில் ரசிகர்களை நல்ல பாதையில் வழிநடத்துகிறார் அஜித்.

ரசிகர்களும் இதைப் புரிந்துகொண்டதால்தான் ’தல’யைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள். ஆனால் அவர்கள் சமூக ஊடகங்களில் விமர்சகர்களை இழிவுபடுத்துவது, அஜித்தைப் பார்க்க நேர்ந்தால் கூட்ட நெரிசலை ஏற்படுத்தி அவருக்கு மற்றவர்களுக்கும் இடையூறு விளைவிப்பது போன்றவற்றைத் தவிர்த்து இன்னும் பொறுப்பு மிக்க நபர்களாக நடந்துகொள்வது அஜித்தை மேலும் மகிழ்விக்கும்.

ரசிகர்கள் சிலரின் தவறுகளால் அஜித்தும் அவருடைய ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் அவப்பெயர் ஏற்படாமல் தவிர்க்கப்படும். அஜித்தின் 50ஆம் பிறந்த நாளில் அவருடைய மனதைப் புண்படச் செய்யும் எந்த விஷயத்தையும் செய்யமாட்டோம் என்றும், எந்த நிலையிலும் பொறுப்பான குடிமக்களாக நடந்துகொண்டு அவரை மகிழ்விப்போம் என்றும் அஜித் ரசிகர்கள் அனைவரும் உறுதி ஏற்றார்கள் என்றால் அது அஜித்துக்கு ஆகச் சிறந்த பிறந்த நாள் பரிசாக இருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

37 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்